search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Education"

    • 2022-23-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன
    • பொதுத் தேர்வில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் மொழித் தாள் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்த பொதுத் தேர்வில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் மொழித் தாள் தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாதது ஏன்? காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் பேசப்பட்டது.

    கல்வித்துறை இதில் தீவிரம் காட்டிய நிலையில், அதில் பெரும்பாலான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதவர்கள் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் கல்வித்துறைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வரும் கல்வியாண்டிலும் இதுபோன்ற பிரச்சினை வரக்கூடாது. அதில் சரியான கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்ட கல்வித்துறை இப்போதே அதற்கான முயற்சியில் களம் இறங்கி இருக்கிறது. அதன்படி, நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளின் விவரங்களை பள்ளிகளிடம் இருந்து பெற்று வருகிற 2-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
    • விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் விடை குறிப்பு சமூக வலைதளத்தில் கசிந்ததால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

    வரும் 10ம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட பிளஸ்-2 விடை குறிப்பு சமூக வலைதளங்களில் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.
    • ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியை பொறுத்தவரையில் 15 ஆயிரத்து 566 பேரும், தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

    அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள்.

    இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.17 முதல் ஏப்.21ம் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை முடிக்க வேண்டும்.

    4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 முதல் ஏப். 28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    • நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 6-ந் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிகிறது.

    அதன்பிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என்பதால் தெலுங்கானா மாநிலத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன.

    எனவே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருப்பதாலும் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதாலும், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது. 24-ந் தேதி தொடங்க இருந்த தேர்வை ஒருவாரத்துக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 17-ந் தேதியே தொடங்கி 24-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ‘101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் திரையிட வேண்டும்.
    • ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.

    சென்னை:

    அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த மாதம் '101 சோத்தியங்கள்' என்ற தமிழ் திரைப்படத்தை வருகிற 17-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) திரையிட வேண்டும்.

    இந்த திரைப்படம் கிராமத்தில் வாழும் 12 வயது சிறுவனை பற்றிய கதை ஆகும். 60-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை கலைஞர் மற்றும் சிறந்த அறிமுக திரைப்படத்துக்கான விருதையும் இந்த படம் வென்றிருக்கிறது.

    ஒவ்வொரு பள்ளியிலும் திரைப்படம் திரையிடல் நடவடிக்கைக்காக ஒரு ஆசிரியருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும். அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறார் திரைப்படத்தை பார்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • என்.எஸ்.எஸ். திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்.எஸ்.எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் என்.எஸ்.எஸ். நிதியை பள்ளிகளின் வங்கிக்கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    இதற்காக அரசு பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, என்.எஸ்.எஸ். திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்.எஸ்.எஸ். வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள்.
    • தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

      சென்னை:

      பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு அலுவலகங்கள் நிர்வாக நலனை முன்னிட்டு சீரமைக்கப்பட்டும், புதிய அலுவலகங்கள் உருவாக்கம் செய்யப்பட்டும் வருகின்றன.

      இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்கவும், அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இணை இயக்குனர் நரேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

      அதன்படி நிதிக்காப்பாளர்களுக்கு 27-ந் தேதி மாநில அளவில் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கு கவுன்சிலிங் அன்று நடக்கிறது. தொடர்ந்து 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

      • 182 அரசு ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் வாயிலாக நியமனம் செய்து கொள்ளலாம்.
      • ரூ.7,500, ரூ.10,000, ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்

      சென்னை:

      பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டு உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

      182 அரசு ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் வாயிலாக நியமனம் செய்து கொள்ளலாம். ரூ.7,500, ரூ.10,000, ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்

      தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம். தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • கடையநல்லூர் வட்ட அளவில் நடைபெற்ற மாணவியர்களுக்கான தடகளப்போட்டிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி தொடங்கி வைத்தார்.
      • 50 உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்

      தென்காசி:

      தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் எவரெஸ்ட் பள்ளி மைதானத்தில் கடையநல்லூர் வட்ட அளவில் நடைபெற்ற மாணவியர்களுக்கான தடகளப்போட்டிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி தொடங்கி வைத்தார்.

      தேசியக் கொடியை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசியும், ஒலிம்பிக்கொடியை மாவட்ட தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் கவிதாவும், பள்ளியின் கொடியை வட்டாரக் கல்வி அலுவலர் மகேஸ்வரியும் ஏற்றி வைத்தனர்.

      50 உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பக்கீர் முகம்மது செய்திருந்தார். முதல்நாள் மாணவர்களுக்கான போட்டிகளில் சுமார் 690 மாணவர்கள் கலந்து கொண்டனர். 2-வது நாள் மாணவியர்களுக்கான போட்டிகளில் சுமார் 660 மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

      தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாக உறுப்பினர் முகம்மது அனீஸ் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் . தாருஸ்ஸலாம் பள்ளி தலைமை ஆசிரியர் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியர் ஜபருல்லா தொகுத்து வழங்கினார்.

      நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் புளியங்குடி டி.எஸ்.பி.அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் நாராயணன், எவரெஸ்ட் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

      • தமிழ், ஆங்கிலம் பாடவேளைகள் வாரத்திற்கு 6 ஆக குறைக்கப் பட்டுள்ளது.
      • சமூக அறிவியல் பாடவேளை வாரத்திற்கு ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

      தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

      அதன்படி, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

      அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தபடுவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

      • அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க உத்தரவு.
      • இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்தவும் ஆணை.

      தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

      பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம், பிசிஎம் 3.5 சதவீதம், பிசி 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

      மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

      மேலும், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      ×