search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dignity of Fasting"

    • மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு.
    • மனதை கட்டுப்படுத்துவது சவாலான காரியம்.

    மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டது. (அதன்மூலம்) நீங்கள் மனத்தூய்மையுடையோர் ஆகலாம்." (திருக் குர்ஆன் 2:183)

    நோன்பின் மூலம் மனது தூய்மை அடைவதாக திருக்குர் ஆன் அழகாக தெரிவிக்கிறது. மனதை கட்டுப்படுத்தி, அதை தூய்மைப்படுத்தும்போது, மனிதனின் பிற உறுப்புகள் தானாகவே தூய்மை அடைந்து விடுகின்றன.

    "அறிந்து கொள்ளுங்கள், மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீர்பட்டு விட்டால், உடலுறுப்புகள் யாவும் சீராகிவிடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகிவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் உள்ளம்". (அறிவிப்பாளர்:நுஅமான் பின் பஸீர் (ரலி), நூல்:புகாரி)

    நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும், அடிப்படையான காரணம் மனக்கட்டுப்பாட்டை பெறுவதற்குதான் நோன்பு கடமையாக்கப்பட்டு இருக்கின்றது என இஸ்லாம் கூறுகிறது.

    மனக்கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆம், மனதை தூய்மையாக வைத்திருப்பதினால் கிடைக்கும். மனதை தூய்மையாக வைத்திருந்தால் தானாகவே, ஆரோக்கியம் கிடைத்துவிடும், பசிக்கொடுமையை தெரிந்து கொள்ளலாம். மனஅமைதி கிடைத்திடும், ஏழைகள் மீது இரக்கம் பிறந்துவிடும், மன இச்சைகளை ஒதுக்கித் தள்ள முடியும், ஏழைகளுடன் உறவாடி, அவர்களின் சுமைகளை அறிந்து கொள்ள முடியும்.

    மனதை கட்டுப்படுத்தி, அதை பக்குவப்படுத்தவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்களுக்கு நோன்பு வைப்பதன் மூலம் அவை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அன்புச்சகோதரர்களே! உலகில் ஈ, தேனீ ஆகிய இரண்டையும் காணுகின்றோம். ஈ மலத்திலும் உட்காரும், மலரிலும் உட்காரும். ஆனால் தேனீமலரில் மட்டுமே உட்காரும். ஈ நமது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பது; தேனீயோ உடல் நலனுக்கு உதவுவது; தேனை சேகரித்துத் தருகிறது. "அதில் (தேனில்) மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கிறது" என்று திருக்குர் ஆன் (16:69) குறிப்பிடுகின்றது.

    மனித மனம் ஈயைப் போன்றது. அதை தேனீ போல மாற்ற வேண்டும். அதாவது நல்லதை நினைக்கவும், சொல்லவும், செய்யவும் பழக்க வேண்டும். இந்த முயற்சியுடைய வாழ்க்கைக்குத் தான் இஸ்லாமிய வாழ்க்கை என்று பெயர். சிறந்த உடையை உடுத்திக் கொள்வதிலும், நறுமணம் பூசிக் கொள்வதிலும், சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்வதிலும், அழகிய முறையில் வீட்டை அலங்கரிப்பதிலும் ஆர்வமும், அக்கறையும் நாம் அதிகம் காட்டுகின்றோம்.

    அதேநேரத்தில், மனதை கட்டுப்படுத்து வதிலும், அதை சுத்தப்படுத்துவதிலும் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம் என்பதை எண்ணிப்பாருங்கள். மனதை கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலான ஒரு காரியம். அந்த சவாலை சமாளிக்கும் ஒரு அற்புதமான களம் தான் நோன்பு.

    மனித உறுப்புகளை மனசு கட்டுப்படுத்துகிறது. அந்த மனதை நோன்பு கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துகிறது. மனதை கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்த நினைக்கும் முஸ்லிம்களே, ரமலான் மாதம் முப்பதிலும் நோன்பு வையுங்கள். உடலும், உள்ளமும் சுத்தமாகும். மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

    • உண்மையான நோன்பு எது?
    • ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

    உண்மையான நோன்பு எது?

    உணவு, பானங்கள், உடல் இச்சை ஆகியவற்றை விட்டு தடுத்துக் கொள்வது தான் உண்மையான நோன்பு என நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நமது உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் நோன்பு இருப்பதே உண்மையான நோன்பு ஆகும்.

    நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அவை: வயிறு, கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, கை-கால்கள், மறைவிடத்தைப் பேணுதல் ஆகும். ஒட்டுமொத்தத்தில் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

    வயிறு: விலக்கப்பட்டவைகளை உண்ணுவது, பருகுவது ஆகியவைகளை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    கண்கள்: விலக்கப்பட்டவைகளையும், ஆபாசங்களையும் பார்ப்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    காதுகள்: பொய், புறம், அவதூறு, ஆபாசம், கவனத்தை திசை திருப்பும் இசை போன்ற விலக்கப்பட்ட செயல்களை கேட்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    மூக்கு: தடை செய்யப்பட்ட மதுவகைகள், புகைவகைகள், போதையூட்டும் பொருட்கள் ஆகியவைகளை நுகர்வதை விட்டும் தடுத்துநோன்பு இருக்க வேண்டும்.

