search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனி மூட்டம்"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    29-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

    31.01.2024 முதல் 02.02.2024 வரை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    03.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
    • மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.

    நேற்று இரவு முதலே கடுமையான பனிமூட்டம் சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    காலை 8 மணி வரை புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. பல இடங்களில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் பனிமூட்டத்துடன் புகையும் சேர்ந்து காணப்பட்டது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில்கள், அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன. இன்று காலை வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.

    திருத்தணியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் திருத்தணிக்கு காய்கறி, கரும்புடன் சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனை பாபு என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி பாபு மீது சரக்கு வேன் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதிக்கு வெல்லம், வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சிங்காரவேலு என்பவரின் சரக்கு ஆட்டோமீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் இருந்த பாபு, சூர்யா, வள்ளியம்மா, ஜெயலா, மற்றும் எதிரில் சரக்கு ஆட்டோவில் வந்த சிங்காரவேலன் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருத்தணி, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, செய்யூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அதிக அளவிலான குளிர் இருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள வாகனங்கள் வருவது கூட தெரியாததால் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பழைய பக்கிங்காம் பாலத்தில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.

    • தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.
    • கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    அத்துடன் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் திரண்டு பகல் நேரமானது இரவு போல காட்சியளிக்கின்றன.

    கடந்த 2 தினங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. அடிக்கடி உறைபனி, பனிப்பொழிவு, மேகமூட்டம் என மாறி மாறி வருவதால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.

    நேற்று மதியத்திற்கு பிறகு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மூடு பனி நிலவியது. அத்துடன் சாரல் மழையும் பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

    மூடுபனி நிலவியதால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலைகளில் வரக்கூடிய எந்த வாகனமும் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வந்தனர்.

    தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.

    மக்களும் அருகில் வந்து, தான் தங்களுக்கு எதிரில் யார் வருகின்றனர் என்பதையே பார்க்க வேண்டி உள்ளது.

    அத்துடன் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனியுடன் உறைபனியும் சேர்த்து கொட்ட தொடங்கியது. வீடுகள் முன்பு வைத்திருந்த பொருட்கள், வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து விழுந்தது. அதனை காலையில் பொதுமக்கள் அகற்றி தங்கள் வேலைகளை தொடங்கினர். தொடர்ந்து மாறி மாறி வரும் சீதோஷ்ண நிலையால் நீலகிரியில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இன்று காலை 8 மணியை தாண்டியும் குளிர் நிலவி கொண்டிருக்கிறது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சுவர்ட்டர், குல்லா அணிந்தபடியே செல்வதை காணமுடிந்தது.

    குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்கள் தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகிறார்கள். நீலகிரியில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் விடுதிகள், லாட்ஜூகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் குறைந்து, மேகமூட்டமாகவே காணப்பட்டது. இன்று காலை 9 மணியை தாண்டியும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    அத்துடன் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. வீடுகளில் உள்ள தரைகள் அனைத்தும் ஏ.சியில் இருப்பதை போன்று குளு, குளு என்று காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே சுவர்ட்டர், தலையில் குல்லா மற்றும் குளிர் தாங்க கூடிய ஆடைகளை அணிந்து வெளியில் சென்று வருகின்றனர்.

    கடும் குளிர் நிலவுவதால் மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேகமூட்டம் நிலவுவதால், அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
    • டெல்லிக்கு வந்து சேரும் ரெயில்கள் காலதாமதம்.

    வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளனர்.

    தலைநகர் டெல்லி மட்டுமல்லாமல் உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களை பார்க்க முடியாது அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    மிகவும் அதிக அளவில் பனிமூட்டம் அடர்ந்து காணப்படும் என இந்திய வானிலை மையம் டெல்லிக்கு "ரெட் அலர்ட்" பிறப்பித்துள்ளது.

    டெல்லியில் 25 மீட்டருக்கும் குறைவான தூரத்தைக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பதால் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் 110 விமான சேவைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநில சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர பலியானார். பெரேலியில் சரக்கு லாரி ஒன்று பெரேலி- சுல்தான்புர் நெடுஞ்சாலையில் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    • எதிரே வரும் நபர் தெரியாத வகையில் கடும் பனி மூட்டம்.
    • வெப்ப நிலை 9.4 டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் நிலவியது.

