என் மலர்
உலகம்
- ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார்.
- மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.
ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அங்கு பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சிக் குழுவினர் வரவேற்பு அளித்தனர். அந்நாட்டில் வெண்டா மொழி பேசும் மக்களின் பாரம்பரியத்தின் படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.
அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
- இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலத்தின் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் சிவில் நிர்வாகம், மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய தொல்லியல் தளமான செபாஸ்டியாவின் பெரும் பகுதிகளை கையகப்படுயத்தும் உத்தரவை கடந்த நவம்பர் 12 வெளியிட்டது.
குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் அமைப்பான Peace Now கூற்றுப்படி, இந்தத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என பீஸ் நவ் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
செபாஸ்டியா இடிபாடுகளுக்கு அடியில் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியா இருந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் இது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேல் இந்த தளத்தை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்த 2023-ல் அறிவித்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 9.24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

மேற்கு கரை ஆக்கிரமிப்பு:
இஸ்ரேல் 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை ஆக்கிரமித்தது.
அது முதல், மேற்குக் கரையில் 500,000-க்கும் மேற்பட்ட யூதர்களை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் 200,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் குடியேறியுள்ளனர்.
இதற்கிடையே அண்மையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பெத்லஹேமுக்கு அருகில் ஒரு புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் நிலையத்தை அமைத்துள்ளனர்.
மேலும் அங்கு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
அண்மையில் மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் வன்முறையை ஆவணப்படுத்திய பாலஸ்தீனிய ஆர்வலர் ஐமன் கிரையேப் ஓடே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர் விசாரணையற்ற காலவரையற்ற தடுக்குக்காவலில் அடைக்கபடலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் 1967-ல் ஆக்கிரமித்ததில் இருந்து அப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.
அங்கு 850-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாகவோ அல்லது பலத்த சேதமடைந்ததாகவோ செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
- லாகூரில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- வெடிப்பின் தீவிரம் காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு பசை தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
லாகூரில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
சம்பவம் நடந்த உடனேயே தொழிற்சாலை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். அதே நேரத்தில் மேலாளரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
வெடிப்பின் தீவிரம் காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக பைசலாபாத் துணை ஆணையர் ராஜா ஜஹாங்கிர் அன்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மீட்புக் குழுக்கள் இதுவரை இடிபாடுகளில் இருந்து 15 உடல்களை மீட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.
- கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் உயிரிழப்பு.
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.
சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.
மேலும், துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- தேஜஸ் போர் விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது. விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முந்தைய நாள் தேஜஸ் போர் விமானத்தில் எரிபொருள் கசிந்ததாக கூறப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேஜஸ் போர் விமான்ததில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. பொதுமக்கள் இல்லாத பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
- முத்தமிடுதல் என்பது மனிதர்கள் இந்த உலகுக்கு வருவதற்கு முன்பே இருந்துள்ளது.
- மனிதர்கள் மட்டுமின்றி சிம்பன்சி குரங்குகள், போனோபோ குரங்குகள் போன்றவை அனைத்தும் முத்தமிடுகின்றன.
உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது என்பது தொடர்பாக நீண்ட காலமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் போது உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பழக்கம் தோன்றி சுமார் 2 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். மனித குரங்குகள் பற்றி அவர்கள் தொடர்ந்து நடத்தி வந்த ஆய்வில் இந்த ருசிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே 2 குரங்குகள் ஒன்றுடன் ஒன்று வாயை வைத்து அழுத்தின. இதையே முத்தம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முத்தம் என்பது ஒரு இனத்துக்கு மட்டும் இல்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளனர்.
அதாவது முத்தமிடுதல் என்பது மனிதர்கள் இந்த உலகுக்கு வருவதற்கு முன்பே இருந்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி சிம்பன்சி குரங்குகள், போனோபோ குரங்குகள் போன்றவை அனைத்தும் முத்தமிடுகின்றன.
மனிதர்கள் வருவதற்கு முன்பு மனிதர்களை போலவே இருக்கும் நியாண்டர்தால் என்ற இனம் வசித்துள்ளது. அந்த நியாண்டர் தால்களும் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் நியாண்டர் தால்கள் வசிக்கும் காலத்திலேயே மனிதனும் தோன்றி விட்டதால் மனிதர்களும், நியாண்டர்தால்களும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியின் முடிவு தெரிவிக்கிறது.
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த முத்தமானது பல பரிணாமங்களை தாண்டி இப்போதும் அன்பின் அடையாளமாக திகழ்கிறது.
- சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.
கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.
அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார்.
- முதல் 12 இடங்களில் வராத இந்திய அழகி
- அழகி போட்டிக்கான விளம்பர நிகழ்வில் பங்கேற்காத பாத்திமா போஷ்
தாய்லாந்தில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டியில் மெக்சிகோவைச் சேர்ந்த பாத்திமா போஷ் பட்டத்தை வென்றார். இறுதிப் போட்டியில் சிலி, கொலம்பியா, கியூபா, குவாடலூப், மெக்ஸிகோ, புவேர்ட்டோ ரிக்கோ, வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மால்டா மற்றும் கோட் டி'ஐவோயர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இடம்பெற்றனர்.
தாய்லாந்தின் பிரவீனர் சிங் முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். இரண்டாவது ரன்னர் அப்பாக வெனிசுலாவின் ஸ்டெபானி அபாசாலியும், மூன்றாவது ரன்னர் அப்பாக பிலிப்பைன்ஸின் மா அஹ்திசா மனலோவும், நான்காவது ரன்னர் அப்பாக கோட் டி ஐவரியை சேர்ந்த ஒலிவியா யாஸும் தேர்வானர். இந்தியாவின் மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை.