    நாவு: பொய், புறம், அவதூறு, அறிவற்ற பேச்சுக்கள் ஆகியவைகளை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    கைகள்: அனுமதிக்கப்படாத பொருட்களை தொடுதல், லஞ்சம் வாங்குதல், வரதட்சணை வாங்குதல், வட்டி வாங்குதல், கொடுத்தல், அதற்கு சாட்சியாக இருத்தல், கொலை- கொள்ளையடித்தல் ஆகியவற்றில் இருந்து விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

    கால்கள்: தடுக்கப்பட்ட இடங்கள் அனைத்திற்கும் செல்வதை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

    மறைவிடம்: பாலியல் தொந்தரவு, பலாத்காரம், தகாத உறவு போன்ற செயல்களை விட்டு விலகி நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு உடலும், உறுப்புகளும் தவிர்க்க வேண்டியவைகளை விட்டு விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

    "முஃமீன்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று, உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமானவர்களாக முடியும்".(திருக்குர் ஆன் 2:183)

    "எவர் பொய்யான காரியங்களை செய்வதை யும், பொய்யான பேச்சுக்களையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ (நோன்புவைப்ப)தில் அல்லாஹ் விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    "எத்தனையோ நோன்பாளிகள், அவர்களின் நோன்பில் இருந்து பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவு (கூலியு)ம் கிடைப்பதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தாரமீ)

    பசித்திருப்பது, தாகித்திருப்பது நோன்பல்ல. தகாதகாரியங்கள் முழுவதையும் தவிர்த்து இருப்பது தான் பரிபூரணமான நோன்பு என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

    இந்த நோன்பின் மூலம் இறைவனுக்காக மனிதன் பல தியாகங்களை செய்கிறான். உணவு, நீர், இல்லற இன்பம் இவற்றை மனவிருப்பத்தோடு விலக்குகிறான். இவை அவனது நுகர்தலுக்கு உரியவை. ஆயினும், இவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கி வாழ்கிறான்.

    ஐம்புலன்களை தேவையானபோது, அடக்கி ஆளும் ஆற்றலை மனிதன் பெறுவதே நோன்பின் தத்துவம். நாமும் அதை பெறுவோம்.

    • மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்.
    • மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான்.

    மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்

    ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாத பிறை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மக்கா மாநகரம் வெற்றி கொள்ளப்படுகிறது. மறுநாள் பிறை 18-ம் தினம் புதன் கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மாநகரம் புனிதம் குறித்து பிரகடனம் செய்கிறார்கள்.

    அபூஷுரைஹ் (ரலி) அறிவிக்கிறார்: அம்ர் பின் ஸயீது என்பவர் (யஸீதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் ராணுவத்தை அனுப்பியபோது, 'தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை எனது இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிய போது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள்.

    பின்னர் இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித நகரமாக்க வில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே ரத்தத்தை ஒட்டுவதோ, இதன் மரம். செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இங்கு ஒரு சிறு போர் நடத்தியதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், அவர் தெரிந்து கொள்ளட்டும், 'நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு மட்டுமே அனுமதியளித்தான், உங்களுக்கு அவன் அனுமதி அளிக்க வில்லை' என்று அவரிடம் கூறுங்கள். எனக்கு கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும்தான். இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. இச்செய் தியை இங்கே வராதிருப்பவர்களுக்கு இங்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்:புகாரி)

    மக்காவின் புனிதம் குறித்து நபி (ஸல்) பிரகடனம் செய்தபோதிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் மக்காவின் மண்ணை புனிதமாக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் அளவைகளான ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் கிடைத்திட பிரார்த்தித் தேன்.' (அறிவிப்பாளர்: இப்னு ஜைத் (ரலி), நூல்:புகாரி)

    'மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான். யுத்தம் செய்ய யாரும் அனுமதிக்கப் படவில்லை. இந்நகரின் முள் செடிகள் அகற்றப்படக்கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக்கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை மக்களுக்கு அறிவிப்பு செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது' (நூல்:புகாரி)

    'வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப் படக்கூடாது ' (நூல்: புகாரி) என நபி (ஸல்) கூறினார்கள்.

    மேற்கூறப்பட்ட அனைத்தும் மக்காவின் புனித எல்லைப் பகுதிகளில் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றைப் பேணி அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். புனித மக்காவின் வடக்குப் பகுதி 'தன்ஈம்' ஆகும். தெற்குப் பகுதி 'அளாஹ்' ஆகும். கிழக்குப்பகுதி ஜிஃரானா' ஆகும். வடகிழக்குப் பகுதி வாதிநக்லா' ஆகும். மேற்குப்பகுதி 'ஹூதைபிய்யா' ஆகும்.

    • புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்’
    • வெற்றி-தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்து.

    புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்'

    புனித ரமலான் மாத நோன்பு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு தான் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் போர் செய்வதும் கடமையாக்கப்பட்டது.

    நோன்பு என்பது உண்ணாமலும், பருகாமலும் இருந்து உடல் சோர்வுடன், உடல் நலிந்து, மெலிந்து இருப்பது. போர் புரிவது என்பது அழகிய முறையில் ஊட்டச்சத்துக்களை உண்டு, புத்துணர்ச்சி தரும் பானங்களை பருகி உடல் நலத்துடனும், உடல் பலத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது. உடல் தகுதியை நிரூபிப்பது.

