search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pranab mukherjee"

    ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்ற நிலையில், அது தொடர்பாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் பரவி வருவது தொடர்பாக பிரணாப்பின் மகள் கருத்து தெரிவித்துள்ளார். #PranabAtRSSEvent
    புதுடெல்லி:

    நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சம்மதித்தபோதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிரணாப் முகர்ஜியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜியும் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரின் கருப்பு தொப்பி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது போலவும், கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்து மரியாதை செலுத்தியது போலவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பிரணாப் புகழ்ந்து பேசியது போல வாட்ஸப்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.



    ஆனால், உண்மையில் பிரணாப் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம். சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் நாடு சீர்குலையும் என ஆர்.எஸ்.எஸ்.க்கு பாடம் எடுத்திருந்தார். இந்நிலையில், மார்பிங் புகைப்படங்கள் குறித்து பிரணாப்பின் மகள் அச்சம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நான் எதை நினைத்து பயந்தேனோ, எதற்காக எனது அப்பாவை எச்சரித்தேனோ அது நடந்தே விட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலமணி நேரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், பாஜக / ஆர்.எஸ்.எஸ் அதன் வேலையை முழு வீச்சாக செய்ய ஆரம்பித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.
    ஆர்.எஸ்.எஸ். விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் என்றார். #PranabMukherjee #RSS
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசப்போகிறார் என தகவல்கள் வெளியானபோது, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஸ்தா முகர்ஜியும், தன் தந்தை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அவருடைய பேச்சை மறந்து விடுவார்கள். ஆனால் அது தொடர்பான படக்காட்சிகள் நிலைத்து நின்றுவிடும்” என கூறினார்.



    இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொள்வதற்கு முன்பாக அந்த அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவார் பிறந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்றார்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் பிரணாப் முகர்ஜி, “இந்திய தாய்நாட்டின் மாபெரும் மகனுக்கு எனது மதிப்பையும், அஞ்சலியையும் செலுத்துவதற்கு இங்கு இன்று வந்து உள்ளேன்” என குறிப்பிட்டு, கையெழுத்திட்டார்.

    பின்னர் பிரணாப் முகர்ஜி பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது பாரத தேசத்தை பற்றி நான் புரிந்து கொண்ட விஷயங்கள், தேசியவாதம், தேசபக்தி ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு வந்து இருக்கிறேன். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

    பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.

    மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

    இந்தியாவை ஒரு மொழியாலோ, ஒரு மதத்தாலோ அடையாளப்படுத்திவிட முடியாது. 130 கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தில் 122 மொழிகள் பேசப்படுகின்றன. 1,600 வட்டார மொழி பேச்சு வழக்குகள் உள்ளன. 7 பெரிய மதங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் இருக்கிறார்கள். இங்கே யாரும் எதிரிகள் கிடையாது.

    நம்மை சுற்றிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தினந்தோறும் பார்க்கிறோம். இதற்கு அவநம்பிக்கை, அச்ச உணர்வு போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    பெண்களும், குழந்தைகளும் பாலியல் ரீதியிலான வன்முறை சம்பவங்களுக்கு ஆளாகும் போது இந்தியாவின் ஆன்மா மிகுந்த காயத்துக்கு உள்ளாகிறது. ஜனநாயக நாட்டில் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

    விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், விழாவில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததை விவாதப்பொருளாக்கியது அர்த்தமில்லாதது என்றார்.

    மேலும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் அடிப்படை அடையாளம் என்றும், நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது என்றும், யாரையும் வேற்றுமையுடன் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    விழாவில் கலந்து கொண்டதற்காக பிரணாப் முகர்ஜிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.  #PranabMukherjee #RSS
    நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம், ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு பன்முகத்தன்மையை கொண்டாட முடியாது என ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசினார். #RSS #PranabMukherjee
    மும்பை:

    ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா இன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானதும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை அவருக்கு கடிதமாக எழுதியிருந்தனர்.