முன்னதாக நவம்பர் 4 ஆம் தேதி மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்களுடனான சந்திப்பின் போது, அழகுப் போட்டிக்கான விளம்பர நிகழ்வில் போஷ் பங்கேற்கவில்லை என அவரை குற்றம் சாட்டி, நிகழ்ச்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் நவத் இட்சராகிரிசில் பாத்திமா போஷை திட்டினார். இதனால் அரங்கில் இருந்து பாத்திமா போஷ் வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக மற்ற நாட்டு அழகிகள் சிலரும் வெளிநடப்பு செய்தனர். நேரலையில் இந்த பிரச்சனை ஒளிபரப்பானதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. போட்டி நடத்திய இரண்டு நடுவர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் தலைவரான ரவுல் ரோச்சா, இப்போட்டியின் மற்ற நிகழ்வுகளில் இட்சராகிரிசில் பங்கேற்க தடைவிதித்தார். இந்த சர்ச்சைகளை மீறி பாத்திமா போஷ் மகுடம் சூடியது சுயமரியாதைக்கு கிடைத்த அங்கீகாரம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- விதிகளை மீறினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
- இந்த போட்டியில் 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணிநேரத்துக்குள் 186 பேர் வெளியேற்றப்பட்டனர்.
சீனாவில் பல்வேறு வினோதமான போட்டிகள் நடத்தப்படுவது சகஜம். அந்த வகையில் பாட்டோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வினோத போட்டி நடத்தப்பட்டது.
அதாவது நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் படுத்தே இருக்க வேண்டும் என்பது தான் விதி. இந்த போட்டியில் படுத்திருக்கும் போது செல்போன் பயன்படுத்தலாம். படிக்கலாம். உணவு வரவழைக்கலாம். ஆனால் உட்காரவோ, எழுந்து நிற்கவோ, கழிவறைக்கு செல்லவோ கூடாது. விதிகளை மீறினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
கடந்த 15-ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணிநேரத்துக்குள் 186 பேர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், ஒரு இளைஞர் அதிகபட்சமாக 33 மணிநேரம் 35 நிமிடங்கள் வரை படுத்திருந்து போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு ரொக்கப்பரிசாக ரூ.37 ஆயிரம் வழங்கப்பட்டது.
- தனக்கு தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த மனைவி மேரிபெத் மீது அவர் போலீசில் புகார் செய்தார்.
- 14 மற்றும் 15-வது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி மேரிபெத் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர் மேரிபெத் லூயிஸ். இவர் தனது 62-வது வயதில் 13-வது குழந்தை பெற்றெடுத்து அங்குள்ள பத்திரிகை செய்திகளில் இடம்பிடித்திருந்தார்.
மேரிபெத் லூயிசுக்கு பிறந்த முதல் 5 குழந்தைகள் இயற்கையான கர்ப்பம் மூலம் பிறந்தன. மற்ற குழந்தைகள் ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்தவை ஆகும். 13 குழந்தைகள் இருந்ததால் மேரி பெத்தின் கணவர் பாப் இனிமேல் தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்தார்.
ஆனால் 13 குழந்தைகள் இருந்தும் மேரிபெத் லூயிசுக்கு குழந்தைகள் மீதான ஆசை அடங்கவில்லை. குழந்தை பெற்றெடுப்பதில் தீராத ஆசை கொண்ட மேரிபெத், கணவருக்கு தெரியாமலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு தனது 68-வது வயதில் அவருக்கு வாடகைத்தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கான பெற்றோர் உரிமை சான்றிதழ், தபாலில் வந்தபோது தான் மேரிபெத்தின் கணவர் பாப்பிற்கு 14, 15-வது குழந்தைகள் பிறந்த விஷயமே தெரியவந்தது.
தனக்கு தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த மனைவி மேரிபெத் மீது அவர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மேரிபெத் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு மேரிபெத் - பாப் தம்பதியே குழந்தைகளின் சட்டப்பூர்வ பெற்றோர் என தீர்ப்பு அளித்தது. ஆனால் குழந்தைகளை வளர்த்து வரும் காப்பகம் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவமனையில் வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் கணவர் பெயரில் மேரிபெத் போலியாக கையெழுத்திட்டு உள்ளார். மேலும் கோர்ட்டு விசாரணையின்போது காணொலி காட்சி மூலம் கணவர் ஆஜராவதுபோல் மேரிபெத் ஆள்மாறாட்டம் செய்ததும் தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் 14 மற்றும் 15-வது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி மேரிபெத் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.
- வங்கதேச நிலநடுக்கத்தில் ஆறுபேர் உயிரிழப்பு.
- அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
வங்கதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காலை 10:08 மணிக்கு, நர்சிங்டியிலிருந்து தென்மேற்கே 13 கி.மீ தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் கொல்கத்தா, மேற்குவங்கம், அசாமின் குவஹாத்தி போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். முன்னதாக, இன்று பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. நிலநடுக்கத்தின் மையம் 135 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் மோதல் காரணமாக வடக்கு மற்றும் தென்கிழக்கு வங்கதேசம் பூகம்ப பாதிப்பு மண்டலங்களாக அறியப்பட்டாலும், இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட மத்திய பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட குறைவான வாய்ப்புகளே இருக்கும் பகுதி என USGS தெரிவித்துள்ளது.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
கான்பெரா:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள சிறுவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.






