search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "kerala Temples"

  கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், திருவார்ப்பு எனும் ஊரில் பசி தாங்காத கிருஷ்ணர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  தல வரலாறு :

  பன்னிரண்டு ஆண்டு வனவாச காலத்தின் போது வழிபடுவதற்காக, தனது உருவச் சிலை ஒன்றை பாண்டவர்களுக்கு, கிருஷ்ணர் கொடுத்திருந்தார். பாண்டவர்களும் தங்களது வனவாசக் காலம் முழுவதும் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.

  அவர்கள் வனவாசம் முடிந்து, நாட்டிற்குத் திரும்ப இருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள், அந்தக் கிருஷ்ணர் சிலையைத் தங்கள் வழிபாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி பாண்டவர்களிடம் கேட்டனர். பாண்டவர்களும், அச்சிலையை அவர்களிடம் கொடுத்தனர்.

  சிலையைப் பெற்றுக் கொண்ட சேர்தலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள், அதனை ஓரிடத்தில் நிறுவி வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், அவர்களால் அந்தச் சிலையைத் தொடர்ந்து வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர்கள் அந்தச் சிலையைக் கடலில் போட்டுவிட்டனர்.

  நீண்ட காலத்திற்குப் பின்பு முனிவர் ஒருவர், அந்தப் பகுதியின் வழியாகப் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகு, ஓரிடத்தில் நகராமல் நின்றது. திடீரென்று கடல் நீர் வற்றியதுடன், கிருஷ்ணர் சிலை ஒன்று தென்பட்டது. முனிவர் சிலையை எடுத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி புறப்பட்டார். ஆனால் படகு மேற்கு நோக்கிச் செல்லாமல், தானாகவே கிழக்குப் பகுதியில் உள்ள குன்னம், பள்ளிக்கரா வழியா பயணித்து, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை அடைந்து நின்றது.

  படகில் இருந்து இறங்கிய முனிவர், அங்கு சிலை எதுவும் நிறுவப்படாமல் இருந்த கோவில் ஒன்றைக் கண்டார். அங்கு அச்சிலையை நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

  கோவில் அமைப்பு :

  கடற்கரைப் பகுதியில் உள்ள மீனாட்சி ஆற்றின் கரை அருகில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு கருவறையில் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்கிறார். இச்சிலையின் முன்புறத்தில் இருக்கும் வலது கையில் உணவு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் இரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், பகவதி, கணபதி, சுப்பிரமணியர் மற்றும் யட்சி போன்றவர்களுக்கான சன்னிதிகளும் உள்ளன.

  கம்சனைக் கொன்று விட்டு, மிகுந்த கோபத்துடனும், அதிகப் பசியுடனும் இருந்த கிருஷ்ணர் தோற்றமாக இச்சிலை கருதப்படுகிறது. எனவே ஆலயத்தில் அதிகாலை வேளையில், மூலவருக்கு அபிஷேகம் முடிந்தவுடன் முதலில் மூலவரின் தலையை உலர்த்தி அவருடைய கோபம் குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, அவரது பசியைத் தீர்க்கும் வகையில் அவருக்கு உசா பாயசம் எனும் உணவு படைக்கப்படுகிறது. அதன் பிறகே, உடல் பகுதி உலர்த்தப்படுகிறது.

  இந்தக் கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் பசியைத் தாங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே அதிகாலை வேளையில் கோவில் திறக்கப்படும் போது, அர்ச்சகர் கோடரி ஒன்றை வைத்துக் கொண்டே கோவில் நடையைத் திறக்கிறார். கோவில் பூட்டைத் திறக்கத் தாமதம் ஏற்பட்டால், அவர் கையில் வைத்திருக்கும் கோடாரியைக் கொண்டு கதவை உடனடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பசியுடன் இருக்கும் கிருஷ்ணருக்குக் கால தாமதமின்றி, உணவு படைத்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்பதற்காக, இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

  இந்து சமயக் கோவில்கள் அனைத்தும் சூரிய கிரகண வேளைகளில் மூடப்பட்டு விடும். அதே போன்று, இக்கோவிலும் ஒரு முறை சூரிய கிரகணத்தின் போது மூடப்பட்டது. கிரகணக் காலம் முடிந்த பிறகுக் கதவைத் திறந்திருக்கின்றனர். அப்போது மூலவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்து போயிருந்தது. அதனைக் கண்ட அர்ச்சகரும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிசங்கரர், இங்கிருக்கும் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்றும், இனி கிரகண வேளைகளில் கோவிலை அடைக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார். அன்றில் இருந்து கிரகணத்தின் போது இத்தலம் மூடப்படுவது இல்லை.

  இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிடும் பக்தர்களுக்கு, அவர்களது வாழ்நாளில் பசிப் பிணி ஏற்படாது என்கிறார்கள். இதற்காகவே, இக்கோவிலில் இரவு வேளையில் கோவிலின் நடைசாத்துவதற்கு முன்பாகப் அர்ச்சகர், ‘இங்கு யாராவது பசியோடு இருக்கிறீர்களா?’ எனக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

  இந்த ஆலயம் தினமும் அதிகாலை 2 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். கேரளாவில் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும் ஒரே ஆலயம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

  அமைவிடம் :

  கேரள மாநிலம், கோட்டயம் நகரில் இருந்து வடமேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவார்ப்பு என்னும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. கோட்டயத்தில் இருந்து அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.
  கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த அம்மனுக்குக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப் போராட்டங்கள், மன நோய்கள் அகன்று மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு நோயற்ற வாழ்வு, கல்வியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்ற சிறப்புப் பலன்களும், இந்த அன்னையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கிடைக்கும்.

  தல வரலாறு :

  பூமியில் வாழ்ந்த வந்த மக்களையும் முனிவர்களையும் நீலன் என்னும் அசுரன் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமையான செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட முனிவர்கள், சிவபெருமானை சந்தித்தனர். அவரிடம், தங்களை அசுரனிடம் இருந்து காப்பாற்றி அருளும்படி வேண்டினர்.