    இந்நிலையில், சர்ச்சைகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் அவர் இன்று நாக்பூர் வந்தடைந்தார். ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் உடன் அவர் சிறிது நேரம் பேசினார். இதனை அடுத்து, உபச்சார விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்:-

    சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தேசியவாதத்தை சீர்குலைப்பதாக உள்ளது. தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவையாகும். நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்க முடியாது

    என குறிப்பிட்டார்.
    பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகர்ழ்ச்சியில் பங்கேற்கும் முடிவை மறு பரிசீலனையில் செய்ய வேண்டும் என்று அவரது மகளும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தில் 3 நாள் நடைபெறும் விழாவில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தது.

    இந்த அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன்பு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தினர்.

    இது குறித்து பிரணாப் முகர்ஜி கூறும் போது, “நான் என்ன சொல்ல வேண்டுமோ? அதை நாக்பூர் விழாவில் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி எனக்கு ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளன. ஆனால் நான் யாருக்கும் பதில் அளிக்கவில்லை. நான் பேச வேண்டிய அனைத்தையும் நாக்பூரில் பேசுவேன்” என்றார். ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்பதற்காக அவர் நேற்று நாக்பூர் சென்றார்.


    இதற்கிடையே பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அவரது மகளும், டெல்லி காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் பா.ஜனதாவில் இணைந்ததாக வதந்தி பரவிய செய்தியாலும் கோபம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ‌ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பா.ஜனதா இப்படி பொய்யான செய்திகளை பரப்பும். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும், தகவல்களையும் பா.ஜனதா பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) அளிக்கிறீர்கள். இதனால் பிரணாப் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
    காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆட்சேபம் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜி உரையாற்ற உள்ளார். #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு  ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரணாப் முகர்ஜிக்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கடிதம் எழுதியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்படி ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

    ஆனால், எதிர்ப்பு கடிதங்களுக்கு பதில் அளிக்காத பிரணாப் முகர்ஜி, தான் பேசவேண்டியதை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேச உள்ளதாக கூறியிருக்கிறார்.  எனவே, இன்றைய விழாவில் பங்கேற்கும் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலையே நாக்பூர் வந்து சேர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை விழாவிற்கு செல்லும் அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி மற்றும் பிற தலைவர்களையும் பிரணாப் சந்திக்கலாம் என தெரிகிறது. #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
    நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது என்று பிரணாப் முகர்ஜிக்கு முன்னாள் மத்திய மந்திரி ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார்.
    பெங்களூரு:

    ஆர்.எஸ்.எஸ். சார்பில் நாக்பூரில் ஜூன் 7-ந் தேதி நடக்கும் விழாவில் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரணாப் முகர்ஜிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியுமான ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். விழாவில் நீங்கள் (பிரணாப் முகர்ஜி) கலந்து கொள்ள இருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. மத சார்பற்ற கொள்கையோடு பல ஆண்டுகள் அரசியலில் இருந்து நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவி வகித்த நீங்கள், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்து கொள்வது சரியல்ல. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் பரிசீலனையின்போது, ‘குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை வேட்பாளராக அறிவிப்பதில் யாரும் தவறு காண முடியாது. அவரது நாட்டுப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது’ என்று பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


    மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு வழியனுப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பங்கேற்பதாக தெரியவந்துள்ளது. #PranabMukherjee #RSSprogramme
    மும்பை:

    ஆர்.எஸ்.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்டரிய சுவயம்சேவக் சங் அமைப்பின் தலைமை அலுவலகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரின் ரேஷிம்பாக் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ‘சங் ஷிக்‌ஷா வர்க்-துருட்டிய வர்ஷ்’ எனப்படும் 25 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்துள்ள 708 தொண்டர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    பயிற்சிகள் முடிந்து இந்த முகாமில் இருந்து செல்பவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி வழியனுப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் வருகைதர சம்மதித்துள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மேலிட பிரமுகர் இன்று தெரிவித்துள்ளார்.
    #PranabMukherjee #RSSprogramme
    ×