என் மலர்tooltip icon

    உலகம்

    • தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் எச்சரித்தார்
    • ஜப்பானுக்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சீனா அறிவுறுத்தியது.

    அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.

    ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், தைவான் விவகாரத்தில் ராணுவ தாக்குதல் நடத்த ஜப்பான் துணிந்தால், உறுதியான பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோவுக்கு சீனா கடிதம் எழுதியுள்ளது.

    தைவானை கைப்பற்ற சீனா, ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறியிருந்த நிலையில், அந்த கருத்துக்கள் ராணுவ அச்சுறுத்தலுக்கு சமம் என கவலை தெரிவித்து ஐநாவிடம் சீனா முறையீடு செய்துள்ளது. 

    • ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.

    ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    முன்னதாக, தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

    ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டில் ஜார்ஜியா இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

    • ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
    • பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

    2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

    இந்தநிலையில் நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா அரசு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் கூறும்போது, மரியா கொரினா மீது குற்றவியல் விசாரணைகள் உள்ளன. எனவே அவர் வெனிசுலாவில் இருந்து வெளியே சென்றால் தப்பி ஓடியவராகக் கருதப்படுவார் என்றார்.

    • யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.
    • ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது.

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர்.

    அந்த வகையில் இந்த மாதம் 12 ஆம் தேதி கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவரின் அலட்சியத்தால் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.

    பிரார்த்தனைக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

    அவர் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்காமல் தள்ளி வைத்ததாக தெரியவந்துள்ளது.

    இதன் விளைவாக, மெழுகுவர்த்தி உருகி தீப்பிடித்தது. தீ மொத்தம் உள்ள மூன்று தளங்களுக்கும் பரவி கோவிலை முழுமையாக ஆட்கொண்டது. பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையில் கோவில் அதிக சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது. இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து முடிந்த பின் கோயில் புனரமைப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
    • இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.

    கடந்த மாதம் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் அறிவித்த மிகப்பெரிய பணிநீக்கங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

    நிறுவனம் சுமார் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது மென்பொருள் பொறியாளர்கள்தான் என்று தெரிவித்துள்ளது.

    அதாவது, 14,000பேரில் 10 இல் 4 பேர் (சுமார் 1800 க்கும் அதிகமான) பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டனர்.

    பொறியாளர்களைத் தவிர, கேமிங், விளம்பரங்கள் மற்றும் பரிசோதனைத் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.

    பணிநீக்கங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் பொருளாதாரம் அல்லது செயற்கை நுண்ணறிவு அல்ல என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி கூறினார்.

    இது நிறுவனத்தின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மாற்றம் என்று அவர் தெரிவித்தார். நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ஆக மாற்றுவது, தேவையற்ற துறைகளைக் குறைப்பது மற்றும் வேகமாக வேலை செய்வது எங்கள் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

    2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.  

    • ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
    • இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.

    துபாய்:

    துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் விமான கண்காட்சி நடந்தது.

    இதில் இந்தியா, அமெ ரிக்கா, ரஷியா, சீனா உள் பட 115 நாடுகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.

    இதற்கிடையே 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. அப்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

    திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானி நமன் சியால் உயிரிழந்தார்.

    இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமான விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேஜஸ் போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல் முறையை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.

    இதில் விமானம் திரும்பப்பட்டு மீண்டும் மேலே சென்று தனது முழு சுழற்சியை நிறைவு செய்யும். இது ஒரு சிக்கலான சூழற்சி இல்லை என்றாலும், விமானி சிறிது நேரம் தலை கீழாக இருந்த பின்னர் விமானம் தரையில் மோதியது. விமானம் தலைகீழாக இருந்து மீண்டும் மேலே எழுப்ப வேண்டும். ஆனால் அதுபோன்று நடக்கவில்லை.

    விமானம் மீண்டும் மேலே செல்ல முயன்ற போது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஒரு போர் விமானம் அதிக வேகத்தில் இத்தகைய சூழற்சிகளை செய்வது மிகவும் கடினம்.

    ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றனர். மேலும் திடீரென்று உந்துதல் சக்தியை இழந்திருக்கலாம் அல்லது கட்டுபாட்டு கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா அல்லது வேறு காரணமா என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

    இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.

    விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலும் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறும் வசதி உள்ளது. ஆனாலும் விபத்தில் விமானியான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்து உள்ளார். இவர் இமாச்சல பிரதேச மாநிலம், கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார்.

    நமன் சியால் கடந்த 2009-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பயிற்சியை தொடங்கினார். நமன் தன் பெற்றோர் மற்றும் குழந்தையுடன் கோவை சூலூர் விமானப்படை தளம் வளாகத்தில் வசித்து வந்தார். அவரது மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் இருந்து வருகிறார்.

