search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை"

    • தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
    • கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் பல்வேறு சிறப்புகளையும் பெருமையும் கொண்ட பழமையான மதுரை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் மதுரை, சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரை வன உயிரினச் சரகம், மதுரை சமூக நலக் காடுகள் சரகம், திருமங்கலம் சமூக நலக்காடுகள் சரகம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

    இந்த வனச்சரகப் பகுதிகளில் அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொட்டாம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, அழகர்கோவில் மலை ஆகிய சிறுசிறு மலைகள் உள்ளது.

    இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாததால் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை, புலி, யானை போன்ற பெரிய வனவிலங்குகள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்றாலும் மான், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட சிறுசிறு வன விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் வசிக்கின்றன.

    கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்களும், பறவைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மர்மமான முறையில் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இது தொடர்பான தகவலை அறியும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் கடந்த 2015 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை எத்தனை வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது? எத்தனை வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது? எத்தனை வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது? என்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுரை வனக்கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பம் வந்தது.

    இது தொடர்பாக அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை வன கோட்டத்தை பொறுத்தவரை மயில், காட்டு மாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், குரங்கு உட்பட 28 அரிய வகை உயிரினங்கள், பறவைகள் ஊர்வன வகைகள் உயிரிழந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக மயில் 435 உயிரிழந்ததுள்ளது. அதேபோல் புள்ளிமான் 258, காட்டு மாடு 71, காட்டுப்பன்றி 43, குரங்கு 40 என மொத்தமாக சுமார் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 93 வன உயிரினங்கள் சாலை விபத்தின் மூலம் மட்டும் உயிரிழந்துள்ளது.

    மதுரை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் வன விலங்குகளுக்கு விஷம் வைத்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வன உயிரினங்கள் உயிரிழக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வனக்கோட்ட அலுவலகம், வயல்வெளிகளில் மயில்களுக்கு விஷம் வைத்தல், சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வெளிகளில் வனவிலங்குகள் சிக்கி பலியாகிறது.

    அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வன விலங்குகள் வேட்டையாடிய அதன் இறைச்சி மற்றும் விலங்குகள் கறி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்வெளிகளில் நெற்பயிரை உண்ண உணவு தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொலை செய்யும் சம்பவம் மதுரை அதை சுற்றியுள்ள பகுதியில் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக உயிரினங்கள் வேட்டையாடுதல் மற்றும் வன உயிரினங்கள் குற்றம் தொடர்பாக கண்காணிக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு கீழ் நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மண்டல வாரியாக வன காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடும் முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மேலும் வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர்பாக வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் வன அதிகாரிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மதுரையில் சிவப்பு பகுதி என்று அறியக்கூடிய பகுதிகளில் அதிக வனவிலங்குகள் உயிரிழந்த பகுதிகளாக மதுரை ரெயில் நிலையம், சூர்யா நகர் ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்டவற்றில் அதிக அளவு மயில்கள் இறந்துள்ளது. சிவரக்கோட்டை, திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி பகுதியில் புள்ளி மான்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளது. உசிலம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, உள்ளிட்ட பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழப்பு அதிகம் உள்ளது.

    மேலும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், படிப்படியாக வனவிலங்குகள் மீது தாக்குதல் மற்றும் வனவிலங்குகள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் வாழ்வியல் முறைகள்,வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளது.

    இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் எந்திர மயமாகி விட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும்.

    அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் ஒத்துழைப்புகள் நல்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் தருண்குமார் கூறுகையில், வறட்சி காலங்களில் சாலை விபத்து மூலம் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் அருந்தும் வகையில் உணவுகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையை கடக்கும் குறிப்பிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் வன விலங்குகளை உயிரிழக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வன விலங்குகள் வேட்டையாடும் சம்பவங்கள் படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • 19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
    • அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    மதுரையில் பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி நடைபெற உள்ளதால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படுகிறது.

    19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.

    21-ந்தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு 46-49, 53, 70, 72, 74-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.
    • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மதுரை:

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற் காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 7 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.

    எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் பாதை வழியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வருகை தந்தார். அவர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்ற பின்னரும் அவரது வாகனம் அங்கேயே நினறு கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத் துமாறு கூறினர். ஆனால் கார் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சற்று நேரத்தில் காரை அகற்றாவிட்டால் லாக் செய்து விடுவதாக கூறினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். கைகளை நீட்டியவாறு அவர்கள் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    கவலைப்படாதீர்கள் 2026-ல் நம்மதான்

    மேலும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியிடம், தொண்டர் ஒருவர் உரத்த குரலில் 'கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான்' என்று கூறினார். அதைக்கேட்ட எடப்பாடி பழனிசாமி சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

    • மாரிமுத்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை காசிம் ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மங்கலம் பிள்ளை மகன் மாரிமுத்து (வயது 27). இவருக்கு மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி நகரில் சொந்தமாக கடை ஒன்று உள்ளது.

