search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Alliance"

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பாட்னாவில் ஆலோசனை நடத்தினார். #BJP #ParliamentElection #Amitshah
    பாட்னா:

    2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    பஞ்சாப்பில் கூட்டணி கட்சியான அகாலி தளம் ஆட்சியை இழந்த நிலையில் மராட்டியத்தில் சிவசேனா கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அமித்ஷா சமரசம் செய்த பின்பும் மோதல் போக்கு நீடிக்கிறது.

    பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜனதா மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. அங்கு லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்த நிதிஷ்குமார், சில மாதங்களிலேயே லாலுவை உதறி விட்டு பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்கிறார்.

    இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று இரு கட்சி தலைவர்களும் அறிவித்து வருகிறார்கள். அதே சமயம் பா.ஜனதா பெரிய அண்ணன் போல் நடந்து கொள்ளக்கூடாது, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், தொகுதி பங்கீடு சரிசம விகிதத்தில் இருக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் நிபந்தனை விதித்துள்ளது.


    இதையடுத்து நிதிஷ் குமாரை சந்திப்பதற்காக அமித்ஷா பீகார் சென்றுள்ளார். பாட்னாவில் இன்று மதியம் அவர் நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார். இதையொட்டி அமித்ஷாவுக்கு நிதிஷ்குமார் மதிய விருந்து அளித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    பா.ஜனதாவின் நீண்ட கால கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2009 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் 25 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 15 தொகுதிகளில் போட்டியிட்டு 11 இடங்களில் வென்றது.

    2014 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது. இதில் பா.ஜனதா மோடி அலையால் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தது.

    அதன் பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார். இந்த கூட்டணி முறிந்ததால் மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேரும் முடிவை எடுத்துள்ளார். #BJP #ParliamentElection #Amitshah
    ×