search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-9)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-9)

    • அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்.
    • நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்வோம்.

    அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்

    நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். இஸ்லாமிய வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் விதையாக இருந்தவர். நபி கொண்டு வந்த ஏகத்துவ ஓரிறைக் கொள்கைக்கு மக்காவில் எதிர்ப்பு கிளம்பிய போது, நபிக்கு அச்சுறுத்தல் வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அரணாக அமைந்தவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். அவரின் பிறப் பையும், தியாக வாழ்வையும், மறைவையும் இஸ்லாமியர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

    கதீஜா அவர்களின் தந்தை குவைலித் பின் அஸத் குரைஷி அஸதீ, தாய் பாத்திமா பின்த் ஸாயிதா ஆவார்கள். அவர் கி.பி. 556-ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்தார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடைபெற்றது. முந்தைய இரு திருமணமான மணமகன்களும் இறந்துவிட்டனர். இவருக்கு 40 வயதாக இருக்கும் போது விதவையான இவரை நபி (ஸல்) அவர்கள் தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள்ளுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடை நாயகியாகத் திகழ்ந்தார்கள்.

    அண்ணலார் அன்னையருடன் கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் துக்கநேரத்தில் ஆறுதல் அளிக்கும் நபராகவும், சிரமமான நேரத்தில் உற்ற தோழியாகவும், வாழ்க்கைத் துணைவியாகவும், நபியின் தூதுவச் செய்திக்கு பல எதிர்ப்புகள் வந்தபோது நபியைக் காக்கும் அரணாகவும், நபிக்கு தமது உடலாலும், பொருளாலும் உதவிய தியாகச் சீமாட்டியாகவும் திகழ்ந்தார்கள்.

    நபியின் வெற்றிக்கு பின் புலமாகவும், பக்கபலமாகவும் இருந்தார்கள். மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா (ரலி) என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப் படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கியபோது, அவர் என்னைத் தமது பொருளால் அரவணைத்துக் கொண்டார். அவர் மூலமாகத் தான் அல்லாஹ் எனக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்கினான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தைகள் வழங்காமல் செய்துவிட்டான் என நபி (ஸல்) கூறினார்.' (நூல்: அஹ்மது) 'நபி (ஸல்)

    அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) குடியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) இறப்பெய்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : உர்வா பின் சுபைர் (ரலி), நூல்:புகாரி)

    கதீஜா (ரலி) அவர்கள் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமலான் மாதத்தில் தமது 65-வது வயதில் மரணமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. தமது மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகும் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். அவரின் தோழிகளுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வந்தார்கள்.

    'நான் நபி (ஸல்) அவர்களிடம் உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே! என கேட்டபோது, அவர் புத்திசாலியாக இருந்தார். சிறந்த குணமுடையவராக இருந்தார். மேலும், அவர் வாயிலாகத்தான் எனக்கு பிள்ளைச் செல்வம் கிடைத்தது' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    'மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா (ரலி) ஆவார்.' (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: புகாரி).

    அன்னை கதீஜா இறந்த பிறகும் நபி (ஸல்) அவரை நினைவு கூர்ந்தார். நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.

    Next Story
    ×