search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snow fog"

    • பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
    • மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.

    நேற்று இரவு முதலே கடுமையான பனிமூட்டம் சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    காலை 8 மணி வரை புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. பல இடங்களில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் பனிமூட்டத்துடன் புகையும் சேர்ந்து காணப்பட்டது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில்கள், அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன. இன்று காலை வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.

    திருத்தணியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் திருத்தணிக்கு காய்கறி, கரும்புடன் சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனை பாபு என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி பாபு மீது சரக்கு வேன் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதிக்கு வெல்லம், வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சிங்காரவேலு என்பவரின் சரக்கு ஆட்டோமீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் இருந்த பாபு, சூர்யா, வள்ளியம்மா, ஜெயலா, மற்றும் எதிரில் சரக்கு ஆட்டோவில் வந்த சிங்காரவேலன் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருத்தணி, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, செய்யூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அதிக அளவிலான குளிர் இருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள வாகனங்கள் வருவது கூட தெரியாததால் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பழைய பக்கிங்காம் பாலத்தில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.

    • தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.
    • கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    அத்துடன் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் திரண்டு பகல் நேரமானது இரவு போல காட்சியளிக்கின்றன.

    கடந்த 2 தினங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. அடிக்கடி உறைபனி, பனிப்பொழிவு, மேகமூட்டம் என மாறி மாறி வருவதால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.

    நேற்று மதியத்திற்கு பிறகு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மூடு பனி நிலவியது. அத்துடன் சாரல் மழையும் பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

    மூடுபனி நிலவியதால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலைகளில் வரக்கூடிய எந்த வாகனமும் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வந்தனர்.

    தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.

    மக்களும் அருகில் வந்து, தான் தங்களுக்கு எதிரில் யார் வருகின்றனர் என்பதையே பார்க்க வேண்டி உள்ளது.

    அத்துடன் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனியுடன் உறைபனியும் சேர்த்து கொட்ட தொடங்கியது. வீடுகள் முன்பு வைத்திருந்த பொருட்கள், வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து விழுந்தது. அதனை காலையில் பொதுமக்கள் அகற்றி தங்கள் வேலைகளை தொடங்கினர். தொடர்ந்து மாறி மாறி வரும் சீதோஷ்ண நிலையால் நீலகிரியில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இன்று காலை 8 மணியை தாண்டியும் குளிர் நிலவி கொண்டிருக்கிறது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சுவர்ட்டர், குல்லா அணிந்தபடியே செல்வதை காணமுடிந்தது.

    குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்கள் தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகிறார்கள். நீலகிரியில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் விடுதிகள், லாட்ஜூகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் குறைந்து, மேகமூட்டமாகவே காணப்பட்டது. இன்று காலை 9 மணியை தாண்டியும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    அத்துடன் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. வீடுகளில் உள்ள தரைகள் அனைத்தும் ஏ.சியில் இருப்பதை போன்று குளு, குளு என்று காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே சுவர்ட்டர், தலையில் குல்லா மற்றும் குளிர் தாங்க கூடிய ஆடைகளை அணிந்து வெளியில் சென்று வருகின்றனர்.

    கடும் குளிர் நிலவுவதால் மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேகமூட்டம் நிலவுவதால், அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.

    • பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர்.
    • தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    சிக்கிம்:

    கிழக்கு சிக்கிம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகாங்கு ஏரிப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களது வாகனங்களை அங்கிருந்து நகரத்தை முடியாமல் தவித்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    • வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து ரெயில்களும் இன்று தாமதமாக சென்றன.
    • அதிகாலையில் வெளியில் வந்தவர்கள் 50 மீட்டர் தொலைவுக்குள் உள்ளவர்களைகூட பார்க்க முடியாத பனிபுகை மூட்டத்துக்குள் சிக்கி தவித்தனர்.

    புதுடெல்லி:

    பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம், இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக வடமாநிலங்களிலும், மத்திய மாநிலங்களிலும் கடந்த மாதம் முதல் கடுமையான குளிர் நிலவுகிறது.

    அதிலும் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு குளிரின் தாக்குதல் அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த 2 தினங்களாக தலைநகர் டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு பனி மூட்டமும், குளிரும் காணப்பட்டது.

    பொதுவாக டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சராசரி அதிகபட்ச தட்ப வெப்பநிலை 27.32 டிகிரி செல்சியசாக இருக்கும். 1901-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு டெல்லியில் குளிர் நிலவியது. 122 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தாங்க முடியாத குளிர் ஏற்பட்டுள்ளது.

    வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நைனிடால், தர்மசாலா, டேராடூன் போன்ற நகரங்களில்தான் பனிப்பொழிவும், குளிர் காற்றும் தாங்க முடியாதபடி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த நகரங்களை விட டெல்லியில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது.

    கடந்த ஒரு வாரமாக டெல்லி மற்றும் வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் மக்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாதபடி முடங்கி உள்ளனர். கடுமையான குளிர் காரணமாக தீ மூட்டம் போட்டு சுற்றி அமர்ந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) வடமாநிலங்களில் மிக மிக கடுமையான குளிர் காற்று வீசியது.

    அருணாச்சலப் பிரதேசத்தில் 11 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் மக்கள் பனியோடு உறைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். டெல்லியில் இன்று காலை 3 டிகிரி செல்சியசாக தட்ப வெப்பநிலை இருந்தது. இதனால் டெல்லி மக்கள் கடுமையான அவதிக்குள்ளானார்கள்.

    வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து ரெயில்களும் இன்று தாமதமாக சென்றன. அதிகாலையில் வெளியில் வந்தவர்கள் 50 மீட்டர் தொலைவுக்குள் உள்ளவர்களைகூட பார்க்க முடியாத பனிபுகை மூட்டத்துக்குள் சிக்கி தவித்தனர்.

    பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் காற்று வீசும் என்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் நாளை வரை மிக கடுமையான குளிர் இருக்கும் என்று வானிலை இலாகா ரெட் அலர்ட் விடுத்துள்ளது. டெல்லிக்கு வந்து சேர வேண்டிய 2 ரெயில்கள் இன்று தாமதமாக சென்று சேர்ந்தன.

    • நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்டது.
    • இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டி ருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் , பொத்த னூர், பாண்ட மங்கலம், வெங்கரை, கொந்தளம்,சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம் ,கொத்தமங்கலம், குரும்பல

    மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிரா மணி, சுள்ளிப்பாளையம், குப்பிரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளை யம், ஒத்தக்கடை, பரமத்தி, கபிலர்மலை, திடுமல், தி. கவுண்டம்பாளையம் , பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்டது.

    இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டி ருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது. அதிக பனிப்பொழிவின் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்திற்கு சிரமப்பட்டு சென்றனர். அதேபோல் பணியின் காரணமாக அதிக குளிர் ஏற்பட்டது. அதிகாலையில் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் தங்களது உடலை வருத்திக் கொண்டு அவதிப்பட்டு சென்றனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சென்றது. நாளை, மார்கழி மாதத்தின் முதல் நாள் வரும் முன்னரே கார்த்திகை கடைசி நாளான இன்று கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • விழிப்புணர்வுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தல்

    ஆம்பூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை திடீரென சாரல் மழை பெய்தது.

    வேலூர் மாநகர பகுதியில் திடீர் மழை காரணமாக காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்தனர். பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத தெருக்கள் சேறு சகதியுமாக காட்சியளித்தன. வேலூர் மாநகரப் பகுதியில் மழை காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கடும் பனி கொட்டியது.

    ஆம்பூரில் இன்று காலை பனி மூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் காலை விடிந்த பிறகும் வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டபடி சென்றன.

    நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    நெடுஞ்சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்ல வேண்டுமென போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • விழிப்புணர்வுடன் செல்ல அறிவுறுத்தல்
    • கடும் குளிரால் வேலூரில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த வாரத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது.தற்போது குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாகவே வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது.

    சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள முடங்கியுள்ளனர். வெயில் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.

    பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    பனிப்பொழிவு, குளிர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • ஊட்டி, குன்னூா் மற்றும் கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் மூடுபனியும் நிலவுகிறது.
    • பல தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு தொழிலாளா்கள் வரவில்லை. இதனால் தேயிலை தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கூடலூர், பந்தலூர், தேவாலா, ஊட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுந்தன. நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.

    தற்போது கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது மட்டும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், ஊட்டி, குன்னூா் மற்றும் கோத்தகிரியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும் மூடுபனியும் நிலவுகிறது.

    இதன் காரணமாக பல தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு தொழிலாளா்கள் வரவில்லை. இதனால் தேயிலை தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு கூட மக்கள் வெளியில் வருவதில் சிரமம் ஏற்பட்டது.

    வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.

    தொடர்ந்து சாரல் மழை மற்றும் மூடுபனி காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குளிரில் இருந்து தப்பித்து கொள்ள மக்கள் தீயை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    ×