    பத்ர் போரின் பின்னணி'

    அபூசுப்யான் தலைமையில் வியாபாரக் கூட்டம் சிரியா தேசத்தில் இருந்து மக்காவை நோக்கி குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது. இவர்களிடம் 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1000 ஒட்டகங்களில் 40 வீரர்களின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்தது.

    மக்கா வாசிகளுக்கு பொருளாதார ரீதியாக சேதத்தை ஏற்படுத்துவதற்கு இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனவே, நபி (ஸல்) அவர்கள் போர்புரியும் எண்ணமின்றி இக்கூட்டத்தை நோக்கி புறப்படும்படி தமது தோழர்களிடம் வேண்டினார்கள். ஆனால், அல்லாஹ்வின் எண்ணம் போர் புரிவதாக இருந்தது. அதுவே நடந்தது.

    'போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறை மறுப்பாளர்களை எதிர்த்துப் போரிட) அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. (திருக்குர்ஆன் 22:39)

    குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாக்க அபூஹஜ்ல் தலைமையில் 1000 வீரர்கள், 100 குதிரைகள், 700 ஒட்டகங்கள், 600 கவச ஆடைகளுடன் ஒரு பெரும் படையே வருகிறது.

    இதையறிந்த வியாபாரக் கூட்டத்தின் தலைவர் அபூசுப்யான், 'தாங்கள் பாதுகாப்பாக மக்கா திரும்புகிறோம். இனி எங்களை காக்க ஆள் தேவையில்லை. நீங்கள் திரும்பி விடுங்கள்' என்று அபூஜஹ்லிடம் தூது அனுப்புகிறார்.

    ஆணவம் பிடித்த அபூஜஹ்ல் கேட்க வில்லை. முன்னே எடுத்து வைத்த காலை பின் வாங்கப்போவதில்லை என திமிர்பிடித்து முஸ்லிம்களை நோக்கி முன்னேறினான். இதுவே பத்ர் போருக்கு வழிகோலியது. கி.பி. 624-ம் ஆண்டு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் பிறை 17-ம் நாள் வெள்ளிக்கிழமை போர் நடந்தது. எனவே, அதற்கு பத்ர் போர் என்று பெயர் வந்தது.

    இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.' (திருக்குர் 3:123)

    முஸ்லிம்களின் எண்ணிக்கை 313 நபர்கள். அவர்களிடம் 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள், 8 வாள்கள், 9 உருக்குச் சட்டைகள், 60 கேடயங்கள் மட்டுமே இருந்தன. இவ்வாறு இருந்தும் இஸ்லாமிய படைக்கு இறையருளால் வெற்றி சாத்தியமானது. வெற்றி - தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    பத்ர் போர் நடப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக இறைவன் கூறுகின்றான். 'அதி சீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஒடுவர். (திருக்குர் 54:45)

    • புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.
    • உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.

    புனித ரமலானில் உம்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    புனித ரமலான் மாதம் நோன்புக்கானது (மாதம்) மட்டுமல்ல. நோன்புக்கும் உரியது. நோன்பு அல்லாத பிற வழிபாட்டுக்கும் ஏற்றமானது. புனித ரமலானில் உயர்வான, முதன்மையான வழிபாடு நோன்பாகும். நோன்பை விடுத்து இன்னும் ஏராளமான வழிபாடுகள் புனித ரமலானில் நிரம்பி வழிகின்றன. நிறைவேற்றப்படவும் செய்கின்றன. அவற்றில் நோன்புக்கு அடுத்த அந்தஸ்தில் இடம் பெறுவது புனிதரமலானில் புனித கஅபா ஆலயம் சென்று, அதை தரிசனம் செய்து (உம்ரா செய்து) வருவதாகும்.

    உம்ரா செய்வது என்றால், அதற்கென்று தனி மாதங்களோ, தனி காலங்களோ கிடையாது. ஆண்டு முழுவதும் புனித கஅபா ஆலயம் சென்று தரிசனம் செய்து வரலாம். ஆனால், இவ்வாறு ஹஜ் செய்யமுடியாது. ஹஜ் செய்வ தற்கென்று சில குறிப்பிட்ட மாதங்கள் உண்டு. அவை, ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களாகும். இம்மூன்று மாதங்களை தவிர்த்து வேறுமாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. எனினும், உம்ராவை நிறைவேற்ற முடியும்.

    உம்ரா செய்ய ஒருவர் நாடினால், அவர் முதலில் தைக்கப்படாத இரண்டு ஆடைகளை அணிந்து புனித கஅபாவில் நுழைய வேண்டும். (இதற்கு இஹ்ராம் ஆடை என்று பெயர்), புனித கஅபாவில் நுழைந்ததும் 7 சுற்றுக்கள் சுற்றி வர வேண்டும், ஸபாவில் ஆரம்பித்து - மர்வா ஆகிய இரண்டு குன்றுகளுக்கு மத்தியில் ஏழு தடவை விரைந்தோட வேண்டும். தலைமுடியை அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதுதான் உம்ரா ஆகும்.

