search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pazhanchira devi temple"

    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த அம்மனுக்குக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப் போராட்டங்கள், மன நோய்கள் அகன்று மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு நோயற்ற வாழ்வு, கல்வியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்ற சிறப்புப் பலன்களும், இந்த அன்னையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கிடைக்கும்.

    தல வரலாறு :

    பூமியில் வாழ்ந்த வந்த மக்களையும் முனிவர்களையும் நீலன் என்னும் அசுரன் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமையான செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட முனிவர்கள், சிவபெருமானை சந்தித்தனர். அவரிடம், தங்களை அசுரனிடம் இருந்து காப்பாற்றி அருளும்படி வேண்டினர்.

    தட்சனின் வேள்வியை நிறுத்துவதற்காக, சிவபெருமானின் சடைமுடியில் இருந்து தோன்றியவள் பத்ரகாளி. அவளை மீண்டும் அழைத்த சிவபெருமான், நீலன் அசுரனை அழித்து, முனிவர்களையும், பூலோக மக்களையும் காத்தருளும்படி கூறினார். சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்ட பத்ரகாளி, அங்கிருந்து பூலோகம் சென்று நீலனையும், அவனுக்கு துணையாக இருந்த அசுரப் படைகளையும் அழித்தாள்.

    பின்னர் மன அமைதியை விரும்பிய பத்ரகாளி, ஓரிடத்தில் அழகிய வயல்வெளி களாக இருந்த ஊரின் நடுவில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். ஆனால் அறுவடைக் காலங்களில், அந்த இடத்தில் அரிசி குத்தும் சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் அவளுடைய தவத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தால், பத்ரகாளி அங்கிருந்து கிழக்குப் பக்கமாக சென்று, ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள்.

    அன்னை அங்கு குடியிருப்பதை அறிந்து கொண்ட பக்தர்கள், அவளுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி ஒரு நம்பூதிரியை அழைத்து, அம்மனுக்கு கோவில் கட்ட சரியான இடத்தை தேர்வு செய்து தரும்படி வேண்டினர். அந்த நம்பூதிரியும், பிரசன்னம் என்னும் ஜோதிட ரீதியான வழிமுறையை பின்பற்றி, அம்மனுக்கு கோவில் அமைப்பதற்கு சரியான இடம் எது என்று தேடினார். அந்த தேடுதலின் முடிவில், ஆலமரத்தின் அடியிலேயே அம்மனுக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவே அம்மனுக்கு சிறந்த இடம் என்று நம்பூதிரி கூறினார். அதன்படி அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்லப்படுகிறது.

    இந்தப் பகுதியில் வசித்து வந்த வேதியர்கள் பலர், சோகனாசினி (பாரதப்புழா) ஆற்றின் கரையில் அதிக அளவில் யாகங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் பகுதிக்கு ‘யாகக் கரை’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் மருவி, தற்போது ‘யாக்கரை’ என்று மாற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இங்கு வசித்த வேதியர்கள், ஆற்றின் கிழக்கு பகுதியில் உள்ள கரையை, மந்திரங்கள் சொல்லும் இடமாகவும், சமையல் செய்யக்கூடிய மடப்பள்ளியாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் ‘மடப்பள்ளி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதி, தற்போது பேச்சு வழக்கில் ‘மணப்புள்ளி’ என்று மாறிவிட்டதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

    அம்மன் முதலில் இருந்த இடம் ‘படிஞ்சாரை யாக்கரை’ என்றும், பின்னர் கோவில் கொண்ட இடம் ‘கிழக்கு யாக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது. மணப்புள்ளி பகவதி கோவில், மாட்டப்பிள்ளி பத்ரகாளி மணா என்னும் கேரள அந்தணக் குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. பின்னர் இக்கோவிலின் நிர்வாகம் மலபார் கோவில்கள் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

    ஆலய அமைப்பு :

    இக்கோவிலின் கருவறையில் உள்ள பகவதியம்மன், கருப்பு நிறத் தோற்றத்தில் காணப்படுகிறாள். மூன்று கண்கள், நான்கு கோரைப்பற்கள் கொண்டு அருளும் இந்த அன்னை, தன்னுடைய நான்கு கரங்களில், சூலம், கபாலம், வாள், கேடயம் போன்றவற்றைத் தாங்கி, வடக்கு திசையை பார்த்தபடி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி, கால பைரவர் மற்றும் சாஸ்தா ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    இந்த ஆலயத்தின் தெற்குப் பகுதியில் அழகிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளத்தில் அசுரர்களை அழிப்பதற்காக, பகவதியம்மன் பயன்படுத்திய வாள் ஒன்று இருப்பதாக ஐதீகம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டால் எதிரிகள் பயம் விலகும் என்கிறார்கள்.

