search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manju virattu"

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.


    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

    • காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
    • காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

    இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    • கூலி தொழிலாளியான சிங்கராவணன் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி என்ற கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அந்தவகையில் இந்தாண்டு இன்று காலை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தன.

    வழக்கம் போல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்ததை ஆரவாரம் செய்து ஏராளமானோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.

    இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிங்கராவணன் (வயது42) என்பவர் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த காளை அவரை முட்டி தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
    • காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் உயிரிழந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார்.

    இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றன.

    வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, கட்டில், குக்கர், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்து ஓடிய காளைகள் அங்கு திரண்டிருந்தவர்கள் பலரை முட்டிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) என்பவர், மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர், விவசாயி பெரியபுலியன் (வயது 80). மாட்டு பொங்கல் அன்று அதே பகுதியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோவில் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளை ஒன்று, அந்த வழியாக ஓடிவந்தது. திடீரென அந்த காளை பெரியபுலியனை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது.

    இதில் காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) என்ற பார்வையாளர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

    இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நடந்த மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிக அளவில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

    இதற்கிடையே காளையை அடக்க முயன்றபோது புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பொன்னமராவதி அருகே மஞ்சு விட்டின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மறுநாள் மஞ்சுவிரட்டு நடைபெறும். இதனை பார்ப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தில் முக்கிய பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.

    இதே போல் இந்த ஆண்டு நேற்று தீவாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், இன்று விராச்சிலையில் மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக 1000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

    பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாடு திடீரென பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் பரளி கிராமத்தை சேர்ந்த கருப்பையா (52) என்பவர் வயிற்றில், மாடு முட்டி கிழித்தது. குடல் சரிந்த நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கருப்பையா இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் அருகே இன்று நடந்த மஞ்சு விரட்டில் மாடுகள் முட்டித் தள்ளியதில் 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் மாணிக்கநாச்சியம்மாள் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலை மஞ்சு விரட்டு நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை பார்வையிட்டனர்.

    இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    மஞ்சுவிரட்டின்போது காளைகள் தொழுவத்தில் அவிழ்த்து விடப்படுவது வழக்கம். இதற்கு மாறாக காளைகள் இன்று கண்டர மாணிக்கம் கண்மாயில் அவிழ்த்து விடப்பட்டன. இதனால் காளைகள் ஆங்காங்கே சிதறி ஓடி கண்மாய்களில் குவிந்திருந்த பார்வையாளர்கள் மீது முட்டித்தள்ளியது.

    இதில் அமராவதி புதூரைச்சேர்ந்த சேவுகன் (வயது 48), வலையபட்டி ராசு (23), அழகாபுரி சின்னசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சேவுகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வலையபட்டி ராசு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அழகாபுரி சின்னசாமி கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மஞ்சு விரட்டில் 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மஞ்சுவிரட்டின் போது பார்வையாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×