    உம்ராவை எத்தனை தடவை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால் புனித ஹஜ் என்பது வாழ்க்கையில் ஒரு தடவைதான் கடமை. புனித ஹஜ்ஜை ஒரு தடவை மட்டும் நிறைவேற்றினால் போதும். உம்ராவை பல தடவை நிறைவேற்றலாம். இதுதான் நபி வழி.

    கதாதா (ரஹ்) அறிவித்தார். 'நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்தார்கள்? என நான் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர், 'நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவை: ஹூதைபிய்யா எனுமிடத்தில் துல்க அதா மாதத்தில், இணை வைப்போர் தடுத்த போது செய்யச் சென்றது. இணைவைப்பருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது. 'ஜிஇர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரில் (அது ஹூனைன் போர் என்று கருதுகிறேன்) வெற்றி கொள்ளப்பட்ட பொருட்களை பங்கிட்ட பொழுது செய்தது.

    நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்களாகும்' என்றார். பிறகு 'எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டதற்கு 'ஒரு ஹஜ் தான், என்றார்கள்.' (நூல்:புகாரி)

    உம்ராவை எந்த மாதத்திலும் நிறைவேற்றலாம். எனினும், புனித ரமலான் மாதத்தில் உம்ராவை நிறைவேற்றுவது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும். 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகராகும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஹஜ் வேறு வணக்கம். உம்ரா வேறு வணக்கம். உம்ரா செய்வதினால் மட்டுமே ஹஜ் கடமை நீங்கிவிடாது. எனினும், ரமலானில் உம்ரா செய்தால், ஹஜ் செய்வதால் எந்த நன்மை கிடைக்குமோ அதே நன்மை கிடைக்கும். 'ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ரா வரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்குச் சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' (அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) அபூஹரைரா (ரலி ), நூல் :முஸ்லிம்

    • தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு.
    • நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    தீய பார்வைகளை தீய்த்துவிடும் நோன்பு

    பார்வைகள் பலவிதம். அவற்றில் அழகிய பார்வையும் உண்டு. அன்பு பார்வையும் உண்டு. கருணைப் பார்வையும், கலங்கியப் பார்வையும் அடங்கும். சிந்திக்கும் பார்வையும், சீர்திருத்தும் பார்வையும், கண்டிக்கும் பார்வையும் வரவேற்கப்படுகின்றன. எனினும், காமப்பார்வையையும், சந்தேகப் பார்வையையும், பயமுறுத்தும் பார்வையையும், சீரழிக்கும் பார்வையையும், கவிழ்க்கும் பார்வையையும் இஸ்லாம் தடை செய்கிறது. தீய பார்வைகளை தீய்த்துவிடும் ஆயுதமாக நோன்பு அமைந்துள்ளதாக அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்.

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். யார் அதற்கு சக்தி பெறவில்லையோ, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "(நபியே!) இறைவிசுவாசிகளான ஆடவர்களுக்கு நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்." (திருக்குர்ஆன் 24:30)

    "இன்னும் இறை விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறும்: அவர்கள் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண் டும்." (திருக்குர்ஆன் 24:31)

    ஆண்கள், பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தும்படி திருக்குர்ஆன் ஏன் பணிக் கிறது? அது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் அம்புகளாகவும் அமைந்துள்ளதாக பின்வரும் நபிமொழி தெரிவிக்கின்றன. "பார்வை, ஷைத்தானின் விஷம் தடவப்பட்ட அம்புகளில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்." (அறிவிப்பாளர்: மஸ் ஊத் (ரலி), நூல்: தப்ரானி)

    இப்னு "பாதைகளின் மீது அமர்ந்து இருப்பதை உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்' என நபி (ஸல்) கூறிய போது, 'நபியே! நாங்கள் பாதையில் அமர்ந்து பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது?' என தோழர்கள் வேண்டியதும், 'பாதைக்குரிய உரிமைகளை கொடுத்திடுங்கள்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள்.

    'பாதைக்குரிய உரிமைகள் என்ன?' என்பது பற்றி தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் 'பார்வையை தாழ்த்திக் கொள்வது, நோவினை தரும் பொருட்களை அகற்றுவது, ஸலாமுக்கு பதில் கூறுவது, நன்மையை ஏவி தீயதை தடுப்பது' என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத்,நூல்: திர்மிதி)

    தகாத பார்வைகளை தவிர்த்து வாழ்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க பொறுப்பேற்று இருக்கிறார்கள். எவர் தமது இரண்டு கண்களையும் தடுக்கப்பட்ட காட்சிகளை பார்ப்பதை விட்டும் தவிர்த்து, பார்வையை தாழ்த்தி நோன்பிருக்கிறாரோ, அவரின் நோன்பை எல்லாம் வல்ல அல்லாஹ் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, அவரை தன் கருணை பார்வையைக் கொண்டு பார்க்கிறான்.

    "எதைப்பற்றி உமக்கு(த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும், இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்." (திருக்குர்ஆன் 17:36) நோன்பாளிகளே! தடுக்கப்பட்ட பார்வைகளை விட்டும் தவிர்த்து, நோன்பின் புனிதம் காக்க முயலுங்கள்.

    • இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)
    • நபி அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண்.

    இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்த ஆயிஷா (ரலி)

    இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தோர்களில் முதன்மையானோர் சிலர். அவரில் ஒருவர் ஆயிஷா (ரலி) ஆவார். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை இரண்டு விதங்களில் அடங்கும்.

    1) பொது வெளி வாழ்க்கை,

    2) அந்தரங்க வாழ்க்கை.

    நபியின் அந்தரங்க வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சமூகப் பார்வைக்கு கொண்டு போய் சேர்த்தவர் தான் ஆயிஷா (ரலி) ஆவார். கி.பி. 614-ல் ஆயிஷா (ரலி) பிறந்தார்கள். இவரின் தந்தை இஸ்லாமிய குடியரசின் முதலாம் ஜனாதிபதி அபூபக்ர் சித்தீக் (ரலி), தாயார் உம்முரூமான் (ரலி) ஆவார். இவருக்கு 3 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இவர் மட்டுமே கன்னிப்பெண். மற்ற யாவரும் கைம்பெண்களே!

    இவரைக் கூட நபி (ஸல்) அவர்கள் தமது சுயவிருப்பத்தின்படி திருமணம் முடிக்கவில்லை. இறை உத்தரவின் பேரிலேயே திருமணம் புரிந்தார். இவர்களின் திருமணம் சொர்க்கத்தில் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகும்.

    ஆயிஷா (ரலி) அறிவித்தார்: 'நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இருதடவை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே, நான் அந்தப் பட்டுத்துணியை விலக்கிப்பார்த்தேன். அது நீ தான், அப்போது நான் (மனதிற்குள்) `இக்கனவு இறைவனிடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.' (நூல்:புகாரி)

    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அண்ணலார், ஆயிஷா (ரலி) ஆகியோரின் திருமணம் மறுபடியும் சொர்க்கத்திலேயே முடியும். 'ஆயிஷாவே! நான் உன்னை சொர்க்கத்திலும் எனது மனைவியாக அமைவதை கண்டுகொண்டேன் என நபி (ஸல்) கூறினார்கள். ' (நூல்:தப்ரானீ)

    'ஒட்டுமொத்த உலகப் பெண்களின் கல்வியை ஒரு தட்டிலும், ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வியை மற்றொரு தட்டிலும் ஒன்று திரட்டப்பட்டால், ஆயிஷா (ரலி) கல்வியே மேம்படும்' என இமாம் ஸூஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

    அதிகமான நபிமொழிகளை அறிவித்த நபர்களில் நான்காவது இடத்தை ஆயிஷா (ரலி) பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 2210 நபிமொழிகளை அறிவித்துள்ளார். ஒரு சமயம் அன்னை அவர்கள் ஒட்டுப் போட்ட சட்டை அணிந்த நிலையில் 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை தர்மம் செய்தார்கள்.

    ஒரு தடவை அவர்களிடம் இரண்டு சாக்கு மூட்டைகள் நிறைய ஒரு லட்சம் வெள்ளிக்காசுகள் வந்தது. அன்றைய தினம் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.

    ஒரு தாம்பளத்தை கொண்டுவரச் செய்து அனைத்தையும் வழங்கிவிட்டார்கள். மாலை நேரம் காய்ந்த ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் வைத்து நோன்பு திறந்தார்கள். மற்றொரு சமயம், தன்னிடமுள்ள 70 ஆயிரம் வெள்ளிக்காசுகளை ஒரே நேரத்தில் இறை வழியில் செலவிட்டார்கள்.

    அன்னையார் அவர்கள் கி.பி. 678-ம் ஆண்டு, ஹிஜ்ரி 58-ம் வருடம் ரமலான் மாதம் பிறை 17-ம் தினம் புதன்கிழமை அன்று தமது 66-ம் வயதில் மரணம் அடைந்தார்கள்.

    அன்றைய தினம் அவர்கள் பகலில் நோன்பிருந்து, இரவில் வித்ர் எனும் தொழுகையை நிறைவேற்றிய பிறகு உயிர் பிரிந்தது. அபூ ஹுரைரா (ரலி) பிரேத தொழுகை நடத்தினார். பின்பு ஜன்னத்துல் பகீ இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அன்னையார் தமது இறுதிக் காலம் வரைக்கும் இறை தியானத்தில் கழித்து இறைவனடி சேர்ந்தார். அவரது வாழ்வு நமக்கு ஒரு பாடமாகும்.

    • ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை.
    • ஒரு மாத நோன்பு 10 மாதங்கள் நோன்பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.

    ரமலானில் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை

    இஸ்லாம் சிலகாலங்களுக்கும், சிலபுனித தலங்களுக்கும் அபரிமிதமான சில சிறப்புகளை கொடுத்து அழகு பார்க்கிறது. அந்த வகையில் அந்த புனித தலங்களில், அந்த காலங்களில் வணக்க வழிபாடு புரியும்போது மற்ற புனித தலங்களில், மற்ற காலங்களில் நிறைவேற்றப்படும் வணக்கத்திற்கு கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு நன்மைகள் வாரி வழங்கப்படுகிறது.

    புனித இறையில்லம் கஅபாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறை இல்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஒரு லட்சம் மடங்கு சிறந்ததாகும்.