    வடஇந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. காலையில் மக்கள் எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். வாகனங்கள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால் விமான சேவை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    டெல்லி விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இன்று காலை டெல்லி விமான நிலையம் மூலம் பயணம் செய்ய இருந்த பயணிகள், விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு சேவை குறித்து தெரிந்து கொள்க என டெல்லி விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

    அதேபோல் ஐதராபாத்திலும் கடும் பனி மூட்டம் காரணமாக பெங்களூரில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்ற விமானம், மீண்டும் பெங்களூருவுக்கே திருப்பி அனுப்பிவிடப்பட்டது.

    • கோவையில் இரவில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.
    • பருவமழை தொடங்கிய பிறகுதான் பனிமூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

    கோவை:

    கோவையில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே மாவட்ட அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. ஒருசில இடங்களில் திடீர் மழையும் பெய்து வருகிறது. மேலும் வானம் எப்போதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதுதவிர இரவு நேரங்களில் அதிகப்படியான குளிரும் நிலவி வருகிறது.

    அதிலும் குறிப்பாக கோவையில் உக்கடம், அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ், பீளமேடு, வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் ரோட்டில் எதிரே வருபவர் கூட சரியாக தெரியாத அளவுக்கு மூடுபனி கொட்டுகிறது. எனவே அந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அதிகாலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கின்றன.

    கோவையில் இரவில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. பருவமழை தொடங்கிய பிறகுதான் பனிமூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

    மலை மாவட்டமான நீலகிரியில் எப்போதும் பனியின் தாக்கம் இருக்கும். தற்போது குன்னூர், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு நீர்த்திவலைகளுடன் கூடிய மூடுபனி காணப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக குவிந்துள்ள சுற்றுலாபயணிகள் நீலகிரி மாவட்டத்தின் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவித்து செல்கிறார்கள்.

    எதிரில் வருபவர் கூட தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளதால் சுற்றுலா வாகன டிரைவர்கள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    • பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர்.
    • தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    சிக்கிம்:

    கிழக்கு சிக்கிம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகாங்கு ஏரிப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களது வாகனங்களை அங்கிருந்து நகரத்தை முடியாமல் தவித்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
    • அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது.

    பொன்னேரி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    சில நாட்கள் பனியின் தாக்கம் குறைந்து இருந்தாலும் மீண்டும் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகம் இருந்தது.

    அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது. சாலையில் முன்னால் மற்றும் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி காணப்பட்டது. காலை 8 மணி வரை பனியின் தாக்கம் இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. காலை 8 மணிக்கு பின்னரே பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
    • அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது.

    ஆலந்தூர்:

    வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. தாம்பரம், ஓரகடம், படப்பை, ஆலந்தூர், மீனம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் சென்னைக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது.

    இதேபோல் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்களும் தாமதமாக சென்றன.

    • அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர்.
    • தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மார்கழி மாதத்தில் பனி அதிகமாக பெய்யும். கடந்த ஒரு வாரமாக பனி குறைந்துவிட்ட நிலையில் இன்று காலை திடீரென பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர். இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. ஏற்கனவே பனிமூட்டம் ஊருக்கு வெளியில் மட்டும் தெரியும். ஆனால் தற்போது ஊரில் உள்ளேயும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த பனிமூட்டம் எங்கோ தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேல்மலையனூரில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு ஒளிரவிட்டபடி சென்றனர்.நேற்று முன்தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் சாரல் மழை பெய்தது. ஆனால் இன்று பனிமூட்டம் காணப்படுகிறது

    • மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது.
    • கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நகர்ப்பகுதிகளிலும் பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இரவு, பகல் என 24 மணி நேரமும் கொடைக்கானலில் தற்போது ஒரே சீதோசனம் நிலவி வருகிறது. தெருக்கள் மற்றும் சாலைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்கவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்யும் மழை காலையிலும் தொடர்வதால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள் பின்னர் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

    கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேய முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் இதுபோன்ற ஒரு சீதோசனம் கொடைக்கானலில் காணப்படுவது அபூர்வமான நிகழ்வாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகளும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

    • 18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது.
    • விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பொதுமக்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.

    இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன் அரசு பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சிறுமலை நோக்கி சென்றது. பஸ்சை தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக திண்டுக்கல் கள்ளிபட்டியை சேர்ந்த சேகர் இருந்தார்.

    திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் சிறுமலை பகுதி முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது.

    18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்க ஓடி வந்தனர்.

    பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 ஆம்புன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40), சிறுமலை தென்மலையை சேர்ந்த பழனியம்மாள் (65), பாஸ்கரன் (62), கார்த்திக் (26), கணேசன் (67), ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த கோபால் (40) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர் சங்கீதா வெள்ளி மலை, கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் ஆகியோர் பொதுமக்களை அழைத்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×