  தட்சனின் வேள்வியை நிறுத்துவதற்காக, சிவபெருமானின் சடைமுடியில் இருந்து தோன்றியவள் பத்ரகாளி. அவளை மீண்டும் அழைத்த சிவபெருமான், நீலன் அசுரனை அழித்து, முனிவர்களையும், பூலோக மக்களையும் காத்தருளும்படி கூறினார். சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்ட பத்ரகாளி, அங்கிருந்து பூலோகம் சென்று நீலனையும், அவனுக்கு துணையாக இருந்த அசுரப் படைகளையும் அழித்தாள்.

  பின்னர் மன அமைதியை விரும்பிய பத்ரகாளி, ஓரிடத்தில் அழகிய வயல்வெளி களாக இருந்த ஊரின் நடுவில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். ஆனால் அறுவடைக் காலங்களில், அந்த இடத்தில் அரிசி குத்தும் சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் அவளுடைய தவத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தால், பத்ரகாளி அங்கிருந்து கிழக்குப் பக்கமாக சென்று, ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள்.

  அன்னை அங்கு குடியிருப்பதை அறிந்து கொண்ட பக்தர்கள், அவளுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி ஒரு நம்பூதிரியை அழைத்து, அம்மனுக்கு கோவில் கட்ட சரியான இடத்தை தேர்வு செய்து தரும்படி வேண்டினர். அந்த நம்பூதிரியும், பிரசன்னம் என்னும் ஜோதிட ரீதியான வழிமுறையை பின்பற்றி, அம்மனுக்கு கோவில் அமைப்பதற்கு சரியான இடம் எது என்று தேடினார். அந்த தேடுதலின் முடிவில், ஆலமரத்தின் அடியிலேயே அம்மனுக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவே அம்மனுக்கு சிறந்த இடம் என்று நம்பூதிரி கூறினார். அதன்படி அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்லப்படுகிறது.

  இந்தப் பகுதியில் வசித்து வந்த வேதியர்கள் பலர், சோகனாசினி (பாரதப்புழா) ஆற்றின் கரையில் அதிக அளவில் யாகங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் பகுதிக்கு ‘யாகக் கரை’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் மருவி, தற்போது ‘யாக்கரை’ என்று மாற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இங்கு வசித்த வேதியர்கள், ஆற்றின் கிழக்கு பகுதியில் உள்ள கரையை, மந்திரங்கள் சொல்லும் இடமாகவும், சமையல் செய்யக்கூடிய மடப்பள்ளியாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் ‘மடப்பள்ளி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதி, தற்போது பேச்சு வழக்கில் ‘மணப்புள்ளி’ என்று மாறிவிட்டதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

  அம்மன் முதலில் இருந்த இடம் ‘படிஞ்சாரை யாக்கரை’ என்றும், பின்னர் கோவில் கொண்ட இடம் ‘கிழக்கு யாக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது. மணப்புள்ளி பகவதி கோவில், மாட்டப்பிள்ளி பத்ரகாளி மணா என்னும் கேரள அந்தணக் குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. பின்னர் இக்கோவிலின் நிர்வாகம் மலபார் கோவில்கள் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

  ஆலய அமைப்பு :

  இக்கோவிலின் கருவறையில் உள்ள பகவதியம்மன், கருப்பு நிறத் தோற்றத்தில் காணப்படுகிறாள். மூன்று கண்கள், நான்கு கோரைப்பற்கள் கொண்டு அருளும் இந்த அன்னை, தன்னுடைய நான்கு கரங்களில், சூலம், கபாலம், வாள், கேடயம் போன்றவற்றைத் தாங்கி, வடக்கு திசையை பார்த்தபடி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி, கால பைரவர் மற்றும் சாஸ்தா ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

  இந்த ஆலயத்தின் தெற்குப் பகுதியில் அழகிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளத்தில் அசுரர்களை அழிப்பதற்காக, பகவதியம்மன் பயன்படுத்திய வாள் ஒன்று இருப்பதாக ஐதீகம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டால் எதிரிகள் பயம் விலகும் என்கிறார்கள்.

  இந்தத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு, சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. சித்திரை மாதம் முதல் நாளில் நடைபெறும் விசுத் திருநாள், ஆவணி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் நடைபெறும் ஓணம் திருநாள் போன்ற சிறப்பு நாட்களில், இந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.

  இங்கிருக்கும் அம்மனுக்குச் சிவபெரு மானைப் போல் மூன்றாவது கண் இருப்பதால், துன்பங்களால் துவண்டு போய் இருப்பவர்களும், பிறரால் துன்பங்களை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால், அந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பலவும் நடைபெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

  குருவாயூரில் கிருஷ்ணருக்கு செய்யப்படும் சந்தன அபிஷேகம், சபரிமலையில் ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் போன்றவை சிறப்புக்குரியவை. அதே போல மணப்புள்ளி பகவதியம்மனுக்கு கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இது இங்கு மிகவும் விசேஷமான அபிஷேகமாகும். கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப்போராட்டங்கள், மன நோய்கள் போன்றவை நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அபிஷேகத்தைச் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  வேலைத் திருவிழா:

  இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், மாசி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமையில், ‘கன்யர்’ என்னும் கொடியேற்றத்துடன், ஆண்டுத் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 14-வது நாளில் நடைபெறும் ‘வேலைத் திருவிழா’ என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.

  இந்த வேலைத் திருவிழாவின் போது, அம்மன் பக்தர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவர் ஆலயத்தின் பின்புறம் உள்ள குளத்தில் இறங்கி, அசுரனை அம்மன் அழிக்க பயன்படுத்திய வாளை எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபாடு செய்வார். இந்த வாள் எடுத்து வரும் நிகழ்வை ‘வெளிச்சப்பாடு திருவிழா’ என்கிறார்கள்.

