search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulla Periyar Dam"

    • முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
    • இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    சென்னை:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி உள்ள நிலையில் இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 'ரெட்' அலர்ட் விடுத்துள்ளது. அதற்கேற்ப மழை பெய்கிறது.

    இதே நிலை நீடித்தால் அணையின் நீர் மட்டம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இப்போது அணைக்கு அதிகளவு நீர் வரத்து உள்ளது.

    எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது.

    இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த விசயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து வெளியேறும் நீர் வெளியேற்றம், உபரி நீரை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய படிப்படியாக திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அணையின் ஷட்டர்களை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
    • தொடர்ந்து வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் உபரியாக 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்தது. இடுக்கி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 2,000 கன அடி வரை மட்டுமே இருந்தது.

    கடந்த 2 நாட்களாக மழை அதிகரித்ததால் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. நேற்று காலை 8 மணிக்கு 2,831 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலை 3 மணிக்கு 6,231 கன அடியாக அதிகரித்தது. இதனால் காலையில் 135.15 அடியாக இருந்த நீர் மட்டம் மாலை 7 மணிக்கு 136 அடியை எட்டியது.

    152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் தற்போது 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதுவும் ரூல் கர்வ் முறைப்படி தற்போது தேக்க முடியாது.

    இன்று காலை அணைக்கு நீர் வரத்து 7200 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் 136.95 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக 1866 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நீர் இருப்பு 6357 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 136 அடியை கடந்ததும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டி பெரியாறு, வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை இடுக்கி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளனர். இன்று அணையின் நீர் மட்டம் 137.5 அடியை எட்டினால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும். இதனால் 'ரூல் கர்வ்' நடைமுறையை கைவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் உபரியாக 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 70.01 அடியாக உள்ளது. வரத்து 3432 கன அடி. திறப்பு 2656 கன அடி. இருப்பு 5829 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டியதால் 55 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வரத்து 196. இருப்பு 435.32. சோத்துப்பாறை நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 126.82 அடியில் உள்ளது. வரத்து 272 கன அடி, திறப்பு 3 கன அடி. இருப்பு 40 மி.கன அடி.

    பெரியாறு 75.4, தேக்கடி 42, கூடலூர் 8.6, உத்தமபாளையம் 12.5, வீரபாண்டி 10, வைகை அணை 3, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 10, அரண்மனைபுதூர் 2.4, போடி 6.2, பெரியகுளம் 10 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாகவும், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 60.99 அடியாக உள்ளது. வரத்து 1830 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3789 மி.கனஅடி.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 135.90 அடியாக உயர்ந்தது. 136 அடியை எட்டும் என்று எதிர்பார்த்து இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு மழை குறைந்ததாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக உள்ளது. வரத்து 1262 கனஅடி, நேற்று வரை 2016 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1976 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5784 மி.கனஅடி.

    இதேபோல் வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாகவும், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 60.99 அடியாக உள்ளது. வரத்து 1830 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 3789 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.70 அடி, வரத்து 21 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 71.01 அடி, வரத்து 1 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    பெரியாறு 20, தேக்கடி 7.4, கூடலூர் 1.5, உத்தமபாளையம் 1.4, மஞ்சளாறு 5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • நீர் இருப்பு 6093 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

    எனவே நீர் மட்டம் 136 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மழை குறையத் தொடங்கியது. இதனால் அணையின் நீர் வரத்தும் குறைந்தது.

    8000 கன அடி வரை நீர் வரத்து வந்த நிலையில் இன்று காலை அணைக்கு 2543 கன அடி மட்டுமே நீர் வருகிறது. நீர் மட்டம் 135.90 அடியாக உள்ளது. இதனால் இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6093 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணை நீர் மட்டம் 57.74 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1789 கன அடியாக உள்ளது. திறப்பு 969 கன அடி. இருப்பு 3183 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 49.25 அடியாக உள்ளது. வரத்து 10 கன அடி. இருப்பு 325.42 மி.கன அடி.

    சோத்துப்பாறை நீர் மட்டம் 69.20 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 29.40 மி.கன அடி.

    பெரியாறு 4.2, தேக்கடி 3, உத்தமபாளையம் 2.6, வைகை அணை 7, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 55.91 அடியாக உள்ளது. அணைக்கு 1544 கன அடி நீர் வருகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 2122 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3266 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 2738 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 128.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 129.05 அடியாக உயர்ந்தது. இன்று காலை 129.50 அடியாக அதிகரித்துள்ளது. 152 அடி உயரம் உள்ள பெரியாறு அணையில் தற்போது 4590 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1678 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் லோயர்கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் மூலம் 153 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 55.91 அடியாக உள்ளது. அணைக்கு 1544 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2865 மி.கன அடியாக உள்ளது.

    126.28 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.29 அடியாக உள்ளது. அணையில் இருந்து 6 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது.

