search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public road blockage"

    கிணத்துக்கடவு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி சென்றாம் பாளையம் கிராமத்தில் கடந்த 18 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை 7.30 மணியளவில் சென்றாம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ் வந்தது. அதனை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தாஸ், அம்பராம் பாளையம் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் திருமலை சாமி, கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தான் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.

    இன்று முதல் முறையாக தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று தண்ணீர் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேப்பந்தட்டை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தழுதாழை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் கிணறுகளில் வறட்சியின் காரணமாக போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டதையும் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக தழுதாழை பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கூறியும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தழுதாழையில் உள்ள அரும்பாவூர் -பெரம்பலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரும்பாவூர் -பெரம்பலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஒட்டப்பட்டியில் இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியை அடுத்துள்ள வள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வள்ளுவர் நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மற்றும் குடிநீர் வசதி இருந்து வந்தது. ஆனால் தற்போது 3 மாதமாக குடிநீர் சரிவர வருவதில்லை. 

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இன்று ஒட்டப்பட்டி பகுதியில் தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையிலும் சேலத்தில் இருந்து தருமபுரி செல்லும் சாலையிலும்  காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார், வட்டாட்சியர் பழனியம்மாள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகிகள் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினையை சரி செய்வதாகவும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் மழை பெய்த போதும், திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் ஆத்தூர் காமராஜர் அணை வறண்டு வருகிறது. அங்கிருந்து மிகவும் குறைந்த அளவே குடிநீர் எடுக்கப்படுகிறது.

    இதனால், நகர் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நகர் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டதால் அவை பழுதடைந்து விட்டன. இதையடுத்து, ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, 41-வது வார்டில் ஜின்னா நகர், பூச்சிநாயக்கன்பட்டி மற்றும் ஞானபிரகாசபுரம் ஆகிய பகுதிகளில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் கடந்த 24 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு திண்டுக்கல்-மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் 1 மாதமாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு வீரகவுண்டணுர் பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1 மாதமாக இந்த பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க வில்லை. இதனால் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    மேலும் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தனர். ஆனால் நிர்வாகத்தினர் இது வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று காலை கடத்தூர்- தாளநந்தம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன், பேரூராட்சி அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் விஜி ஆகியோர்கள் விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

    அப்போது குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது மருவத்தூர் ஊராட்சி. இங்கு உள்ள மேற்கு தெருவில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

    தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி செந்துறை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கந்தர்வக்கோட்டையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. இதனால் இரவில் வெப்பம் அதிகரித்து மக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் மின்விசிறி, ஏ.சியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

    இந்நிலையில் கந்தர்வக்கோட்டை பகுதியில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் மின்சாரம் வரவில்லை. இதனால் அவதி அடைந்த பொதுமக்கள் இது குறித்து தகவல்அறிய மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தனர்.

    ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு சுமார் 1.30 மணியளவில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது. தஞ்சை செல்லும் வாகனங்களும், புதுக்கோட்டை செல்லும் வாகனங்களும் நீண்டவரிசையில் காத்திருந்தன. 

    இது குறித்துதகவல் அறிந்ததும் கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். பொதுமக்கள் உடனடியாக மின்சாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் போனில் பேசினார். அப்போது அவர்கள் புதுக்கோட்டை சிப்காட்டில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி விட்டது. ஊழியர்கள் சரி செய்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினர். 

    இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணிக்கும் ஆரம்பித்த சாலை மறியல் போராட்டம்  3.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு தான் மின்சாரம் வந்தது. இந்த திடீர் மின் தடையால் குழந்தைகள், முதியவர்கள், பொது மக்கள் அவதிபட்டனர்.

    கந்தர்வக்கோட்டையில் நள்ளிரவில் நடந்த இந்த திடீர்சாலை மறியல் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கல்லாக்கோட்டை பேருந்து நிலையம் அருகே திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த  வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும் கந்தர்வக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    பொம்மிடி அருகே சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளி கிராமத்தில் சந்து கடை அமைத்து மதுபானம் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை போலீசார் மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதை கண்டித்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொம்மிடி- கடத்தூர் ரோட்டில் மதுபாட்டில்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் சமபவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சந்து கடை அமைத்து மது விற்பனை செய்வதால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். மது விற்பனை செய்யும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,. மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் சந்து கடை அமைத்து மதுவிற்ற ராணி என்பவரை கைது செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×