search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indonesia"

    • சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. நிலச்சரிவினால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    ரியாவு தீவில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என கூறுகின்றனர்.

    தற்போது அங்கு வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் மீட்பு பணிகளும் சவாலாக உள்ளன. நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் பாதுகாப்பு நிறுவனம் நாளை ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளது.

    அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் இறந்துள்ளனர். கடந்த வாரம் 41,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    • இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்
    • கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேஷியாவில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி திருமணத்தை மீறி தகாத உறவு வைத்து இருந்தால் ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான புகாரை கணவர் அல்லது மனைவி, பெற்றோர், குழந்தைகள்தான் கொடுக்க வேண்டும். இந்த சட்டம் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்

    இந்தோனேஷியாவில் அங்கிகரீக்கபட்டுள்ள இந்து மதம், இஸ்லாம், கிருஸ்தவம், பவுத்தம், கன்பூசியம் ஆகிய 5 மதங்களை அவமதித்தால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் மதநிந்தனைச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மார்க்சிய லெனினிசத்தை பரப்புபவர்களுக்கு 10 ஆண்டு வரையிலும் கம்யூனியசத்தை பரப்புபவருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் சிறைதண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சூழலை கருத்தில் கொண்ட பெண்களுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கும் 12 வாரத்துக்கான கருவை கலைத்து கொள்ளலாம் என்ற விதி விலக்கு அந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. பல நாடுகளில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்தும் வரும் சூழலில் இந்தோனேஷியாவில் மரண தண்டனை தொடரும் என புதிய மசோதாவில் தெரிவிக்கபட்டு உள்ளது. ஆனாலும் மரண தண்டனை கைதிகள் 10 ஆண்டுகள் நன்னடத்தையுடன் இருந்தால் அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாகவோ அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் குறிப்படப்பட்டுள்ளது. பதவியில் உள்ள அதிபர்கள், துணை அதிபர்கள் மற்றும் அரசு அமைப்புகளை அவமதித்தால் தண்டனை கொடுக்கும் வகையில் புதிய சட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    • கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது.
    • 5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செ மேரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது.

    கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது. இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது.

    எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. 5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது.

    அங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் எரிமலை சாம்பல் பரவியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சும்பர்வுலு, சுபிது ராங் கிராமங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மேலே எரிமலை குப்பைகள் கிடந்தன. எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    அப்பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எரிமலை குழம்பு பாயும் பாதையில் உள்ள பெகக் கோபோகன் ஆற்றின் தென்கிழக்கு பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கஜர்குனிங் என்ற கிராமத்தில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.

    எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இன்றும் எரிமலையின் ஆக்ரோஷம் அதிகரித்து இருக்கிறது. நேற்றை விட இன்று சாம்பல் புகை வெளியேறும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் மேலும் பல இடங்களுக்கு சாம்பல் புகை பரவும் அபாயம் உள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செமேரு எரிமலை வெடித்து சிதறியதில் 51 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.
    • சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜகார்த்தா:

    கடந்த மாதம் 21ந் தேதி இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர் 600 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் ஜாவா தீவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


    மேற்கு ஜாவா மற்றும் மத்திய ஜாவா மாகாணங்களுக்கு இடையே உள்ள பஞ்சார் நகருக்கு தென்கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2000க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஜனாதிபதி ஜோகோ விடோடோ சியாஞ்சூருக்கு சென்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளாமன கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

    இன்றைய மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது சிறுவன் மீட்கப்பட்டான். வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய அந்த சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டிருக்கிறான்.

    இந்நிலையில் சியாஞ்சூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருவதால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இன்று மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. மீட்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    2000க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் ஜாவா தீவின் அருகில் உள் மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. பலருக்கு படுக்கை வசதி கிடைக்காத நிலையில், ஸ்டிரெச்சரில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஜனாதிபதி ஜோகோ விடோடோ நேற்று சியாஞ்சூருக்கு சென்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். சிதைந்துபோன அப்பகுதியில் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும், வீடு சேதமடைந்த ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் 50 மில்லியன் ரூபியா (3,180 டாலர்கள்) வரை உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • நிலநடுக்கத்தில் பெருமளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

     ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெருமளவில் குழந்தைகளே உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என தெரிய வந்து உள்ளது. 151 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் ஜகர்த்தாவின் தெற்கு பகுதியில் 2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

    • நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த செங்கல் வீடுகளில் புதையுண்டவர்களைத் தேடினர். பல வீடுகளில், படுக்கையறைகளுக்குள் கான்கிரீட் மற்றும் கூரை ஓடுகள் விழுந்து கிடந்தன.

    மதிய நிலவரப்படி 20 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்தார். நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இன்று இரவு நிலவரப்படி உயிரிழப்பு 162 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
    • பொதுமக்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன, அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு முகமைத் தலைவர் சுஹரியாண்டோ தெரிவித்துள்ளார்.

    மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமானோர் இருளில் தவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தினர், வசிக்கும் நாட்டிற்காக, கடின உழைப்பை செலுத்துகின்றனர்.
    • இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உலக அளவில் உயர்த்தி வருகின்றனர்.

    பாலி:

    இந்தோனேஷியா நாட்டில் நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, பாலி நகரில், இந்திய சமுதாயத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகள் உள்ளன. பாலி ஜத்ரா என்ற மிகப் பழமையான பாரம்பரியம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கிறது.

    இந்திய சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உலக அளவில் அவர்கள் உயர்த்தி வருகின்றனர். இந்தியா இந்தோனேஷியா உறவை வலுப்படுத்துவதிலும் இந்திய சமுதாயத்தினர் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

    டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம், தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்சார்பு இந்தியாவின் தொலை நோக்கு பார்வை உலக நலனுக்கானது.

    மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டிலும், குஜராத்தில் நடைபெற உள்ள பட்டத் திருவிழாவிலும் இந்தோனேஷியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • துப்பாக்கியுடன் பெண் வந்தபோது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இல்லை
    • கைது செய்யப்பட்ட பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கியுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் அந்தப் பெண் ஜனாதிபதி மாளிகையின் காம்பவுண்ட் அருகே வந்தபோது அவரை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.

    அந்த பெண் ஜனாதிபதி மாளிகையில் நுழையவில்லை என்றும், அவர் துப்பாக்கியுடன் வந்தபோது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பெண்ணுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அவரது நோக்கம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உலகின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், சில சமயங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கின்றன.

    கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் 55.5 சதவீத ஓட்டுகளை பெற்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ 10 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக பிரபோவோ சுபின்யான்டோ குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபோவோ ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.

    அதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். அப்போதும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

    இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “நமது அன்பான நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை நான் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன். சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை” என கூறினார். 
    இந்தோனேசியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaLandslide
    ஜெகார்த்தா:

    இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது.

    அந்த மாகாணத்தில் அமைந்துள்ள சுரங்கத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த  ஊழியர்கள் சிக்கினர்.

    இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என்றும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என பேரிடர் மேலாண்மை குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #IndonesiaLandslide
    ×