search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chaturagiri"

    • சதுரகிரி கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூலானது.
    • ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மாதத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி முன்னிலையில் சதுரகிரி மலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. அதில் ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஒரேநாளில் 35 ஆயிரம் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • 18 சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளன.மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    வருடந்தோறும் சதுரகிரியில் ஆடி அமாவாசை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி முதல் இன்று வரை 6 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    முதல் நாளான 12-ம் தேதியில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் தங்கி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேி வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறினர்.

    நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் சுந்தர மகாலிங்கம், சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் 18 சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுந்தர மகாலிங்க சுவாமி,சந்தன மகாலிங்க சுவாமி,சுந்தரமூர்த்தி சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நேற்று அதிகாலை 3.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதையிலும், மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோப்புகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மலைக் கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சதுரகிரி வழிபாடு முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகள் பற்றாக்குறையால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    நக்சல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. முருகன் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட நக்சலைட் தடுப்பு சிறப்பு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகளை கோயில்பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். வனத்துறை மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இறுதி நாளான இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர்.

    • சதுரகிரியில் கடும் வெயிலிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
    • காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலை மேல் உள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த மாதம் சித்திரை மாத அமாவாசையை (19-ந் தேதி முன்னிட்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று 17-ந்தேதி அதிகாலை முதல் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்- சிறுமிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலை அடிவாரத்தில் திரண்டனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர். கோடைகாலம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வெயில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதை காண முடிந்தது.

    மலையேறுபவர்களின் வசதிக்காக மலைப்பாதைகளில் உள்ள சங்கிலிபாறை, வழுக்குப்பாறை, காராம் பசு சந்திப்பு, விலாவடி கருப்பசாமி கோவில் பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சிரமத்துடன் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தது.

    • சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் அடிவாரத்தில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீர் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள சங்கிலிபாறை, வழுக்குப்பாறை, மாங்கனிஓடை, பிளாவடி கருப்பணசாமி பகுதிகளில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த முறை பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பதாக வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆடிஅமாவாசை அன்று சதுரகிரிக்கு வர இயலாத பக்தர்கள் ஆடி பவுர்ணமி நாளில் வருவது உண்டு. ஆனால் தொடர் மழை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அறியாமல் இன்று சதுரகிரி அடிவாரத்துக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • சதுரகிரி கோவிலில் நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையில், கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, நாளை (25-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும். எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்படும்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளியூர் பஸ்கள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லிபுத்தூர்) திலீப்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன், வத்திராயிருப்பு வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×