    நமன் சியாலின் தந்தை ஜெகன்நாத் இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் சிறிது காலம் பணியாற்றினார்.

    • நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர்.
    • சந்திப்பின் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ 'பாசிஸ்ட்' என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என டிரம்ப்பும் விமர்சித்தனர். மம்தானி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூ யார்க்கிற்கான நிதி குறைக்கப்படும் என டிரம்ப் தேர்தலுக்கு ஒரு நாள் முன் மிரட்டினார். இருப்பினும் நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர்.

    இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அவர்களின் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது டிரம்ப் மம்தானியுடன் இணக்கமாக நடந்து கொண்டார்.

    மேலும் சந்திப்பின் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இது மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள சந்திப்பு என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில், "நாங்கள் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம், இது ஒரு நல்ல, மிகவும் பயனுள்ள சந்திப்பு. நாங்கள் இருவரும் நேசிக்கும் இந்தப் நகரம் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு இலக்கு எங்களிடம் உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வீட்டுவசதி மற்றும் உணவு விலைகள் போன்ற சில விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் "நீங்கள் ஒரு மிகச் சிறந்த மேயரைப் பெறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் சிறப்பாகச் செயல்பட்டால், நான் மகிழ்ச்சியடைவேன். இதில் கட்சி வேறுபாடு இல்லை என்று நான் சொல்வேன். உண்மையில், அவர் சில பழமைவாதிகளுக்கும், சில தீவிர தாராளவாதிகளுக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    அதேநேரம் , நீங்கள் இன்னும் டிரம்ப்-ஐ  பாசிஸ்ட் என கருதுகிறீர்களா என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது பேசிய மம்தானி பதிலளிக்க முற்பட்டார்.

    அப்போது டிரம்ப் குறுக்கிட்டு, "பரவாயில்லை, நீங்கள் 'ஆம்' என்று மட்டும் சொன்னால் போதும். அதை விளக்குவதைவிட அது எளிது. ஐ டோன்ட் மைண்ட். தேட்ஸ் ஓகே. அதை விட மோசமாக கூட நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறி மம்தானியை தட்டிக்கொடுத்தார். 

    நீங்கள் என்னை 'பாசிஸ்ட்' என்று தொடர்ந்து அழைத்தாலும் பரவாயில்லை என டிரம்ப் காட்டிய காட்டிய இணக்கம் பலரை கவர்த்துள்ளது.  

    • வாட்டர்க்லூப் விமானப்படை தளத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கலைஞர்கள், கலாசார பாடல்களை பாடி, ஆடி வரவேற்றனர்.

    இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய ஜி-20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா தலைமை வகிக்கிறது. அதனால் இந்த ஆண்டின் ஜி-20 மாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது.

    தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பின்பேரில், மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    அதற்காக அவர் 3 நாட்கள் பயணமாக நேற்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். நேற்று மாலை பிரதமர் மோடி ஜொகன்னஸ்பர்க் போய்ச் சேர்ந்தார். அங்குள்ள வாட்டர்க்லூப் விமானப்படை தளத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைஞர்கள், கலாசார பாடல்களை பாடி, ஆடி வரவேற்றனர். அப்போது, 'கங்கா மையா' என்ற தமிழ் பாடல் பாடப்பட்டது. இதனை மெய்மறந்து பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் 'கங்கா மையா' நிகழ்ச்சியைக் கண்டது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது! பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்களின் நம்பிக்கையையும் தொடர்பறாத மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர், ஆனால் அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை. பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். எனவே, இந்தக் கலாச்சாரத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது என்று கூறியுள்ளார். 



    • நைஜீரியாவில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் 100 பேர் கடத்தப்பட்டனர்.
    • ஒரே வாரத்தில் மாணவர்கள் கடத்தப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியது.

    இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.

    அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.

    ஒரே வாரத்தில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அதிபர் போலா டினுபு அறிவித்துள்ளார்.

    • நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்
    • அமெரிக்க அதிபர் டிரம்பும் மம்தானியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.

    நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே, நியூயார்க் மேயர் மம்தானியை வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்க உள்ளார் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியை சந்தித்தார். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறுகையில், நியூயார்க் நகர வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

    • வங்கதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    டாக்கா:

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. டாக்காவில் 4 பேரும், நர்சிங்டி பகுதியில் 5 பேரும், நாராயண்கஞ்ச் பகுதியில் ஒருவரும் பலியாகினர். மேலும் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.
    • ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது, டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரங்கல் தெரிவித்தார்.

    ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ×