search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
    X

    ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிவு செய்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறி உள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×