  வேலைத் திருவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வை “வேல ஊட்டு” என்கின்றனர். விழாவில் 15 யானைகள் அணி வகுத்து நிற்கின்றன. பாண்டி, பஞ்சாரி மேளம், பஞ்சவாத்தியம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன.

  அசுரனை அழித்து விட்டு, கோபத் தோற்றத்தில் இருக்கும் அம்மனை, அமைதிப்படுத்தும் விதமாக, அம்மனுக்கு முழுமையாகக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இப்படிச் செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து, பக்தர்களுக்குப் பல்வேறு நற்பலன்களை வழங்குவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ் வேளையில், அம்மனுக்கு “கடும் மதுரா பாயாசம்” படைக்கப் பெற்று பக்தர் களுக்கு வழங்கப்படுகிறது.

  இந்த ஆலயமானது காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

  அமைவிடம் :

  கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது யாக்கரை. பாலக்காடு நகரில் இருந்து யாக்கரை செல்வதற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவாள். உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி.

  ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்தப் பகுதி ‘மலையாளம்’ என்று அழைக்கப்பட்டது. அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை ‘அந்தன் காடு’ என்று அழைத்தனர்.

  உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை அவர் செய்து கொண்டிருந்தார்.

  முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, “இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக. இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்” என்று கூறி மறைந்தாள்.

  தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.

  நாளடைவில் அந்த வனப் பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்குப் பின்னர், காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்தப் பகுதி ‘பழஞ்சிறை’ என்று அழைக்கப்பட்டது.

  ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்தப் பகுதியில், அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு, இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால், இந்த அன்னையை ‘பழஞ்சிறை தேவி’ என்றே பெயரிட்டு அழைத்தனர். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக, சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக, இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

  இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

  இந்த ஆலயத்தில் பங்குனி மாத இறுதியில் திருவிழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தைப் போல, இந்த ஆலயத்திலும் பொங்கல் வைபம் என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.  இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி ஆலயத்தில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது ‘கன்னியர் பூஜை’ என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறுவயது தோற்றத்தில் இருப்பது போல, பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில், பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக, சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.

  அதே போல் இந்த ஆலயத்தில் நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார். ஆலயத்தின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்நோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

  பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும். பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு ‘பஞ்சபூத பொங்கல்’ என்று பெயர்.

  நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ‘சண்டி ஹோமம்’ நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும்.

  இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது.

  தோற்றப்பாட்டு


  அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும். விழாவில் ஒவ்வொரு நாளும், சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் ‘தோற்றப்பாட்டு’ என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்தப் பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைப் பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இந்தப் பாடலைக் கேட்டாலே, அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  அமைவிடம்

  திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் அமைந்துள்ளது, பழஞ்சிறை தேவி கோவில்.
  ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது.
  ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது. திருக்கூர் திருத்தலமானது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது.

  தல வரலாறு :

  மாடு மேய்க்கும் பணியைச் செய்து கொண்டிருந்த ஒருவன், அந்த ஊரில் இருந்த நம்பூதிரி ஒருவரின் மாடுகளைத் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதும், மேய்ச்சலுக்குப் பின்பு மாலையில் அவைகளைத் திரும்பக் கொண்டு வந்து ஒப்படைப்பதுமாக இருந்தான்.

  ஒருநாள், அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில், ஒரு பசு மட்டும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். அந்தப் பசு அங்கிருந்த மலைப் பகுதிக்கு வழி தவறிச் சென்றிருக்கும் என்று நினைத்த அந்தப் பணியாளன், மலைப்பகுதிக்குச் சென்றான். அந்த மலைப்பகுதியில் ஒரு குகை காணப்பட்டது. அந்த குகைக்குள் சென்ற பணியாளன், அங்கு பசு இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.

  பசு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த பணியாளன், அந்த பசுவை மலையில் இருந்து கீழே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, அதன் அருகே சென்றான். அப்போது பசு மாயமாக மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தான். அதே சமயம் பசு நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது. என்ன ஏதென்று அறியாமல் விழிபிதுங்கிய பணியாளன், ஓட்டமும், நடையுமாக மலையை விட்டு இறங்கினான். பின்னர் தான் மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்காக விட்டுச் சென்றிருந்த மற்ற மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்குள் திரும்பிச் சென்றான்.

  அங்கு மாடுகளின் உரிமையாளரான நம்பூதிரியிடம், பசு காணாமல் போனதில் இருந்து, மலையின் மேல் பகுதியில் அது மறைந்து, சிவலிங்கம் தோன்றியவரை சொல்லி முடித்தான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நம்பூதிரி, தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு, பணியாளன் குறிப்பிட்ட அந்த மலைப் பகுதிக்குச் சென்றார்.

  மாடு மேய்ப்பவன் தெரிவித்தபடி, மலைக்குகையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். சுயம்பு வடிவில் தோன்றியிருந்த அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினர். அப்போது நம் பூதிரியின் மனக்கண்ணில், இங்குள்ள சுயம்பு லிங்கம், அக்னி தேவனால் வணங்கப்பட்டது என்பதும், இந்த லிங்கம், பஞ்சபூதங்களில் அக்னி வடிவிலானது என்பதும் தோன்றி மறைந்தது. இதையடுத்து அந்த அக்னி லிங்கத்திற்கு, நம்பூதிரி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து சில காலங்களில் கோவிலுக்கு தேவையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டார். திருப்பணிகளுக்குப் பிறகு இந்த ஆலயம் பொதுமக்கள் அனைவரும் வந்து வழிபட்டுச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது என்பதாக கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது.