    பெரியாறு 26.4, தேக்கடி 13, கூடலூர் 2.8, உத்தமபாளையம் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 2018ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வக்கீல் ரசல் ஜோய் இது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்.
    • தற்போது லட்சக்கணக்கில் வசூல் செய்து ஆவணப்படம் எடுக்க முயல்வதாக வெளிவந்துள்ள செய்தி தமிழக, கேரள, மாநில விவசாயிகளிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நபர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பலம் இழந்து காணப்படுவதாக தொடர்ந்து கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்பினர் பிரசாரங்கள் செய்து வந்த நிலையில் கடந்த 2006 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்தது.

    இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த வக்கீல் ரசல் ஜோய் பொய் பிரசாரம் செய்து வருகிறார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் பெரியாறு அணைக்கு எதிரான இந்த பிரசாரமும் தொடங்கியுள்ளது. இடுக்கி, பத்தினம் திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்நிறுத்தி வக்கீல் ரசல் ஜோய் தலைமையிலான "சேவ் கேரளா பிரிகேட்" என் அமைப்பினர் 10 லட்சம் கையெழுத்து பெற்று பிரதமர் மோடிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

    மேலும் முல்லைப்பெரியாற்றின் விபரங்கள் குறித்து 90 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாக உள்ள இந்த குறும்படம் தயாரிக்க ரூ.30 லட்சம் தேவை என்றும் தங்களுக்கு நன்கொடை வழங்குமாறும் மார்ட்டின் ஜோசப் மற்றும் ரசல் ஜோய் ஆகிய இருவரின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இது தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 2018ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வக்கீல் ரசல் ஜோய் இது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறார். தற்போது லட்சக்கணக்கில் வசூல் செய்து ஆவணப்படம் எடுக்க முயல்வதாக வெளிவந்துள்ள செய்தி தமிழக, கேரள, மாநில விவசாயிகளிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    கேரள அரசு இது போன்ற விஷம பிரசாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு இது போன்ற சூழல் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செய்யப்படும் பிரசாரத்துக்கு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) இதில் தலையிட்டு இது போன்ற பிரசாரங்களை தடுக்க வேண்டும். தவறினால் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன் சோலை ஆகிய தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி நாங்களும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குவோம் என்றார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நேற்று 265 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 700 அடியாக அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.

    தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், வீரபாண்டி, கூடலூர், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் அடியோடு குறைந்தது. தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக உள்ளது. நேற்று 265 கன அடி மட்டுமே வந்த நிலையில் இன்று காலை 700 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4266 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.82 அடியாக உள்ளது. நேற்று 447 கன அடி நீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் திறப்பு 869 கனஅடி. இருப்பு 2384 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49 அடி. வரத்து 20 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.64 அடி. திறப்பு 6 கன அடி.

    பெரியாறு 15.4, தேக்கடி 16, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 2, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    பெரியாறு அணை நீர் பிடிப்பில் மழை குறைந்து வருவதாலும், கேரளாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் 142 அடியை நெருங்கி வருகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 141 அடியை கடந்தது. தற்போது மழை சற்று குறைந்திருந்த போதிலும் பெரியாறு, தேக்கடி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 141.35 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1862 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் மின் உற்பத்திக்கு மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 29-ந்தேதி கேரள பகுதிக்கு 5 ‌ஷட்டர்கள் மூலம் 2950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் மழை குறைந்ததால் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நீர் மட்டம் கடந்த 19-ந் தேதி அதிகரித்தபோது 2 ‌ஷட்டர்கள் மூலம் 781 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை முற்றிலும் நின்றதால் கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழகத்தின் குடிநீர் மற்றும் சாகுபடிக்காக மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் அணையின் நீர் மட்டம் ஓரிரு நாளில் 142 அடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு 7491 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டக்கோரி கடந்த சில நாட்களாக கேரளாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்கள், தர்ணா, மனித சங்கிலி போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் நீர்பாசனத்துறை அமைச்சரும் கொல்லம் எம்.பி.யுமான பிரேம சந்திரன், இடுக்கி எம்.பி. டீன் சூரிய கோஸ் ஆகியோர் தலைமையில் புதிய அணை கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட அனுமதிக்குமாறு கேரள அரசிடம் அனுமதி கேட்டனர்.

    ஆனால் தற்போதைய சூழலில் அங்கு செல்ல அனுமதி தர முடியாது என கேரள அரசு தெரிவித்தது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
    நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.
    கூடலூர்:

    கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழை கைகொடுத்ததால் குறிப்பிட்ட நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் கேரள அரசு 142 அடி தண்ணீர் தேக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அவ்வப்போது கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் திறந்து விடுவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்துள்ளது. இதனால் நேற்று 3104 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1992 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம் வழியாக 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 200 கன அடியும் என மொத்தம் 2000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 168 கன அடி நீர் கேரளாவுக்கு உபரியாக திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2387 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2355 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை 55 அடியாக உள்ளது. 46 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.47 அடியாக உள்ளது. 106 கன அடி நீர் வருகிறது. இதில் 30 கன அடி பாசனத்திற்கும், 76 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
    முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 141 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி 139 அடியை எட்டியது.

