search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank manager"

    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களது வீட்டின் கீழ் பகுதியில் வேலைக்கார பெண் ராணி என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி வீட்டில் இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் வேலைக்கார பெண் ராணி ஆகியோரை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களது வாயில் துணியை திணித்து விட்டு பீரோவில் இருந்த 206 பவுன் நகையை அள்ளி தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முகமூடி கும்பலை பிடிக்க துணை கமி‌ஷனர் முத்துசாமி தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளையர்களின் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    யோகசேரன் தனது மனைவியின் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். மதுரையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நகைகளை வங்கியில் இருந்து எடுத்து வந்திருந்தார்.

    நேற்று காலைதான் மதுரையில் இருந்து திரும்பி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்நேற்று மதியம் வீட்டுக்கு வந்த முகப்பேரில் வசிக்கும் அவர்களது மகள் செந்தமிழ் காவியா தனது 175 பவுன் நகைகளையும் வங்கி லாக்கரில் வைக்கும்படி பெற்றோரிடம் கொடுத்து சென்று உள்ளார். அந்த நகையுடன் சேர்த்து மொத்தம் 206 பவுன் நகையை கொள்ளையர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    இந்த கொள்ளையில் வேலைக்கார பெண் ராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முகமூடி கொள்ளை கும்பல் கதவை தட்டிய போது ராணிதான் கதவை திறந்து விட்டு உள்ளார். அவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிடாதது ஏன்? யோகசேரன் வீட்டில் நகை இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து ராணியை தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திட்டமிட்டு முகமூடி கும்பலை வரவழைத்து நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ராணியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். முகமூடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணியின் செல்போனை கைப்பற்றி கொள்ளை நடந்த நாளில் அவர் யார்? யாருடன் பேசினார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர். #PallavaramRobbery 
    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் யோகசேரன் (வயது 55). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ரெப்போ வங்கியில் மேலாளராக உள்ளார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களுக்கு திலகன் என்ற மகனும், செந்தமிழ்காவியா என்ற மகளும் உள்ளனர். திலகன், பல் டாக்டர் ஆவார். செந்தமிழ் காவியாவுக்கு திருமணமாகி கணவருடன் சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார்.

    யோகசேரனின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவரது வீட்டில் மதுரையைச் சேர்ந்த ராணி என்ற பெண், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். வீட்டின் மாடியில் யோகசேரன், தனது மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். தரைதளத்தில் உள்ள வீட்டில் வேலைக்காரி ராணி வசித்து வருகிறார்.



    மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட செந்தமிழ் காவியா, தனது 175 பவுன் தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதற்காக நேற்று மதியம் தனது தாய் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் யோகசேரன், சுப்புலட்சுமி மட்டும் இருந்தனர். திலகன் வீட்டில் இல்லை. நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டு வேலைக்காரி ராணி, மாடிக்கு சென்று கதவை தட்டினார். யோகசேரன் கதவை திறக்கவும் அவர் உள்ளே சென்றார்.

    அப்போது திபுதிபுவென 5 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். முகத்தில் முகமூடி அணிந்து இருந்த அவர்கள், கத்தி கூச்சலிட்டால் கொன்று விடுவோம் என்று தங்கள் கையில் இருந்த கத்தியை காட்டி யோகசேரனை மிரட்டினர்.

    பின்னர் யோகசேரன், அவருடைய மனைவி சுப்புலட்சுமி, வேலைக்காரி ராணி ஆகிய 3 பேரையும் கத்திமுனையில் மிரட்டி தாங்கள் தயாராக கொண்டு வந்த சணலை கொண்டு கைகளை கட்டினர். சத்தம் போடாமல் இருக்க 3 பேரின் வாயில் துணியை வைத்தும் அடைத்தனர்.