  ஆலய அமைப்பு :


  உயரமான மலைப்பகுதியில், 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டு இயற்கையாக அமைந்த குகைப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. குகையின் தெற்கு திசையில், கடைசிப் பகுதியில் வடக்கு நோக்கிய கருவறையில், கிழக்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இதனால், இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள், சிவலிங்கத்தின் வலதுபுறத்தை மட்டுமே பார்வையிட்டு வழிபட முடியும். இங்கிருக்கும் இறைவன் ‘திருக்கூர் மகாதேவர்’ என்றழைக்கப் பெறுகிறார்.

  ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

  இறைவன் சன்னிதிக்கு மேற்குச் சுவரில் கணபதி சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தில் சாஸ்தா, அந்திமகாகாளன், பத்திரகாளி, பகவதி, சாமுண்டி உள்ளிட்ட தெய்வங்களும் வழிபாட்டிற்காக இடம் பெற்றிருக்கின்றன. கிழக்குப் பகுதியில் துவாரபாலகர்கள் இருக்கின்றனர். முகப்பு மண்டபத்தில் வைஷ்ணவ சைதன்ய மரபிலான சாலக்கிராமம் இடம் பெற்றிருக்கிறது.

  மலைப்பாறையின் மேல் பசுமையாக இருக்கும் குளம் ஒன்றும் அமைந்திருக்கிறது. 1966-ம் ஆண்டில் இருந்து கேரள மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இக்கோவில் இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  வழிபாடுகள் :

  சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 16 கற்தூண்களுடன் அமைக்கப்பெற்றிருக்கும் நமஸ்கார மண்டபத்தில் நவராத்திரி விழாவின் போது, சரஸ்வதி வழிபாடு மற்றும் சாக்கியார் கூத்து போன்றவை நடத்தப்பெறுகின்றன.

  இக்குகைக் கோவிலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மாலை நேர பூஜையின் போது, சிவலிங்கத்திற்கு 108 வில்வ இலைகள் சமர்ப்பிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

  கயிறு வழிபாடு :

  சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய் பாதிப்புடையவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, கயிறு வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு நலம் பெறலாம் என்கின்றனர். சுவாச நோய்ப் பாதிப்புடையவர்கள் சிலர் இங்கிருக்கும் இறைவன் உயரத்துக்குச் சமமாகத் தாம்புக்கயிறு வாங்கிக் கொடுத்து வழிபடுகின்றனர். சிலர், அவர்களது எடைக்குச் சமமான தாம்புக்கயிறைத் துலாபாரம் போன்று எடை போட்டு வழங்கி இறைவனை வழிபட்டுத் தங்கள் சுவாச நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். கயிறு வழிபாட்டில் பெறப்படும் கயிறுகள் அனைத்தும் கோவில் மண்டபத்தில் தொங்கவிடப் படுகின்றன.

  சிறுவர்களுக்குச் சுவாசக் கோளாறுகள் இருப்பின் கருக ஹோமம் அல்லது இறைவனுக்குப் பின்னால் எண்ணெய் விளக்கு இடுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

  அமைவிடம் :

  கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் திருக்கூர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
  கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  ஆதி பரம்பொருளான சிவபெருமான் படைத்து அருள்பாலித்து வரும் இந்த பூவுலகில், பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த கால கட்டத்தில் பாண்டிய மன்னர்களும், சோழ மன்னர்களும் போட்டிபோட்டு ஆலயங்களை அமைத்து வழிபட்டனர். சேரநாட்டிலும் சிவன் கோவில்கள் அமைந்தன. இருப்பினும் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், சக்தி சொரூபிணியான பரமேஸ்வரியின் 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். அதுவே கேரள தேசம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்றன.

  அவர் அமைத்த ஆலயங்களை, பிற்கால மன்னர்கள் அந்தந்த ஊர்களின் பெயரிலேயே திருப்பணி செய்து போற்றி பராமரித்தனர். இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயத்தில், உக்கிரமாக இருக்கும் ரத்த சாமுண்டி சத்தியத்தை நிலைநாட்டும் அன்னையாக அருள்பாலித்து வருகிறாள்.

  திருவிதாங்கூர் மன்னனின் படைவீரர்கள் களரிச் சண்டை பயிற்சி பெறும் களமாக விளங்கிய இடம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘களரிக்களம்’ என்று பெயர் வந்தது. பின்னர் அருவே மருவி ‘கரிக்ககம்’ என்றானதாக கூறப்படுகிறது.

  தல வரலாறு

  வேத விற்பன்னரும் தெய்வீக அருள்பெற்றவருமான ஒரு வேதிகர், பராசக்தியை தவறாது வழிபட்டு வந்தார். அவர் மந்திர தந்திரங்களை நன்கு கற்று அருள் பெற்றிருந்த ஒரு தந்திரியை தன் சீடனாக ஆக்கிக் கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் வழங்கினார். அந்த சீடரும், குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர்கள் இருவர் முன்பாகவும் அன்னை, சிறுமி வடிவத்தில் தோன்றினாள். பின்னர் அம்மனுடன் அவர்கள் தற்போது ஆலயம் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அங்கு சிறிய பச்சை பந்தல் அமைத்து அம்மனை குடியமர்த்தினர். சிறுமியாக வந்த அன்னை, அவர்களுக்கு அருளாசி வழங்கி மறைந்தாள்.

  இந்த ஆலயத்தில் ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது சிறப்புக்குரியதாகும். ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று வடிவங்களில் அன்னை வணங்கப்படுகிறாள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மன்கள் சுவர் சித்திரமாகவே இருக்கின்றனர். இந்த சன்னிதிகளில் சிலை வடிவம் கிடையாது. அருள் சுரப்பது சாமுண்டி தேவி, அநீதியை முறியடிப்பது ரத்த சாமுண்டிதேவி, ஐஸ்வரியம் வழங்குவது பால சாமுண்டிதேவி.

