search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  அநீதியை அகற்றும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில்
  X

  அநீதியை அகற்றும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில்

  கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  ஆதி பரம்பொருளான சிவபெருமான் படைத்து அருள்பாலித்து வரும் இந்த பூவுலகில், பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த கால கட்டத்தில் பாண்டிய மன்னர்களும், சோழ மன்னர்களும் போட்டிபோட்டு ஆலயங்களை அமைத்து வழிபட்டனர். சேரநாட்டிலும் சிவன் கோவில்கள் அமைந்தன. இருப்பினும் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், சக்தி சொரூபிணியான பரமேஸ்வரியின் 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். அதுவே கேரள தேசம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்றன.

  அவர் அமைத்த ஆலயங்களை, பிற்கால மன்னர்கள் அந்தந்த ஊர்களின் பெயரிலேயே திருப்பணி செய்து போற்றி பராமரித்தனர். இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயத்தில், உக்கிரமாக இருக்கும் ரத்த சாமுண்டி சத்தியத்தை நிலைநாட்டும் அன்னையாக அருள்பாலித்து வருகிறாள்.

  திருவிதாங்கூர் மன்னனின் படைவீரர்கள் களரிச் சண்டை பயிற்சி பெறும் களமாக விளங்கிய இடம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘களரிக்களம்’ என்று பெயர் வந்தது. பின்னர் அருவே மருவி ‘கரிக்ககம்’ என்றானதாக கூறப்படுகிறது.

  தல வரலாறு

  வேத விற்பன்னரும் தெய்வீக அருள்பெற்றவருமான ஒரு வேதிகர், பராசக்தியை தவறாது வழிபட்டு வந்தார். அவர் மந்திர தந்திரங்களை நன்கு கற்று அருள் பெற்றிருந்த ஒரு தந்திரியை தன் சீடனாக ஆக்கிக் கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் வழங்கினார். அந்த சீடரும், குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர்கள் இருவர் முன்பாகவும் அன்னை, சிறுமி வடிவத்தில் தோன்றினாள். பின்னர் அம்மனுடன் அவர்கள் தற்போது ஆலயம் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அங்கு சிறிய பச்சை பந்தல் அமைத்து அம்மனை குடியமர்த்தினர். சிறுமியாக வந்த அன்னை, அவர்களுக்கு அருளாசி வழங்கி மறைந்தாள்.

  இந்த ஆலயத்தில் ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது சிறப்புக்குரியதாகும். ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று வடிவங்களில் அன்னை வணங்கப்படுகிறாள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மன்கள் சுவர் சித்திரமாகவே இருக்கின்றனர். இந்த சன்னிதிகளில் சிலை வடிவம் கிடையாது. அருள் சுரப்பது சாமுண்டி தேவி, அநீதியை முறியடிப்பது ரத்த சாமுண்டிதேவி, ஐஸ்வரியம் வழங்குவது பால சாமுண்டிதேவி.

  முன் காலத்தில் இந்த ஆலய சாமுண்டி தேவி, வெள்ளி முகத்துடன், கலைமான் கொம்பில் வீற்றிருப்பது போன்று இருந்தது. பிரசன்னம் பார்த்ததில், பக்தர்களுக்கு தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய, விக்கிரக பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில், அதே அளவில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக பிரதிஷ்டை செய்தனர். அமைதியான வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் பக்தர்கள் இந்த அன்னையை வழிபட்டு வருகிறார்கள்.

  இந்த ஆலயத்தில் உள்ள சாமுண்டி தேவிக்கு ஒரு நேர பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. இது ‘தேவி நடை பூஜை’ என்று அழைக்கப்படுகிறது. கடும்பாயசம் தான் அன்னையின் விருப்பமான நைவேத்தியம். ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகம், புடவை சாத்துதல், பிடிபணம் வாருதல் ஆகியவை இந்த அம்மன் சன்னிதியில் நடைபெறும் வழிபாடுகளாகும். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படும்.

  நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற, தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை ரத்த புஷ்பார்ச்சனை செய்து வருவது நல்லது. நித்திரையில் வரும் கெட்ட கனவுகளைக் கண்டு பயப்படாமல் இருக்கவும், வேறு தோஷங்களில் இருந்து விடுபடவும் இந்த சன்னிதியில் கறுப்புக் கயிறு தரப்படுகிறது. இது தாயத்து எழுதி தேவி பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து தரப்படுவதாகும்.

