search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாசி சதுர்த்தசி: சிவன் கோவில்களில் இன்று நடராஜருக்கு மகா அபிஷேகம்
    X

    மாசி சதுர்த்தசி: சிவன் கோவில்களில் இன்று நடராஜருக்கு மகா அபிஷேகம்

    • மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் நாளை தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
    • திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

    சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒருவர் நடராஜமூர்த்தி. சிவன் அபிஷேகப் பிரியர். ஆனால் நடராஜமூர்த்திக்கோ ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம். எனவே இந்த ஆறு அபிஷேகங்களும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகிய நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வருகிறது.

    இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி, திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கும், உய்யகொண்டான் திருமலையில் உஜ்ஜீவநாத சுவாமி கோவிலில் மாலை 5.30 மணிக்கும் நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுபோல் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், நாளை (திங்கட்கிழமை) காலை தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    நீர் ஸ்தலம் என்று போற்றப்படும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி அம்மன் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. லால்குடி சப்தரிஷிஸ்வரர் கோவிலில் காலை 6 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர்கோவிலில் இன்று இரவு 7 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன்கோவில்களில் இன்று நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    Next Story
    ×