  முன் காலத்தில் இந்த ஆலய சாமுண்டி தேவி, வெள்ளி முகத்துடன், கலைமான் கொம்பில் வீற்றிருப்பது போன்று இருந்தது. பிரசன்னம் பார்த்ததில், பக்தர்களுக்கு தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய, விக்கிரக பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில், அதே அளவில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக பிரதிஷ்டை செய்தனர். அமைதியான வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் பக்தர்கள் இந்த அன்னையை வழிபட்டு வருகிறார்கள்.

  இந்த ஆலயத்தில் உள்ள சாமுண்டி தேவிக்கு ஒரு நேர பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. இது ‘தேவி நடை பூஜை’ என்று அழைக்கப்படுகிறது. கடும்பாயசம் தான் அன்னையின் விருப்பமான நைவேத்தியம். ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகம், புடவை சாத்துதல், பிடிபணம் வாருதல் ஆகியவை இந்த அம்மன் சன்னிதியில் நடைபெறும் வழிபாடுகளாகும். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படும்.

  நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற, தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை ரத்த புஷ்பார்ச்சனை செய்து வருவது நல்லது. நித்திரையில் வரும் கெட்ட கனவுகளைக் கண்டு பயப்படாமல் இருக்கவும், வேறு தோஷங்களில் இருந்து விடுபடவும் இந்த சன்னிதியில் கறுப்புக் கயிறு தரப்படுகிறது. இது தாயத்து எழுதி தேவி பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து தரப்படுவதாகும்.

  ரத்த சாமுண்டி தனி சன்னிதியில் சுவர் சித்திரமாக இருக்கிறாள். நீதியை நிலைநாட்ட இந்த சன்னிதியில் வந்து சத்தியம் செய்வது பழங்கால வழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சன்னிதியை திறந்து சத்தியம் செய்வதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்ஹார பூஜை’ ஆகும். இது பகையை அழிக்கும் பூஜை. சுப காரிய தடை நீங்கவும், கண் திருஷ்டி அகலவும், ஜாதக தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் சதித் திட்டங்கள் விலகவும் இங்கு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ரத்த சாமுண்டிக்கு கடும் பாயசம், சிவப்பு நிற பட்டு பாவாடை, தெற்றி பூ மாலை, கோழி, ஆடு தானம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆன பொருட்களை சமர்ப்பிக்கலாம்.

  சாந்த சொரூபிணியான பால சாமுண்டி தேவியும் தனி சன்னிதியில் சுவர் சித்திரமாகவே அருள்கிறாள். அம்மன் அழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறாள். இந்த அன்னையை குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். நோய் நீங்குவதற்கு நடையை திறந்து வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இதற்கும் சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த சன்னிதியில் உள்ள அன்னைக்கும் கடும் பாயசம், பட்டு, முல்லைப் பூ, பிச்சிப்பூக்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளியால் ஆன குழந்தை உருவங்கள், தொட்டில்கள், விளையாட்டுப் பொருட்களை இந்த அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த அன்னையின் தரிசனம் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

  இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்‌ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, குரு மந்திரம், நாகர்காவு, அன்னபூர்ணேஸ்வரி ஆகிய சன்னிதிகளும் உள்ளன.

  தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

  சத்தியம் காக்கும் சன்னிதி :

  சேர மன்னன் காலத்தில், ஒரு நாள் அரசியின் விலைஉயர்ந்த காதணி காணாமல் போய்விட்டது. அந்தப்புரத்தில் காவல் பணியில் ஈடுபட்ட ஒரு காவலாளி மீது சந்தேகம் கொண்டு, அவனைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

  அதே சமயத்தில் அந்த காவலாளியின் காதலியும், அரசியின் தோழியுமான ஒரு பெண் ஓடி வந்து, தன்னை தண்டிக்கும்படியும், காவலாளியை விடுவிக்கும்படியும் கூறினாள். காவலாளியோ, “இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்” என்றான்.

  மன்னனுக்கு வியப்பு ஏற்பட்டது. யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினான். அப்போது அமைச்சர்கள் ஒரு ஆலோசனை கூறினார்கள். அதன்படி காவலாளியையும், அவனது காதலியையும், கரிக்ககம் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்ய வைப்பது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். காவலாளியும், அவனது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர்.

  அப்போது அரசியின் துணியை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடி வந்தாள். அவர் “சலவைக்கு போட்ட துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். ரத்த சாமுண்டியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே ஓடி வந்தேன். காவலாளியும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள்” என்று கூறி காதணியைக் கொடுத்தாள்.

  மகிழ்ச்சியடைந்த மன்னன், காவலாளியையும், அவனது காதலியையும் விடுவித்தான். அதோடு அரசியின் காதணியை, ஆலயத்தில் உள்ள அன்னைக்கே சமர்ப்பித்தான்.

  கேரளத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை கரிக்ககம் சாமுண்டி தேவி சன்னிதானத்தில், பல சிக்கலான வழக்குகள், சத்தியம் செய்வதன் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கின்றன. குற்றம் சாட்டியவரும், குற்றவாளியும் ஆலய குளத்தில் நீராடி சாமுண்டி அம்மன் முன் காணிக்கை செலுத்தி விளக்கேற்றி, தீபச் சுடரின் மேல் சத்தியம் செய்ய வேண்டும். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்துவிடும் என்று அனைவரும் நம்புவதால் எவரும் பொய் சத்தியம் செய்வதில்லை.

  இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

  அமைவிடம்  :

  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் கரிக்ககம் சாமுண்டி கோவில் அமைந்திருக்கிறது.
  பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு.
  மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுபவர் பரசுராமர். இவர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம் இன்றைய கேரளா. இப்படி இறைவனின் ஆட்சியும் இயற்கையின் ஆட்சியும் நடப்பதால் தான், கேரளாவிற்கு ‘கடவுளின் தேசம்’ என்றும் பெயர் வந்தது. கேரளாவில் உள்ள அம்மன் கோவில்களுக்கென்று தனியாக பெயர்கள் இல்லை. அனைத்து அம்மனுமே ஊரின் பெயரோடு இணைத்து ‘பகவதி அம்மன்’ என்றே அறியப்படுகிறார்கள்.

  பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பொங்கல் திருவிழா, இந்த ஆலயத்தின் சிறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு, திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் கூடி பொங்கல் வைப்பார்கள்.

  இந்த விழாவானது, பல லட்சம் பேர் அதுவும் பெண்களால் மட்டுமே வைக்கப்படும் பொங்கல் விழாவாகும். அதோடு இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததாக, இந்த கோவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதே போல் 2009-ம் ஆண்டு 30 லட்சம் பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தது, முந்தைய சாதனையை முறியடித்தது. இப்படி ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

  மதுரையை எரித்த பிறகு, கண்ணகி கேரள தேசம் சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு சென்ற கண்ணகி தேவியை, மன அமைதி அடையச் செய்வதற்காக பெண்கள் பலரும் அவளுக்கு பொங்கல் வைத்து நைவேத்தியம் படைப்பதாக ஐதீகம். மகிஷாசுரனை வதம் செய்த அம்பாள், பக்தர்களின் முன்பாக காட்சி தந்தாள். அவளை வரவேற்கும் விதமாக, பெண்கள் பலரும் பொங்கல் வைத்தனர். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது என்று மற்றொரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.

  ஆலய வரலாறு :

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதற்கான ஆதி கதையை தெரிந்து கொள்வோம். சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகி தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல என்பதை, பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில், ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே இங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

  தவிர ஆற்றுக்கால் பகவதி அம்மன் தோன்றியதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள். அந்த சிறுமியைக் கண்ட பக்தர், அம்மனே சிறுமியின் உருவில் வந்திருப்பதாக எண்ணினார்.

  அதே நேரம் பக்தரைப் பார்த்து அந்த சிறுமி, “ஐயா! என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?” என்று கேட்டாள்.

  ஆனால் அன்னையின் உருவமாக அந்த சிறுமியைக் கண்ட பக்தருக்கு அவளை பிரிய மனம் வரவில்லை. எனவே அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க நினைத்தார். அதை அந்த சிறுமியிடம் அவர் சொல்ல முற்பட்டபோது, சிறுமி மறைந்தாள். சிறுமி வடிவில் வந்தது அம்பாள் தான் என்பதை எண்ணி, பக்தர் மனம் மகிழ்ந்தார்.

  அன்று இரவு பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, “தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்” என்றாள்.

  மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். தொடர்ந்து அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அம்மனை வழிபட்டார். அதுவே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயமாக எழுச்சியுற்றதாக கோவில் வரலாறு சொல்கிறது.

  கோவில் அமைப்பு:

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் இருக்கும் ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

  ஆலய நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலய வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.

  சிறுமிகளின் ஊர்வலம்:

  இந்த ஆலயத்தின் பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில், சிறுமிகள் பலர் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்திற்கு, குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபட்டு திரும்புவார்கள். இதை ‘தாலிப்பொலி’ என்று கூறுகிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனுக்குரிய பூஜை பொருட்களை வைத்து, தீபத்தையும் ஏற்றி வைத்து கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் வருவார்கள். இந்த வழிபாட்டால், சிறுமிகளுக்கு நோய் நொடி வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

  சிறுவர்களின் குத்தியோட்டம் :

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில், சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்புமிக்கதாகும். அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தினியுடன் ேபாரில் கலந்துெகாண்டு காயமடைந்த படைவீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்று, கோவிலில் தனி இடத்தில் 7 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். அந்த 7 நாட்களில் தினமும் நீராடி அம்மனுக்கு சன்னிதியில் ஈர உடையுடன் நின்றபடி 1008 நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்வதால், சிறுவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.

  இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
   
  அமைவிடம் :

  திருவனந்தபுரத்தில் இருந்து கிழக்கு கோட்டை சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றுக்கால் திருத்தலம் அமைந்துள்ளது. 
  கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது
  கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அம்பாடத்து மாளிகை ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஐயப்பனுக்குச் சிலை எதுவுமில்லை.வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை, ஒரு கல் ஆகியவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.

  தல வரலாறு


  அம்பாடத்து மாளிகை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில், அவருக்குச் சபரிமலை சென்று வருவது கடினமாகிப் போனது. ஒருமுறை அவர் சபரி மலைக்குச் சென்ற போது, மலைப் பாதையில் செல்வது சிரமமாக இருந்தது. அதனால் அவ்வப்போது ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்துச் சென்று கொண்டிருந்தார்.

  அப்படி ஓரிடத்தில் அவர் தங்கியிருந்த போது, ஒரு வயதானவர் அங்கு வந்து, வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றைக் கொடுத்து, சிறிது நேரத்தில் திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த முதியவர் வரவில்லை. அதனால் அந்தப் பொருட்களுடன் சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டு விட்டு வீடு திரும்பினார்.

  அப்போது அவரது வீட்டுக்கு, சபரிமலையில் சந்தித்த முதியவர் வந்து, தான் கொடுத்த மூன்று பொருட்களையும் வைத்துக் கொள்ளும்படியும், அப்பொருட்களையே ஐயப்பனாக நினைத்து வழி படும்படியும் சொல்லிவிட்டு மறைந்தார். அதன் பிறகே, அந்தப் பொருட்களைத் தன்னிடம் கொடுத்துச் சென்றவர் இறையம்சம் பொருந்தியவர் என்பதை அவர் உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கே சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அந்த மூன்று பொருட்களையும் வழிபாட்டுக்காக வைத்து, அவற்றையே ஐயப்பனாக நினைத்து வழிபடத் தொடங்கினார் என்று ஆலயம் அமைந்த வரலாற்றைச் சொல்கின்றனர்.