    இந்த கடையை கடந்த ஒன்றரை வருடங்களாக பூட்டியே வைத்துள்ளார். இந்த நிலையில் அதன் தற்போதையை நிலையை பார்த்து அறிந்துகொள்வதற்காக மாரிமுத்து அங்கு சென்றார். அந்த சமயம் அந்த பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று அந்த பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மேலும் அங்கிருந்து தீயுடன் கூடிய புகையும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தபோது பைக்கில் வந்த மூன்று ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

    அந்த ஆசாமிகள் மாரி முத்துவை பார்த்து என்றாவது ஒருநாள் பெட்ரோல் குண்டு வீசி உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர். அப்போதுதான் மாரிமுத்துவை அவர்கள் கொலை செய்ய வந்தவர்கள் என்று தெரிந்தது. இந்த பெட்ரோல் குண்டு மாரிமுத்துவை குறி வைத்து வீசியபோது அந்த குண்டு அவர் மேல் படாமல் கடையில் மொட்டை மாடியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மாரிமுத்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்ய பெட்ரோல் குண்டு வீசிய மோட்டர் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    அவர்களை மாரிமுத்து இதற்கு முன்னர் பார்த்தது இல்லை என்றும், எனவே அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி என்றால் அவர்களை அனுப்பியது யார்? எதற்காக அனுப்பினார்கள்? அவர்களுக்கு இடையேயான முன்விரோதம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாட்டுத்தாவணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன.
    • பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    மதுரை:

    உயர்கல்வி பயின்று சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் தணியாத வேட்கை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எல்லோருக்கும் இந்த விருப்பம் நிறைவேறும் என்பதில் உறுதியில்லை.

    குறிப்பாக உயர்கல்வி படிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு போதிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் மூன்றாம் பாலித்தனவர் என்று கூறப்படும் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கான வாய்ப்பு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

    தற்போது சமூகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளிலும், கல்வி கூடங்களிலும், இதர தனியார் நிறுவனங்களிலும் அவர்களுக்கான வாய்ப்புகளும், உரிமைகளும் மெல்ல மெல்ல கிடைக்க தொடங்கி உள்ளன. இதற்கு தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன. குறிப்பாக திருநங்கைகள் சமூகத்தில் இதர பாலினத்தவரைபோல இயல்பாக கலந்து செயல்படும் வகையில் அனைவருக்கும் மனமுதிர்ச்சி ஏற்படவில்லை.

    இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு தடைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் உரிய இடத்தை அடைய முடியாத நிலையும் நீடிக்கிறது.

    இந்த சூழலில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மஸ்தானி என்ற திருநங்கை ஒருவர் தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி உயர் கல்வி பயில்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இணைந்துள்ளார். இந்த அனுபவம் குறித்து மஸ்தானி கூறுகையில், நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது எனது உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் என்னால் இயல்பாக பிறருடன் பழக இயலாத நிலை ஏற்பட்டது.

    இதை நான் கூறிய போது எனது குடும்பத்தினரும் என்னை தனிமைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் நான் என்னை திருநங்கையாக உணர தொடங்கினேன். அதே நேரத்தில் 12-ம் வகுப்பு கடந்த 2019-ம் ஆண்டு 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி ஆனேன். ஆனால் என்னை திருநங்கையாக மாற்றிக்கொள்வதற்கு குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் என்னால் மேல்படிப்பு படிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகள் சமூகத்தினருடன் இணைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு உயர்கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இருந்துள்ளது. அவருக்கு கைகொடுக்க மாற்று பாலினத்தவர் ஆதார மையம் முன்வந்தது.

    ஏற்கனவே திருநங்கையாக மாறி சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளையும் சந்தித்து இன்றைக்கு தனித்துவ ஆளுமையாக உயர்ந்துள்ள பிரியா பாபு என்பவர் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தை நிறுவி, இதுபோன்று திருநங்கைகளாகவும், மாற்று பாலினத்தவராகவும் மாறி வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், அரசின் சலுகைகள், அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து மஸ்தானிக்கும் உயர்கல்வி பயில்வதற்கு அந்த ஆதார மையம் முயற்சி மேற்கொண்டது. இதுகுறித்து அதன் நிறுவனர் பிரியா பாபு கூறுகையில், மஸ்தானி தொடக்கத்தில் மாற்று பாலினத்தவரோடு இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டிருந்தார். அவருடைய லட்சியமான உயர் கல்வி பயில்வதற்கு உதவ எங்களது நிறுவனம் முன் வந்தது. நாங்கள் அவர் கல்வி பயில நிதி உதவி செய்ய முயன்றோம்.

    மேலும் அவர் தனது புதிய அடையாளத்துடன் கல்லூரியில் இணைந்து பயில்வதற்கான முயற்சியை செய்தோம். இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு ஆதரவு அளிக்க முன்வந்தனர். மஸ்தானி உயர்கல்வி பயில்வதற்கு நிச்சயம் உதவுவோம் என உறுதி அளித்தனர். இது குறித்து மஸ்தானி மேலும் கூறுகையில், மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் முயற்சியில் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நான் பி.ஏ. (பொருளாதாரம்) படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

    நான் உயர்கல்வி பயில வேண்டும் என்பது தான் எனது தாயாரின் ஆசையாகும். ஆனால் திருநங்கையாக மாறிய பிறகு குடும்பத்தினரின் உதவி இல்லாத நிலையில் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் மூலமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    தற்போது நான் உயர் கல்வி படிப்பது எனது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அடைந்த போதிலும் என்னை அவர்களோடு சேர்த்து கொள்ள விருப்பம் இல்லை. அதே நேரத்தில் கல்லூரியில் பெண்கள் விடுதியில் தங்கி பயில நிர்வாகம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    சமூகத்தில் மாற்று பாலினத்தவர் தற்போது காவல் துறை அதிகாரிகளாகவும், இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரிகளாகவும் உயர்ந்து வருகின்றனர். மஸ்தானி போன்ற மாற்று பாலினத்தவர் உயர்கல்வியும், சட்டமும் பயின்று அனைத்து மாற்று பாலினத்தவர் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முன்வரும் போது இன்னும் கூடுதலான வாய்ப்புகளும், தன்னம்பிக்கையும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஏற்படும் என்பது நிதர்சனம். பாலியல் பேத மற்ற வகையில் அதற்கான வழியை உருவாக்கி கொடுக்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமையாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    • மார்ச் 14 ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின.
    • இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத வா்கில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். இதன்பிறகு, நீண்டகாலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல்&டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின.

    நீண்ட காலம் கழித்து கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்பித்தது.

    இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று கடந்த 10 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு இன்று வழங்கியது.

    • மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் உறுப்பினரா சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
    • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது

    புதுடெல்லி:

    மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி நியமிக்கப் படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார்.

    சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் புதி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    அதில் சீயான் விக்ரம் டி.வி.எஸ் வண்டியில் மளிகை பொருட்கள்  மற்றும் காய்கறிகளுடன் வண்டியை ஓட்டுகிறார். படத்தின் நாயகியான துஷரா விஜயன் வண்டியில் முன்னாடி  உட்கார்ந்துக் கொண்டு மகிழ்ச்சியாக சிரித்துப் பேசியபடியுள்ள காட்சிகள் அமைந்துள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
    • மதுரையில் மதியம் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை.

    குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை வரை 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென்று சுமார் 2.30 மணி அளவில் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக, மதுரையில் உள்ள அண்ணாநகர், கேகே நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், தெற்கு வாசல், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், கிராஸ் ரோடு, செல்லூர், தத்தனேரி, சர்வேயர் காலனி ஐயர் பங்களா என்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் எதிரொலியால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
    • விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    கோடை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகளும் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கும், விடுமுறையை கழிக்க மலைப்பிரதேசங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமானோர் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    குளிர்சாதன வசதியுடன், குறைந்த மணி நேரத்தில் இடத்தை சென்றடைய ஏதுவாக விமான பயணத்தை மக்கள் தேர்வு செய்கின்றனர்.

    இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை-தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-கோவை இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 16 விமானங்களும், சென்னை-மதுரை இடையே 10 விமானங்களுக்கு பதில் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை-பெங்களூரு இடையே 16 விமானங்களுக்கு பதில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை-ஐதராபாத் இடையே 20 விமானங்களுக்கு பதில் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    • இதன் படப்பிடிப்பு மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
    • கிராமத்துக் கதையில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.




    இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.தற்போது மதுரையை அடுத்த மேலூர் கல்லம்பட்டி கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு 10 நாட்களுக்கு இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.




    இப்படம் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மதுரை கிராம பகுதியில் நடந்து வருவதால் படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    கிராமத்துக் கதையில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்' படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார்.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மதுரை:

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

    வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ×