என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரகிரி கோவிலில்  நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
    X

    சதுரகிரியில் கலெக்டர் மேகநாதரெட்டி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    சதுரகிரி கோவிலில் நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

    • சதுரகிரி கோவிலில் நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையில், கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, நாளை (25-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும். எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்படும்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளியூர் பஸ்கள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லிபுத்தூர்) திலீப்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன், வத்திராயிருப்பு வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×