search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம், திருவள்ளூரில் கடும் பனி மூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி
    X

    காஞ்சிபுரம், திருவள்ளூரில் கடும் பனி மூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

    • காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது.
    • திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏரிகள் முழு அளவை எட்டி உள்ளன.

    மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் கடும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. மழைக்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு வானிலை மாறி உள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து இருந்தது.

    கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரி கரை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஊட்டியை போல் மாறியது.

    இதனால் பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.

    திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. எங்கும் பார்த்தாலும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்பட்டது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் பனி மூடி குளிர் பிரதேசமாக காட்சியளித்தது.

    இதன் காரணமாக திருவள்ளூரில் முக்கிய சாலையான சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்றன.

    சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கூட தெரியாத அளவிற்கு பனி படர்ந்து இருந்தது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் காலை 8 மணி வரை பனி நீங்காததால் எந்த நடைமேடையில் ரெயில் வருகிறது என தெரியாமல் மேம்பாலத்தின் மீது நின்றபடி பயணிகள் பார்த்துவிட்டு அதன் பின் நடைமேடைகளுக்கு சென்றனர்.

    கடும் பனி மூட்டம் நீடித்தாலும் சில இடங்களில் இன்றும் லேசான சாரல் மழை பெய்தது.

    Next Story
    ×