    இந்தத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு, சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. சித்திரை மாதம் முதல் நாளில் நடைபெறும் விசுத் திருநாள், ஆவணி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் நடைபெறும் ஓணம் திருநாள் போன்ற சிறப்பு நாட்களில், இந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.

    இங்கிருக்கும் அம்மனுக்குச் சிவபெரு மானைப் போல் மூன்றாவது கண் இருப்பதால், துன்பங்களால் துவண்டு போய் இருப்பவர்களும், பிறரால் துன்பங்களை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால், அந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பலவும் நடைபெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    குருவாயூரில் கிருஷ்ணருக்கு செய்யப்படும் சந்தன அபிஷேகம், சபரிமலையில் ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் போன்றவை சிறப்புக்குரியவை. அதே போல மணப்புள்ளி பகவதியம்மனுக்கு கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இது இங்கு மிகவும் விசேஷமான அபிஷேகமாகும். கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப்போராட்டங்கள், மன நோய்கள் போன்றவை நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அபிஷேகத்தைச் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலைத் திருவிழா:

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், மாசி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமையில், ‘கன்யர்’ என்னும் கொடியேற்றத்துடன், ஆண்டுத் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 14-வது நாளில் நடைபெறும் ‘வேலைத் திருவிழா’ என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.

    இந்த வேலைத் திருவிழாவின் போது, அம்மன் பக்தர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவர் ஆலயத்தின் பின்புறம் உள்ள குளத்தில் இறங்கி, அசுரனை அம்மன் அழிக்க பயன்படுத்திய வாளை எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபாடு செய்வார். இந்த வாள் எடுத்து வரும் நிகழ்வை ‘வெளிச்சப்பாடு திருவிழா’ என்கிறார்கள்.

    வேலைத் திருவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வை “வேல ஊட்டு” என்கின்றனர். விழாவில் 15 யானைகள் அணி வகுத்து நிற்கின்றன. பாண்டி, பஞ்சாரி மேளம், பஞ்சவாத்தியம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன.

    அசுரனை அழித்து விட்டு, கோபத் தோற்றத்தில் இருக்கும் அம்மனை, அமைதிப்படுத்தும் விதமாக, அம்மனுக்கு முழுமையாகக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இப்படிச் செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து, பக்தர்களுக்குப் பல்வேறு நற்பலன்களை வழங்குவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ் வேளையில், அம்மனுக்கு “கடும் மதுரா பாயாசம்” படைக்கப் பெற்று பக்தர் களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயமானது காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது யாக்கரை. பாலக்காடு நகரில் இருந்து யாக்கரை செல்வதற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவாள். உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி.

    ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்தப் பகுதி ‘மலையாளம்’ என்று அழைக்கப்பட்டது. அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை ‘அந்தன் காடு’ என்று அழைத்தனர்.

    உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை அவர் செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, “இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக. இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்” என்று கூறி மறைந்தாள்.

    தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.

    நாளடைவில் அந்த வனப் பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்குப் பின்னர், காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்தப் பகுதி ‘பழஞ்சிறை’ என்று அழைக்கப்பட்டது.

    ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்தப் பகுதியில், அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு, இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால், இந்த அன்னையை ‘பழஞ்சிறை தேவி’ என்றே பெயரிட்டு அழைத்தனர். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக, சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக, இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

    இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் பங்குனி மாத இறுதியில் திருவிழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தைப் போல, இந்த ஆலயத்திலும் பொங்கல் வைபம் என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.



    இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி ஆலயத்தில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது ‘கன்னியர் பூஜை’ என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறுவயது தோற்றத்தில் இருப்பது போல, பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில், பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக, சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.

    அதே போல் இந்த ஆலயத்தில் நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார். ஆலயத்தின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்நோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும். பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு ‘பஞ்சபூத பொங்கல்’ என்று பெயர்.

    நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ‘சண்டி ஹோமம்’ நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும்.

    இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது.

    தோற்றப்பாட்டு


    அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும். விழாவில் ஒவ்வொரு நாளும், சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் ‘தோற்றப்பாட்டு’ என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்தப் பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைப் பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இந்தப் பாடலைக் கேட்டாலே, அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் அமைந்துள்ளது, பழஞ்சிறை தேவி கோவில்.
    ×