search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nataraja"

    • நாளை கணபதி ஹோமம், திருவாசகம் முற்றோதுதல் நடக்கின்றது.
    • 25-ம்தேதி திருவாசகம் முற்றோதுதல் நடக்கிறது.

    ராமேசுவரம் அக்னி தீர்த்தம் ஓலைக்குடா அருகில் 51 அடி உயர ஐம்பொன் நடராஜர் பெருமான் உருவச்சிலை அமைக்கும் பணி தொடக்க விழா நாளை (சனிக்கிழமையும்), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமையும்) நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு நாளை காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு கணபதி ஹோமம், செந்தமிழ் வேள்வி, 7.30 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல், மாலை 5.30 மணிக்கு கும்மியாட்ட நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கின்றது.

    நாளை மறுநாள் காலை 6 மணிக்கு கைலாய வாத்தியம், 7 மணிக்கு நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, 8 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல் நடக்கிறது.

    இந்த விழாவில் புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் ரெங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • நடராஜர் நடனம் புரிந்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
    • சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலேயே பஞ்ச சபைகள் இருக்கின்றன.

    நடராஜர் நடனம் புரிந்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலேயே பஞ்ச சபைகள் இருக்கின்றன. சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராஜசபை என்று அழைக்கப்படும் அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சிற்றம்பலம்:- நடராஜர் ஆடும் சித்சபையைத்தான் 'சிற்றம்பலம்' என்கிறோம். இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, சிவகாமி அம்மை எப்போதும் கண்டு ரசித்தபடி இருக்கிறார். இதற்கு 'தப்ர சபா' என்ற பெயரும் உண்டு. இந்த சபைக்கு இரண்யவர்மன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்தான். இங்குள்ள படிகள் பஞ்சாட்சர படிகள் என்றும், நமசிவாய படிகள் என்றும் போற்றப்படுகின்றன.

    பொன்னம்பலம்:- சிற்றம்பலத்திற்கு முன்பாக உள்ளது, இந்த பொன்னம்பலம். இதனை 'கனகசபை' என்றும் அழைப்பர். இங்குதான் நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜையும், ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடைபெறும்.

    பேரம்பலம்:- இந்த இடத்திற்கு 'தேவசபை' என்றும் பெயர். விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் சபை இதுவாகும். இந்த சபைக்கு, மூன்றாம் குலோத்துங்கன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்துள்ளான்.

    நிருத்தசபை:- இது நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே அமைந்திருக்கிறது. இங்கு நடராஜர், ஊர்த்துவ தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    ராஜசபை:- சிதம்பரம் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்தான், ராஜ சபை ஆகும். ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடக்கும் விழாவில், தேரில் பவனி வரும் நடராஜர், இந்த ராஜசபைக்கு எழுந்தருள்வார். ஆருத்ரா தரிசனம் இங்குதான் நடைபெறும். அப்போது சிவகாமியம்மன் முன்பாக நடராஜர் முன்னும், பின்னுமாக நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு 'அனுக்கிரக தரிசனம்' என்று பெயர்.

    • தேரோட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
    • ஆனித்திருமஞ்சன தரிசனம் 26-ந்தேதி நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.

    காலை 7 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட பசுக்கொடி, வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக நடராஜர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இதையடுத்து 8.25 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆனித்திருமஞ்சன விழா கொடியை உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்களில் வெளிபிரகாரத்திற்குள் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னா் இரவு கொடிமரம் முன்பு மத்தள பூஜைகள் நடந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

    இதில் பஞ்சமூர்த்திகள் 4 ரத வீதிகளிலும் வீதிஉலா வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தனா்.

    விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. வருகிற 21-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

    இதையடுத்து ஆனித்திருமஞ்சன தரிசனம் 26-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்து, பிற்பகல் 2 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    பின்னர் 27-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், 28-ந்தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் ஆனித்திருமஞ்சன திருவிழா முடிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • 25-ந்தேதி தேர் திருவிழா நடக்கிறது.
    • ஆனி திருமஞ்சனம் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த 2 விழாக்களின் போது மூலவர் நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நாளை மறுநாள்(சனிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினசரி காலை, மாலையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.

    விழாவில் 5-வது நாளான வருகிற 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடை பெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கும், ஆனி திருமஞ்சனம் வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது. 28-ந் தேதி(புதன்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கீழ சன்னதி முகப்பு வாசல் பகுதியில் பந்தல் போடும் பணிகள் முடிந்து கோவில் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது.

    • நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனியில், முருகன் கோவிலின் உபகோவிலாக பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழாவின் கொடியேற்றம், தேரோட்டம் உள்ளிட்டவை இந்த கோவிலில் வைத்தே நடைபெறுகிறது. எனவே இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளன்று நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று சித்திரை திருவோண நட்சத்திரம் என்பதால் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு நடராஜர்-சிவகாமி அம்மன், விநாயகர், அஸ்திரதேவர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 16 வகை தீபாராதனை நடைபெற்றது.