    அதன் பிறகு நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் ரூல்கர்வ் முறைப்படி கேரள பகுதிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு தமிழக விவசாயிகள் மற்றும் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டங்களை தொடர்ந்து கேரளாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்த நிலையில் 140 அடியை எட்டியதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    வருகிற 20-ந் தேதி வரை 141 அடி தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன் படி அணையின் நீர் மட்டம் தற்போது 141 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3348 கன அடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் 1800 கன அடி நீர் மின் உற்பத்திக்கும், 500 கன அடி தண்ணீர் இறைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7396 மி.கன அடியாக உள்ளது.

    இன்று காலை முதல் பெரியாறு அணையின் 2 மற்றும் 3-வது ‌ஷட்டர்கள் வழியாக 772 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதனால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டி பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரியாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் முழுவதும் கேரள பகுதிக்கு திறக்கப்படும்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் ‘ரூல் கர்வ்’ முறைப்படி தேக்கி வைக்கப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து தமிழக அரசு சம்மதம் தெரிவித்ததே விவசாயிகளுக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

    152 அடியில் இருந்து 136 அடியாக அணையின் நீர் மட்டம் குறைக்கப்பட்ட போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்தன. 142 அடி வரை தேக்கி தண்ணீர் திறக்கப்பட்டால்தான் 5 மாவட்ட விவசாயிகள் முழுமையான பாசன வசதி பெற முடியும். எனவே ‘ரூல் கர்வ்’ நடைமுறையை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திருத்தம் செய்து பருவமழை காலங்களில் அணையின் நீர் மட்டத்தை ஏற்கனவே அறிவித்த உத்தரவின்படி 142 அடி வரை தேக்கிக் கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 139.85 அடியாக உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்றில் இருந்து மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 2021 கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் ½ அடி உயர்ந்து 139.85 அடியாக உள்ளது. இன்று மதியத்திற்குள் 140 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 556 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் 142 அடியை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் முல்லை பெரியாறு அணை பகுதிக்கு சென்றனர். உச்சநீதிமன்றம் 142 அடி வரை அணையில் தண்ணீரை தேக்கலாம் என உத்தரவு வழங்கியுள்ளது. ஆனால் அதனையும் மீறி அவர்கள் நீர் மட்டத்தை குறைக்கும் நோக்கத்தில் கேரள பகுதிக்கு தண்ணீரை திறந்து விட்டு கடலில் வீணாக கலக்க விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அதிகாரிகள் அணையை ஆய்வு செய்து தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என உறுதியளித்தனர். தற்போது தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    எனவே தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக அணையில் இருந்து 1867 கன அடி நீர் திறக்கும் போது மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும். தற்போது நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் 2 ஜெனரேட்டர்களில் மட்டும் தலா 30 மெகாவாட் என 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணை முழு கொள்ளளவை எட்டி 69.19 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு 1143 கன அடி நீர் வருகிறது. 3 மாவட்ட பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 1419 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.34 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 42 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 26.8, தேக்கடி 16, கூடலூர் 4.8, சண்முகாநதி அணை 27, கொடைக்கானல் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
    தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்தும் வகையில் அதற்குக் கீழுள்ள 23 மரங்களை வெட்டுவது தொடர்பான கருத்துரு கம்பம் நீர் ஆதாரத்துறையின் செயற்பொறியாளரால் கேரள வனத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைப் பரிசீலித்த பெரியாறு புலிகள் காப்பக கிழக்குக் கோட்ட துணை இயக்குநர் தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு விடப்பட்ட முல்லைப்  பெரியாறு பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட பரிந்துரை செய்த கேரள அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன விலங்கு காப்பாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

    இதன் அடிப்படையில் கேரள அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அங்குள்ள 15 மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள அரசிற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்தது. இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத்துறை அமைச்சர் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தனக்கு தெரியாது என்றும், கேரள முதல்-மந்திரிக்கோ, நீர் பாசனத்துறை மந்திரிக்கோ, வனத்துறை மந்திரிக்கோ எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    மரங்களை வெட்ட அனுமதி அளித்த ஆணை வெளிவந்த மறுவினாடியே கேரள முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்-அமைச்சர் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து மவுனமாக இருப்பது வியப்பாக இருக்கிறது.

    கேரளாவுக்கு ஆதரவான மனநிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் இருப்பதாக பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் நினைக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

    ஆனால் தமிழ்நாட்டின் உரிமை என்று வரும்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, அமைச்சர்களாக இருக்கின்ற அனைவருக்கும் உண்டு. இந்த வி‌ஷயத்தில் மவுனம் சாதிப்பது என்பது தமிழ்நாட்டின் உரிமையை கேரளாவுக்கு அடகு வைத்ததற்கு சமம்.

    முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு, இது குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. அப்போது இதுகுறித்து வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஆண்டுக்கணக்கில் இடையூறு அளித்து வரும் கேரள அரசை தட்டிக் கேட்க வேண்டும் என்றும், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

    இந்த பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×