search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bribery Case"

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிவு செய்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறி உள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • லஞ்சம் வாங்கிய தாசில்தார் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார்.
    • விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயி. இவர் வண்டல்மணல் அள்ளுவதற்காக கடந்த 2019 ஜூன் மாதம் செஞ்சி தாசில்தார் ஆதிமூலம் என்பவரை அணுகினார். அப்போது தாசில்தார் ஆதிமூலம், விவசாயி வடிவேலுவிடம் ரூ.8 ஆயிரம் பணம் கேட்டார்.

    அதிர்ச்சி அடைந்த விவசாயி வடிவேல் இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதனடிப்படையில் தாசில்தார் ஆதிமூலம் பணத்துடன் கையும்-களவுமாக பிடிபட்டு கைதானார். இது தொடர்பாக அப்போதைய விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த அண்ணாதுரை, தாசில்தார் ஆதிமூலத்தை சஸ்பெண்ட் செய்தார்.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஊழல் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.

    இதில் பல்வேறு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் சாட்சியாக தற்போது வேளாண்துறை இயக்குனராக இருக்கும் முன்னாள் கலெக்டர் அண்ணாதுரை சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரை, நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #JanardhanaReddy #BriberyCase
    பெங்களூரு:

    பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக சையத் அகமது பரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி இருந்தது.

    அந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்திடம் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக கடந்த 10-ந் தேதி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். பின்னர் மறுநாள் (11-ந் தேதி) நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறி ஜனார்த்தனரெட்டியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜனார்த்தனரெட்டி சார்பில், பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலையில் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ.2 லட்சம் பிணைத்தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 
    சிபிஐ அதிகாரி லஞ்சம் பெற்றதாக புகார் கொடுத்த ஐதராபாத் தொழிலதிபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
    புதுடெல்லி:

    ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீது புகார் அளித்த சதீஷ் சனா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சிபிஐ சிறப்பு இயக்குனர் மீது புகார் அளித்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் ஐதராபாத் போலீசார் தனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்படி காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற சதீஷ் சனாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

    மேலும், ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட சிபிஐ சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
    ×