    அதன்பின்னர் நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    • நடராஜர் இந்துக் கடவுளான சிவபெருமானின் நடனத் தோற்றமாவார்.
    • நடனக் கோலத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் ஆடினார்.

    நடராஜ தத்துவம் என்பது ஆனந்த தாண்டவம் ஆடும் நடராசரின் தோற்றத்தினை விளக்குவதாகும். நடராஜர் இந்துக் கடவுளான சிவபெருமானின் நடனத் தோற்றமாவார். இந்நடனக் கோலத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் ஆடினார்.

    நடராஜர் வடிவில்; இரு பக்கமும் விரிந்திருக்கும் சடையுடன் கூடிய நடனத்தோற்றம் உயிர்களுக்கு இறைவன் இடைவிடாது செய்யும் ஐந்து தொழில்களைக் குறிக்கிறது. நடராஜப்பெருமானின் வலது கால், முயலகனின் மீது ஊன்றிய திருவடியானது, ஆணவ எண்ணத்தை குறிப்பதாகவும் இறைவனின் மறைத்தல் தொழிலை உணர்த்துகிறது. இடது கால் தூக்கிய திருவடியானது சிவனின் அருளல் தொழிலைக் குறிக்கிறது.

    இத்திருவடியை, இடது கையின் விரல் ஒன்றைச் சுட்டிக் காட்டி, சிவனின் அருளல் தத்துவத்தை உணர்த்துகிறது. நடராஜரின் உடுக்கை ஏந்திய வலது கை படைத்தல் தொழிலைக் குறிக்கிறது. நடராஜரின் தீயை ஏந்திய இடது கை, அழித்தல் தொழிலைக் குறிக்கிறது.

    நடராஜரின் வலது அபய கரமானது, காத்தல் தொழிலைக் குறிக்கிறது. நடராஜப்பெருமானின் நடனத் தத்துவம் உணர்த்துவது இதுவே.

    • நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது.
    • நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை வந்தால், மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது. உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்ந்தாலும் பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது. எனவே மறக்காமல் நடராஜர் சன்னதியிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    • சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
    • ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும்.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜமூா்த்திக்கு, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதாவது ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும்.

    ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

    அந்த வகையில் மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை நடராஜரையும், சிவகாம சுந்தரியையும், சிறப்பு அலங்காரத்தில் எடுத்துவந்து, சித்சபை முன்பு உள்ள கனகசபையில் வைத்தனர். அங்கு இரவு 7.30, மணிக்கு தொடங்கி இரவு 11 மணிக்கு மேல் வரை மகா அபிஷேகம் நடைபெற்றது.

    இதில், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு குடம், குடமாக அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதா்கள் செய்தனர்.

    முன்னதாக நேற்று காலை கிழக்கு கோபுரம் வாசல் அருகே ஸ்ரீசபையில் லட்சார்ச்சனை, யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர யாகம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து, மதியம் மகாருத்ர யாகம், வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாஸினி தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கடயாத்ராதானம், நடந்தது. அதை தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் சன்னதியில் மகாபிஷேகம் தொடங்கி் நடந்தது.

    • மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நாளை தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
    • திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

    சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒருவர் நடராஜமூர்த்தி. சிவன் அபிஷேகப் பிரியர். ஆனால் நடராஜமூர்த்திக்கோ ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம். எனவே இந்த ஆறு அபிஷேகங்களும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகிய நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வருகிறது.

    இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி, திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கும், உய்யகொண்டான் திருமலையில் உஜ்ஜீவநாத சுவாமி கோவிலில் மாலை 5.30 மணிக்கும் நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுபோல் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், நாளை (திங்கட்கிழமை) காலை தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    நீர் ஸ்தலம் என்று போற்றப்படும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. லால்குடி சப்தரிஷிஸ்வரர் கோவிலில் காலை 6 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர்கோவிலில் இன்று இரவு 7 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன்கோவில்களில் இன்று நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    • பல்வேறு அபிஷேகங்களுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.
    • மரகத நடராஜர் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனம் களையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி காலையில் சந்தனம் களையப்பட்டு, பல்வேறு அபிஷேக தீபாராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. பின்னர் நடைசாத்தப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 4.30 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது. இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    மேலும் மரகத நடராஜர் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    இரவு 9 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷப சேவை நடைபெற்றது. சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விஷேசம் என்பதாலும், விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததாலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.

    ஆருத்ரா தரிசன ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • இன்று பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் தனிசிறப்புகள் வாய்ந்தது.

    ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பிறகு தினமும் சாமி வீதிஉலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4 வீதியில் வலம் வந்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 4.45 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து மாலை 5.20 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி திருநடனம் புரிந்தபடி தரிசனம் அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர்.

    இதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது.
    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.

    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.

    எனவே மறக்காமல் நடராஜர் சன்னதிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.
    ×