    அதன்பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்த கொள்ளையர்கள், அதில் லாக்கரில் வைக்கும்படி கூறி அவரது மகள் செந்தமிழ்காவியா கொடுத்துச்சென்ற 175 பவுன் நகைகள் மற்றும் சுப்புலட்சுமி அணிந்து இருந்த நகைகள் என மொத்தம் சுமார் 206 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

    பின்னர் அந்த நகைகளை தாங்கள் கொண்டு வந்த ஒரு பையில் போட்டுக்கொண்டனர். நாங்கள் தப்பிச்செல்லும் வரையில் யாரும் கத்தி கூச்சலிடக்கூடாது. மீறி கத்தினால் கொன்று விடுவோம் என்று மீண்டும் மிரட்டி விட்டு, நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

    சிறிது நேரத்துக்கு பிறகு யோகசேரன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரின் கைகட்டுகளை அவிழ்த்து விட்டனர். இதுபற்றி பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சென்னை தெற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதாகவும், கொள்ளையர்களில் 2 பேர் காதில் கடுக்கன் அணிந்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள், செந்தமிழ் காவியாவை பின்தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டனரா? அல்லது வங்கி மேலாளர் என்பதால் வீட்டில் நகை, பணம் இருக்கும் என்ற எண்ணத்தில் வந்து கைவரிசையை காட்டினரா? என விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கொள்ளை நடந்த நேரத்தில் அந்த வழியாக வந்து சென்றவர்கள் குறித்து அந்த பகுதியை சுற்றி சாலைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    கொள்ளையர்கள் யாருடனாவது செல்போனில் பேசினார்களா? என அந்த நேரத்தில் அந்த பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 206 பவுன் நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PallavaramRobbery 
    சென்னை தரமணியில் வங்கி மேலாளரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    தரமணி சர்தார் பட்டேல் சாலையை சேர்ந்தவர் உமர் அகமது கான். அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 10-ந்தேதி தேனாம்பேட்டையில் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்காக மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் உமர் அகமது கானை கத்தி முனையில் மிரட்டி அவரிட மிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் உமர் அகமது கான் புகார் செய்தார். கொள்ளையர்கள் வந்த ஆட்டோவின் எண்ணையும் போலீசில் கொடுத்தார். அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பறித்த ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கோபிநாத் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    நாகர்கோவிலில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அச்சு ஆர்.சந்திரன் (வயது 28). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, தங்கியிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

    வழக்கமாக காலை 8.45 மணிக்கு வீட்டில் இருந்து வங்கிக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் நேற்று காலை 9.30 மணிக்கு மேல் ஆகியும் அவர் வங்கிக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

    இதனால் வங்கி ஊழியர்கள் அவருடைய வீட்டுக்கு சென்று அக்கம், பக்கத்தினர் உதவியோடு பார்த்தனர். கதவு அடைக்கப்பட்டு இருந்தது. வெளியில் இருந்து கதவை தட்டிப்பார்த்தும் எந்த பதிலும் உள்ளே இருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அச்சு சந்திரன் பிணமாக தொங்கினார்.

    உடனே போலீசார் அவருடைய உடலை இறக்கி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உறவினர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட அச்சு சந்திரன் கடந்த ஓராண்டாக நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றினார். அதற்கு முன்பாக மேலாளர் பயிற்சியை அவர் நாகர்கோவிலிலேயே மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

    குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? காதல் பிரச்சினை ஏதாவது இருந்ததா? வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர், வங்கி மேலாளர் அச்சு சந்திரன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அவரது உடல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். 
    நாகர்கோவிலில் அரசு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். கேரள தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மகன் அஞ்சு என்ற சந்திரன். (வயது 28). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள அரசு வங்கியில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.

    வேலைக்கு செல்ல வசதியாக புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.தினமும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் பாங்கிக்கு சென்றுவிடுவார்.

    கடந்த வாரம் இவரது சகோதரருக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கடந்த திங்கள் கிழமை விடுமுறை எடுத்து விட்டு ஊருக்கு சென்றார். செவ்வாய் கிழமை நாகர்கோவில் திரும்பி வந்த அவர் அன்றே பணிக்கு திரும்பினார்.

    வங்கியில் நேற்று அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டபின்பு வீடு திரும்பிய அஞ்சு,மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அஞ்சு வங்கிக்கு செல்லவில்லை. இதனால் பாங்கி ஊழியர் காலை 9 மணி அளவில் அஞ்சுவின் செல்போனுக்கு போன் செய்தார். போனை யாரும் எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் அஞ்சுவை தேடி அவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்தார். அங்கு சென்று பார்த்த போது,அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே அஞ்சு தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த ஊழியர் இது பற்றி வங்கி அதிகாரிகளுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து அஞ்சுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.மேலும் அஞ்சுவின் பெற்றோருக்கும் அவர் இறந்த தகவலை தெரியப்படுத்தினர். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் வருகிறார்கள்.

    அஞ்சு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? வேலை பளு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் இன்று வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×