    புனித மதீனாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறையில்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும்.

    'நன்மையை நாடி மூன்று இறை இல்லங்களைத் தவிர வேறெங்கும் பயணம் மேற்கொள்ளப்படாது; அவை: புனித கஅபா, மஸ்ஜித்நபவீ எனும் எனது பள்ளி, மஸ்ஜித் அக்ஸா (பைத்துல் முகத்திஸ்) ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    புனித தலங்களுக்கு வழங்கிய அதே சிறப்பை இஸ்லாம் சில காலங்களுக்கும் வழங்கி கவுர வப்படுத்துகிறது. துல்ஹஜ் மாதம் முதல் பத்து தினங்கள் உலக நாட்களிலேயே சிறந்த நாட்களாக அமைகிறது. ஏனெனில் அந்த பத்து நாட்களிலும் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒருசேர நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் நல்லறம் எதுவாயினும் மற்ற மாதங்களில் நிறை வேற்றப்படும் நல்லறங்களை விட சிறந்ததாக அமைந்துவிடுகின்றன. இவ்வாறு இரண்டு பெருநாட்களும் சிறந்த நாட்களாக அமைகின்றன.

    முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் குறிப்பாக அதில் வரும் 9,10 ஆகிய இருதினங்களும் வெற்றி தினங்களாகும். இதன் வரிசையில் ரமலான் மாதமும் இணைகிறது. ரமலானில் மூன்று பத்துகள் உண்டு. அவற்றில் சிறந்தது கடைசி பத்து தினங்களாகும்.

    நபி (ஸல்) கூறியதாவது: 'ஆதமின் மகனு டைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மை கள் வழங்கப்படுகின்றன, நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரிய தாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன்.

    அவன் எனக்காக தனது உணர்வையும், உண வையும் கைவிடுகிறான் என இறைவன் கூறுகின்றான்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம்) ரமலானில் ஒரு நோன்புக்கு பத்து மடங்கு கள் நன்மை வழங்கப்படுவதால் ஒரு மாதம் நோன்பு நோற்றதற்கு 10 மாதங்கள் நோன் பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.

    அதைத்தொடர்ந்து பெருநாளை விட்டு விட்டு பிறகு வரும் ஆறு நாட்கள் நோன்பை தொடர்வதற்கும் 10 மடங்குகள் நன்மை வழங்கப்படும். 6 நாட்கள் நோன்பு நோன்பதற்கு இரண்டுமாத நோன்பின் நன்மை கிடைத்துவிடுகிறது. ஆக ரமலானிலும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உண்டு. எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு (நன்மை) உண்டு.' (திருக்குர்ஆன் 6:160)

    • பாவங்களை போக்கும் நோன்பு
    • பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்களைத் தவிர்த்திடுவீர்.

    பாவங்களை போக்கும் நோன்பு

    நன்மைகள் தீமைகளை அழித்துவிடும் படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரையாகும்.' (திருக்குர் ஆன் 11:114)

    ஒவ்வொரு மனிதனிடமும் அவன் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறு சிறு பாவங்கள், தவறுகள், சில நேரங்களில் பெரும் பாவங்களும் நிகழ்ந்து விடுகின்றன. 'ஆதமுடைய ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்பவர்கள்தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள், பாவமீட்சி தேடுபவர்களே! என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்:திர்மிதி)

    'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும்பாவங்களைத் தவிர்த்திடுவீர்!' என நபி (ஸல்)கூறினார் கள். 'அவை எவை?' என்று கேட்கப்பட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, சூனியம் செய்வது, உரிமையின்றி உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது. இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவைதான் பெரும் பாவங்கள்' என்று கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இது தவிர திருடுவது, கொள்ளையடிப்பது, பொது சொத்துக்களை மோசடி செய்வது, விபச்சாரம் புரிவது யாவும் பெரும் பாவங்களே. ஒருவரிடம் ஏற்படும் சிறுபாவங்கள் யாவும் அவர் செய்யும் நல்லறங்களின் மூலம் அழிக்கப்படுகிறது.

    'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும், நன் மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன்பாவம் மன்னிக்கப்படுகிறது. மேலும், ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    ஆபூ 'ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜூம்ஆவில் இருந்து மறு ஜூம்ஆ, ஒரு ரமலானில் இருந்து மறு ரமலான் ஆகியன அவற்றுக் கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ் லிம்)

    'யாரேனும் என்னுடைய இந்த உளுவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங் களுக்கு இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுதால் அவர்முன் செய்த சிறுபாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்:புகாரி)

    இமாம் ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்துப்போனால் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'நபி (ஸல்) அவர்களிடம் அராபா நாளின் நோன்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அது கடந்தாண்டு மற்றும் வருமாண்டு நிகழும் பாவங்களுக்கு பரிகார மாக அமையும்' என்றார்கள்.' (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இவ்வாறே பள்ளிவாசலை நோக்கி விரைவதும், தொழுகையை எதிர்பார்த்து இருப்பதும், ஐவேளைத் தொழுகைகளை பேணுதலாக தொழுவதும், ஹஜ் மற்றும் உம்ரா செய்வதும், தானதர்மம் செய்வதும், சாப்பிட்ட பிறகும், உடைமாற்றிய பிறகும் இறைவனை புகழ்வதும் ஆகிய செயல்பாடுகள் ஒரு மனிதனின் முன்செய்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு போதுமானதாகும். இவை சிறுபாவங்கள் நீக்கப்படுவதற்கு பரிகாரமாகவும், நிவாரணமாகவும் அமைந்துவிடுகின்றன.

    • புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்.
    • அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர்.

    புனித ரமலானில் சிறைபிடிக்கப்படும் ஷைத்தான்கள்

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமலான் மாதம் வந்துவிட்டால் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது சமுதாயத்தினருக்கு ரமலான் மாதத்தில் ஐந்து விஷயங்கள் பிரத்தியேகமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வேறு எந்த சமுதாயத்தினருக்கும் வழங்கப்படவில்லை.

    1) நோன்பாளியின் வாய் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக நறுமணமுள்ளதாக அமைகிறது.

    2) நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை கடலிலுள்ள மீன்கள் அவர்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகிறது.

    3) ரமலானில் ஒவ்வொரு நாளும் சொர்க்கம் அலங்கரிக்கப்படுகிறது. எல்லாம் வல்ல இறைவன் அந்த சொர்க்கத்திடம் எனது நல்லடியார்கள் தங்களை விட்டும் உலகத்துன்பங்களை தூக்கியெறிந்து விட்டும் விரைவில் உன்னிடம் வர இருக்கிறார்கள்' என்று கூறுகிறான்.

    4) அட்டூழியம் புரியும் ஷைத்தான்கள் ரமலான் மாதத்தில் விலங்கிடப்படுகின்றனர். இதனால், ரமலான் அல்லாத மாதங்களில் எந்தத் தீமை கள் சம்பவித்ததோ அந்த விதமான தீமைகள் ரமலான் மாதத்தில் நடைபெறமுடிவதில்லை.

    5) ரமலான் மாதத்தின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதரே! பாவமன்னிப்பு வழங்கப்படும் அந்த இரவு லைலத்துல்கத்ர் இரவா?' என நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை, எனினும் ஒரு வேலைக்கார னுக்கு கூலி கொடுக்கப்படுவது, அவர் தம் வேலையை முடித்தபிறகுதான்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

    மேற்கூறப்பட்ட நபிமொழியில் 'அட்டூழியம் புரியும் பெரிய ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு, சிறைபிடிக்கப்படுகின்றனர், என்று வருகிறது. இதனால், மற்ற மாதங்களில் இஸ்லாமியர்களி டம் வெளிப்படும் பாவமான பல காரியங்கள் புனித ரமலான் மாதத்தில் வெகுவாக குறைந்து விடுகிறது.இதையும் மீறி சிறு சிறு தவறுகள் ரமலானில் நடைபெறுவதற்கு காரணம் சாதாரண ஷைத்தான்களின் ஆதிக்கத் தால் நிகழ்கிறது. அவர்கள் ரமலானில் உலா வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

    மேலும், ரமலானில் பாவங்கள் குறைந்து காணப்படுவதற்கு மற்றொரு காரணம்; ஒருவர் நோன்பு நோற்பதினால் பசித்தவராக, தாகித்தவராக, பலவீனம் அடைந்தவராக இருப்பதால் அவரின் வீரியம் குறைகிறது. அவரின் தீவிர உடல் இயக்கமும் சற்று தடைப்படுகிறது. இதனால் அவரிடம் ஏற்படும் தவறுகளின் வீரியமும் குறைந்து விடுகிறது.

    'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஒடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸபிய்யா (ரலி), நூல்: புகாரி)

    மனித ரத்த நாளங்களில் ஊடுருவி விட்ட ஷைத்தான்களை கட்டுப்படுத்தும் ஆயுதம் தான் புனித நோன்பு ஆகும். பசியின் மூலமாக ரத்த ஓட்டத்தை மிதமாக்கி, தவறான எண்ணத்தை அகற்றி, அவனை வென்றுவிடலாம். ஆக புனித ரமலானில் ஷைத்தானின் நடமாட்டத்தை ஒருபுறம் இறைவன் விலங்கிட்டும், மறுபுறம் நோன்பாளிகள் நோன்பிருந்தும் கட் டுப்படுத்துகின்றனர்.

    மனிதர்களை வழிகெடுக்கின்ற ஷைத்தானின் பிடியில் இருந்து நாம் விடுபட இந்த புனித ரமலான் மாதம் வழிகாட்டுகிறது. இதை நாம் பயன்படுத்திக்கொண்டு நோன்பிருந்து, நற்செயல்கள் புரிந்து, தொழுகையில் ஈடுபட்டு நம்மை நல்வழிப்படுத்திக் கொள்வோம். வாருங்கள்

    • அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்.
    • நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்வோம்.

    அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்

    நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். இஸ்லாமிய வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் விதையாக இருந்தவர். நபி கொண்டு வந்த ஏகத்துவ ஓரிறைக் கொள்கைக்கு மக்காவில் எதிர்ப்பு கிளம்பிய போது, நபிக்கு அச்சுறுத்தல் வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அரணாக அமைந்தவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். அவரின் பிறப் பையும், தியாக வாழ்வையும், மறைவையும் இஸ்லாமியர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

    கதீஜா அவர்களின் தந்தை குவைலித் பின் அஸத் குரைஷி அஸதீ, தாய் பாத்திமா பின்த் ஸாயிதா ஆவார்கள். அவர் கி.பி. 556-ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்தார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடைபெற்றது. முந்தைய இரு திருமணமான மணமகன்களும் இறந்துவிட்டனர். இவருக்கு 40 வயதாக இருக்கும் போது விதவையான இவரை நபி (ஸல்) அவர்கள் தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள்ளுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடை நாயகியாகத் திகழ்ந்தார்கள்.

    அண்ணலார் அன்னையருடன் கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் துக்கநேரத்தில் ஆறுதல் அளிக்கும் நபராகவும், சிரமமான நேரத்தில் உற்ற தோழியாகவும், வாழ்க்கைத் துணைவியாகவும், நபியின் தூதுவச் செய்திக்கு பல எதிர்ப்புகள் வந்தபோது நபியைக் காக்கும் அரணாகவும், நபிக்கு தமது உடலாலும், பொருளாலும் உதவிய தியாகச் சீமாட்டியாகவும் திகழ்ந்தார்கள்.

    நபியின் வெற்றிக்கு பின் புலமாகவும், பக்கபலமாகவும் இருந்தார்கள். மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா (ரலி) என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப் படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கியபோது, அவர் என்னைத் தமது பொருளால் அரவணைத்துக் கொண்டார். அவர் மூலமாகத் தான் அல்லாஹ் எனக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்கினான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தைகள் வழங்காமல் செய்துவிட்டான் என நபி (ஸல்) கூறினார்.' (நூல்: அஹ்மது) 'நபி (ஸல்)

    அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) குடியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) இறப்பெய்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : உர்வா பின் சுபைர் (ரலி), நூல்:புகாரி)

    கதீஜா (ரலி) அவர்கள் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமலான் மாதத்தில் தமது 65-வது வயதில் மரணமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. தமது மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகும் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். அவரின் தோழிகளுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வந்தார்கள்.

    'நான் நபி (ஸல்) அவர்களிடம் உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே! என கேட்டபோது, அவர் புத்திசாலியாக இருந்தார். சிறந்த குணமுடையவராக இருந்தார். மேலும், அவர் வாயிலாகத்தான் எனக்கு பிள்ளைச் செல்வம் கிடைத்தது' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    'மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா (ரலி) ஆவார்.' (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: புகாரி).

    அன்னை கதீஜா இறந்த பிறகும் நபி (ஸல்) அவரை நினைவு கூர்ந்தார். நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.

    • நோன்பு பாவங்களில் இருந்து காக்கும் ஒரு கேடயம் ஆகும்.
    • நோன்பு மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம்.

    நோன்பு ஒரு கேடயம்

    நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம், முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது கோபமாக பேசினால், 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி)

    நோன்பு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. அது மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம். நோன்பு கெட்ட வார்த்தைகளை பேசுவதை, பொய்யான பேச்சுக்களை பேசுவதை, பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் கேடயம்.

    முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும், சண்டை சச்சரவுகளில் இருந்து பாது காப்பு அளிக்கும், தகாத பார்வைகளை தடுக்கும்,பேராசைகளை அழிக்கும் கேடயம் நோன்பாகும். விபச்சாரத்தில் இருந்து தடுத்து, கற்பைக் காக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் கேடயம் நோன்பு.

    அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறுவது: "நோன்பு ஒரு கேடயம் ஆகும். அதனை உடைக்காமல் இருக்கும் வரை ... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்" (நூல்: நஸயீ, இப்னு மாஜா)

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையா, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "ரமலானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!' என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவரை அடித்தார்கள்". (நூல்: புகாரி)

    நோன்பு என்பது ஒரு கேடயம். கேடயம் போர் வீரர்களையும், அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் நன்றாக பாதுகாப்பது போன்று, நோன்பும் நோன்பாளிகளை பாவமான காரியங்களில் இருந்தும் பாதுகாக்கிறது. நோன்பாளிகளும் அந்த கேடயத்தை அணிந்து, பாவமான காரியங்களில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கிறார்கள்.

    நோன்பு எனும் கேடயத்தை உடைக்காமல் இருக்கும் வரைக்கும் நோன்பாளிகள் முழுமையான நோன்பாளிகளாகவே இருக்கிறார்கள். ஏதேனும் பாவச்செயல்களில் ஈடுபடும் போது, அந்த கவசத்தை உடைத்து, நோன்பையும் முறித்து விடுகிறார்கள். அதன் நன்மைகளையும் இழந்து விடுகிறார்கள்.

    "ஒரு மனிதர்நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது' என்று கேட்டார்?. 'பொய், புறம் பேசுவதினால்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்". "யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித் திருப்பது மட்டுமல்ல! தகாத காரியங்களில் இருந்து விலகி இருப்பதும் ஆகும். இத்தகைய நோன்பே கேடயமாக இருந்து நோன்பாளிகளை பாதுகாக்கிறது. நாமும் நமது நோன்பை சிறந்ததாக அமைத்துக்கொள்வோம்.

    ×