  ரத்த சாமுண்டி தனி சன்னிதியில் சுவர் சித்திரமாக இருக்கிறாள். நீதியை நிலைநாட்ட இந்த சன்னிதியில் வந்து சத்தியம் செய்வது பழங்கால வழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சன்னிதியை திறந்து சத்தியம் செய்வதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்ஹார பூஜை’ ஆகும். இது பகையை அழிக்கும் பூஜை. சுப காரிய தடை நீங்கவும், கண் திருஷ்டி அகலவும், ஜாதக தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் சதித் திட்டங்கள் விலகவும் இங்கு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ரத்த சாமுண்டிக்கு கடும் பாயசம், சிவப்பு நிற பட்டு பாவாடை, தெற்றி பூ மாலை, கோழி, ஆடு தானம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆன பொருட்களை சமர்ப்பிக்கலாம்.

  சாந்த சொரூபிணியான பால சாமுண்டி தேவியும் தனி சன்னிதியில் சுவர் சித்திரமாகவே அருள்கிறாள். அம்மன் அழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறாள். இந்த அன்னையை குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். நோய் நீங்குவதற்கு நடையை திறந்து வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இதற்கும் சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த சன்னிதியில் உள்ள அன்னைக்கும் கடும் பாயசம், பட்டு, முல்லைப் பூ, பிச்சிப்பூக்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளியால் ஆன குழந்தை உருவங்கள், தொட்டில்கள், விளையாட்டுப் பொருட்களை இந்த அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த அன்னையின் தரிசனம் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

  இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்‌ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, குரு மந்திரம், நாகர்காவு, அன்னபூர்ணேஸ்வரி ஆகிய சன்னிதிகளும் உள்ளன.

  தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

  சத்தியம் காக்கும் சன்னிதி :

  சேர மன்னன் காலத்தில், ஒரு நாள் அரசியின் விலைஉயர்ந்த காதணி காணாமல் போய்விட்டது. அந்தப்புரத்தில் காவல் பணியில் ஈடுபட்ட ஒரு காவலாளி மீது சந்தேகம் கொண்டு, அவனைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

  அதே சமயத்தில் அந்த காவலாளியின் காதலியும், அரசியின் தோழியுமான ஒரு பெண் ஓடி வந்து, தன்னை தண்டிக்கும்படியும், காவலாளியை விடுவிக்கும்படியும் கூறினாள். காவலாளியோ, “இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்” என்றான்.

  மன்னனுக்கு வியப்பு ஏற்பட்டது. யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினான். அப்போது அமைச்சர்கள் ஒரு ஆலோசனை கூறினார்கள். அதன்படி காவலாளியையும், அவனது காதலியையும், கரிக்ககம் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்ய வைப்பது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். காவலாளியும், அவனது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர்.

  அப்போது அரசியின் துணியை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடி வந்தாள். அவர் “சலவைக்கு போட்ட துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். ரத்த சாமுண்டியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே ஓடி வந்தேன். காவலாளியும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள்” என்று கூறி காதணியைக் கொடுத்தாள்.

  மகிழ்ச்சியடைந்த மன்னன், காவலாளியையும், அவனது காதலியையும் விடுவித்தான். அதோடு அரசியின் காதணியை, ஆலயத்தில் உள்ள அன்னைக்கே சமர்ப்பித்தான்.

  கேரளத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை கரிக்ககம் சாமுண்டி தேவி சன்னிதானத்தில், பல சிக்கலான வழக்குகள், சத்தியம் செய்வதன் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கின்றன. குற்றம் சாட்டியவரும், குற்றவாளியும் ஆலய குளத்தில் நீராடி சாமுண்டி அம்மன் முன் காணிக்கை செலுத்தி விளக்கேற்றி, தீபச் சுடரின் மேல் சத்தியம் செய்ய வேண்டும். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்துவிடும் என்று அனைவரும் நம்புவதால் எவரும் பொய் சத்தியம் செய்வதில்லை.

  இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

  அமைவிடம்  :

  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் கரிக்ககம் சாமுண்டி கோவில் அமைந்திருக்கிறது.
  Next Story
  ×