search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "19th Day of Fasting"

    • மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு.
    • மனதை கட்டுப்படுத்துவது சவாலான காரியம்.

    மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு

    ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டது. (அதன்மூலம்) நீங்கள் மனத்தூய்மையுடையோர் ஆகலாம்." (திருக் குர்ஆன் 2:183)

    நோன்பின் மூலம் மனது தூய்மை அடைவதாக திருக்குர் ஆன் அழகாக தெரிவிக்கிறது. மனதை கட்டுப்படுத்தி, அதை தூய்மைப்படுத்தும்போது, மனிதனின் பிற உறுப்புகள் தானாகவே தூய்மை அடைந்து விடுகின்றன.

    "அறிந்து கொள்ளுங்கள், மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீர்பட்டு விட்டால், உடலுறுப்புகள் யாவும் சீராகிவிடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகிவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் உள்ளம்". (அறிவிப்பாளர்:நுஅமான் பின் பஸீர் (ரலி), நூல்:புகாரி)

    நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும், அடிப்படையான காரணம் மனக்கட்டுப்பாட்டை பெறுவதற்குதான் நோன்பு கடமையாக்கப்பட்டு இருக்கின்றது என இஸ்லாம் கூறுகிறது.

    மனக்கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆம், மனதை தூய்மையாக வைத்திருப்பதினால் கிடைக்கும். மனதை தூய்மையாக வைத்திருந்தால் தானாகவே, ஆரோக்கியம் கிடைத்துவிடும், பசிக்கொடுமையை தெரிந்து கொள்ளலாம். மனஅமைதி கிடைத்திடும், ஏழைகள் மீது இரக்கம் பிறந்துவிடும், மன இச்சைகளை ஒதுக்கித் தள்ள முடியும், ஏழைகளுடன் உறவாடி, அவர்களின் சுமைகளை அறிந்து கொள்ள முடியும்.

    மனதை கட்டுப்படுத்தி, அதை பக்குவப்படுத்தவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்களுக்கு நோன்பு வைப்பதன் மூலம் அவை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அன்புச்சகோதரர்களே! உலகில் ஈ, தேனீ ஆகிய இரண்டையும் காணுகின்றோம். ஈ மலத்திலும் உட்காரும், மலரிலும் உட்காரும். ஆனால் தேனீமலரில் மட்டுமே உட்காரும். ஈ நமது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பது; தேனீயோ உடல் நலனுக்கு உதவுவது; தேனை சேகரித்துத் தருகிறது. "அதில் (தேனில்) மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கிறது" என்று திருக்குர் ஆன் (16:69) குறிப்பிடுகின்றது.

    மனித மனம் ஈயைப் போன்றது. அதை தேனீ போல மாற்ற வேண்டும். அதாவது நல்லதை நினைக்கவும், சொல்லவும், செய்யவும் பழக்க வேண்டும். இந்த முயற்சியுடைய வாழ்க்கைக்குத் தான் இஸ்லாமிய வாழ்க்கை என்று பெயர். சிறந்த உடையை உடுத்திக் கொள்வதிலும், நறுமணம் பூசிக் கொள்வதிலும், சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்வதிலும், அழகிய முறையில் வீட்டை அலங்கரிப்பதிலும் ஆர்வமும், அக்கறையும் நாம் அதிகம் காட்டுகின்றோம்.

    அதேநேரத்தில், மனதை கட்டுப்படுத்து வதிலும், அதை சுத்தப்படுத்துவதிலும் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம் என்பதை எண்ணிப்பாருங்கள். மனதை கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலான ஒரு காரியம். அந்த சவாலை சமாளிக்கும் ஒரு அற்புதமான களம் தான் நோன்பு.

    மனித உறுப்புகளை மனசு கட்டுப்படுத்துகிறது. அந்த மனதை நோன்பு கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துகிறது. மனதை கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்த நினைக்கும் முஸ்லிம்களே, ரமலான் மாதம் முப்பதிலும் நோன்பு வையுங்கள். உடலும், உள்ளமும் சுத்தமாகும். மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

    ×