  கோவில் அமைப்பு

  இந்த ஆலய கருவறையில் ஐயப்பன் சிலை எதுவுமில்லை. வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை மற்றும் கல் மட்டுமே வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மாளிகப்புறத்து அம்மனுக்கும் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டுக்காகத் தினமும் திறக்கப்படுவதில்லை. சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரலின்படியே ஆலயம் திறக்கப்படுகிறது.

  ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்களிலும், கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும், ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாகக் கருதப்படும் பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திரம் நாளிலும் ஆலயம் திறந்திருக்கும். அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

  இங்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும், தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோசத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபாட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும், இங்கு பெண்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப் படுகின்றனர்.

  அமைவிடம்

  எர்ணாகுளம் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது காலடி. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சப்புரா பகுதிக்கு செல்ல வேண்டும். எர்ணாகுளம் மற்றும் காலடியிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
  கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) கோவில்.
  கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) ஆலயம்.

  தல வரலாறு :

  சாம்பரன் எனும் முனிவர் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில், நிலா (பாரதப்புழா) ஆற்றின் நடுவில் இருந்த சிறிய தீவு தென்பட்டது. அந்தத் தீவுக்குச் சென்ற முனிவருக்கு, அதன் அழகும், அமைதியும் பிடித்துப் போனது. முனிவர் அந்த இடத்திலேயே தியானத்தில் அமர்ந்தார்.

  நீண்ட கால தியானத்தில் இருந்த அவரின் முன்பு ஒரு ஒளி வட்டம் தோன்றியது. உடனே அவர், இறைவன் விஷ்ணு தனக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று நினைத்து, இறைவன் விஷ்ணுவை நினைத்துத் தியானத்தில் ஆழ்ந்தார். ஆனால், அவர் நினைத்தது போல், அவருக்கு விஷ்ணு காட்சியளிக்கவில்லை. அவ்விடத்தில் ஒளி வட்டம் அப்படியே இருந்து கொண்டிருந்தது.

  அதன் பிறகு, இறைவன் சிவபெருமான் தமக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று முனிவர் நினைத்தார். அதனால் சிவபெருமானை நினைத்துத் தியானித்தார். ஆனால் சிவபெருமானும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. அதே நேரம் ஒளி வட்டமும் மறையாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், துர்க்கா என்று முனிவர், ஒவ்வொரு தெய்வமாகத் தியானித்தார். அவர் தியானித்த எவரும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ஒளி வட்டம் மட்டும் அப்படியே இருந்தது.

  தன் முன்னேத் தோன்றிய ஒளி வட்டத்தை, முனிவர் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அந்த ஒளி வட்டத்தினுள் சாஸ்தா, அவரது மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் இருப்பது தெரிந்தது. அதனைக் கண்ட முனிவர், சாஸ்தாவை வணங்கினார். அதன் பின்னர் சிறிது நேரத்தில், அந்த ஒளி வட்டம் மறைந்து போனது.

  பின்னர் முனிவர், ஆற்றங்கரையில் இருந்த குட்டிசேரி மணாவைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவரிடம், தான் ஆற்றின் நடுவில் இருந்த தீவில் கண்ட காட்சியைச் சொன்னார். அவ்விடத்தில் சாஸ்தாவுக்குக் கோவில் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்யும்படிச் சொல்லி, சாஸ்தா வழிபாட்டுக்கான விதிமுறைகளையும் அவருக்குச் சொல்லிச் சென்றார். இதையடுத்து நிலா ஆற்றின் நடுவிலிருந்த தீவில் ஆலயம் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

  ஆலய அமைப்பு :

  ஆற்றிற்குள் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில், சுயம்புவாக இருக்கும் சாஸ்தா தவிர்த்து, விஷ்ணு, கணபதி, சிவா, பிரபா, துர்க்கா, சத்யகன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, சத்யகன், துர்க்கா, பத்ரகாளி மற்றும் சிவபெருமான் ஆகியோருக்கான சன்னிதியும் உள்ளது. சாஸ்தாவிற்கு வழிபாடு செய்யப்படும் போது, இங்கிருக்கும் அனைத்துத் தெய்வங்களுக்கும் வழிபாடு செய்யப்படுகின்றன.

  இங்குள்ள இறைவனுக்கு சத்தச்சாதம், பனப் பாயசம், நெய் பாயசம் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இத்தல இறைவனுக்கு தூபம், தீபம் காட்டப்படுவதில்லை. வழிபாட்டு நேரத்தில் மணியும் அடிப்பதும் இல்லை.

  ஆலயத்திற்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைக் காலம் மற்றும் வெள்ளக் காலங்களில், இக்கோவிலைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து விடுகிறது. இக்காலங்களில் பூைஜ செய்பவர் மட்டும் படகில் சென்று வழிபாடு செய்து திரும்புகிறார்.

  இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும், தீராத நோயுடையவர்கள் வந்து வழிபட்டால், அவர்களது நோய் நீங்கி, நீண்ட வாழ்வைப் பெறுவர் என்பதும் இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், ஆலயம் வந்து வழிபடுபவர்களுக்கு, சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நல்ல பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.

  ஆலயம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற நாட்களில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை வேளையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  அமைவிடம் :

  கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், திரிப்பிரங்கோடு ஊராட்சியில் சாம்ராவட்டம் என்ற இடத்தில் ஆலயம் உள்ளது. திரூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்ல, திரூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
  ராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.
  ராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.

  தல வரலாறு :


  ராமனைப் பிரிய மனமில்லாமல் முதல் முறையாக காட்டிற்குச் சென்ற சீதை, இரண்டாவது முறை தன்னுடைய பிரியத்திற்குரிய ராமனாலேயே காட்டிற்கு அனுப்பப்பட்டாள். அப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்த அவள், அங்கிருந்த வான்மீகி ஆசிரமத்தை அடைந்தாள். அங்கு அவருக்கு லவன், குசன் என்று இரு மகன்கள் பிறக்கின்றனர். வான்மீகி முனிவர், அவர்களிருவருக்கும் வில்வித்தை உட்பட அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார். சிறு வயதிலேயே அவர்கள் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ச்சியடைகின்றனர்.

  வான்மீகி முனிவர் அச் சிறுவர்களுக்கு அயோத்தி அரசன் ராமன்தான் அவர்களின் தந்தை என்பதைச் சொல்லாமல், ராமன் கதையைப் பாடலாகச் சொல்லிக் கொடுக்கிறார். அச்சிறுவர்களும் வீணையை மீட்டியபடி ராமன் கதையை அவ்வப்போது பாடலாகப் பாடி மகிழ்வார்கள். ஒரு கட்டத்தில் ராமன், தன்னுடைய மனைவியையே காட்டிற்கு அனுப்பியவர் என்று அறிந்து அந்தச் சிறுவர்கள், ராமனை வெறுக்கிறார்கள்.

  இந்நிலையில் ராமன், அசுவமேத யாகத்திற்காக, உலகைச் சுற்றி வர பதினாறு குதிரைகளைத் தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கிறார். அந்தப் பதினாறு குதிரைகளும் அவைகளுக்கான குறிப்பிட்ட இலக்கைச் சுற்றித் திரும்பி வந்தவுடன், அவற்றை யாகத்தில் பலியிட்டு யாகத்தை நிறைவு செய்ய வேண்டும். ராமனால் அனுப்பப்பட்ட பதினாறு குதிரைகளில் ஒரு குதிரை மட்டும் திரும்பி வரவில்லை.

  அந்தக் குதிரையைச் சிறுவர்களான லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டி வைத்து விட்டனர். குதிரையுடன் பாதுகாப்புக்காக வந்த ராமனின் சகோதரன் சத்துருக்கனன் மற்றும் அவனுடன் வந்த படையினர், குதிரையை விடுவிக்கும்படி கேட்டும் அவர்கள் விடவில்லை. வில் வித்தையில் சிறந்து விளங்கிய அந்தச் சிறுவர்கள், ராமரின் பாதுகாப்பு படையினரால் வெல்லவும் முடியவில்லை.

  அதனைத் தொடர்ந்து, லட்சுமணன் அந்த இடத்திற்கு வந்து சிறுவர்களிடம் போரிட்டான். அவனாலும், சிறுவர்களிடம் இருந்து குதிரையை மீட்க முடியவில்லை. இறுதியாகக் குதிரையை மீட்க ராமனே அவ்விடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த சீதாதேவியை கண்ட ராமன், அவரை நெருங்கிச் சென்றார். ஆனால், சீதாதேவி அந்த இடத்திலேயேப் பூமிக்குள் சென்று மறையத் தொடங்கினார்.

  ராமன் அந்த இடத்திற்குச் சென்ற போது, அவருக்குச் சீதா தேவியின் தலையிலிருந்த சில முடிகள் மட்டுமே கையில் அகப்பட்டன என்றும், அந்த இடமே ‘சேடட்டின்காவு’ அல்லது ‘ஜடாயட்டக்காவு’ என்று அழைக்கப்படுகிறது.

  இந்த இடத்தில் அமைந்திருக்கும் கோவிலில் சீதாதேவி சப்தமாதர்களுடன் வீற்றிருக்கிறார். இந்தக் கோவிலே சீதாதேவியின் மூலக்கோவில் என்று சொல்லப்படுகிறது.

  பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியை ஆட்சி செய்த வீர கேரள வர்மா பழசிராஜா என்பவர், மூலக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாகச் சீதாதேவியுடன் லவன், குசன் ஆகியோரையும் சேர்த்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். அக்கோவிலேத் தற்போது புகழ் பெற்ற சீதாதேவி, லவன், குசன் கோவிலாக இருக்கிறது என்கிறது தல வரலாறு.  கோவில் அமைப்பு :

  புதிய கோவில் கருவறையில் சீதாதேவி கிழக்கு நோக்கிய நிலையிலும், லவன், குசன் இருவரும் மேற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் வேட்டக்கொரு மகன், கணபதி, சுப்பிரமணியன், ஐயப்பன் மற்றும் நாக தேவதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. சேடட்டின்காவு என்ற இடத்தில் அமைந்திருக்கும் சீதாதேவியின் மூலக்கோவிலில் சீதாதேவி, சப்தமாதர்கள், கணபதி, வீரபத்திரன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

  இவை தவிர, லவன், குசன் சிறுவர்களாக வளர்ந்த இடம் சிசுமலா என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் சசிமலா என்று பெயர் மாற்றம் பெற்ற இடம், லவன், குசன் விளையாடிய இடம், வான்மீகி ஆசிரமம் போன்ற ராமாயணத்துடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களாக அமைந்திருக்கின்றன.

  இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். சீதாதேவியின் மூலக்கோவில் (சேடட்டின்காவு மூலக்கோவில்) காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  வழிபாடும்.. பலனும்..

  இக்கோவிலில் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலங்களில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 18 முதல் 23 வரையிலான நாட்களில் ‘சுட்டு விளக்குத் திருவிழா’ எனப்படும் சிறப்புத் திருவிழா நடைபெறுகிறது.

  சீதாதேவி, லவன், குசன் கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. சீதாதேவிக்கு வெள்ளை அரிசிச் சாதம் மற்றும் பாயசமும், லவன், குசனுக்கு இனிப்பு அப்பமும் படைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இங்கு வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

  அமைவிடம் :


  கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில் இருக்கும் புல்பள்ளி என்னும் இடத்தில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோழிக்கோடு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுல்தான் பேட்டரி என்ற ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், மீனங்காடி என்ற இடத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு-மனந்தாவடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பனமரம் என்ற பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புல்பள்ளி இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.