என் மலர்tooltip icon

    உலகம்

    • கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து.
    • 53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.

    அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

    53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆர்லாண்டோவின் வடக்கே உள்ள மரியன் மாகாணத்தில் ஒரு டிரக் மீது பேருந்து மோதியதாக புளோரிடா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

    தர்பூசணிகளை அறுவடை செய்து வரும் டுனெல்லனில் உள்ள கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்தில், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பண்ணை மூடப்படுவதாக கேனான் பண்ணை அறிவித்துள்ளது.

    • கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது.
    • இண்டீட் நிறுவனம் தனது 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

    உலகின் முன்னணி வேலை வாய்ப்பு இணைய தளமான இண்டீட்(Indeed) நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இண்டீட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முசாபராபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.

    ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
    • விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    நியூசவுத்வேல்ஸ்:

    ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள நியூகேஸில் விமான நிலையத்தில் இருந்து போர்ட் மெக்குவாரிக்கு சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

    இந்த விமானத்தில் விமானி, 60 வயது முதியவர் மற்றும் 65 வயது மூதாட்டி என மொத்தம் 3 பேர் பயணித்தனர். முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவர்கள் சென்றனர்.

    இந்த நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.

    உடனடியாக விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம், சிறிது நேரம் விமான நிலையத்தையே சுற்றி பறந்தது. பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த முதியவர் கூறியதாவது:-

    எங்களுக்கு சூழல் புரிந்தது. நடுவானில் பறக்கிறோம். லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. எங்களால் கீழே இறங்க முடியாது. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் உயிரோடு இருப்போமா? என்று கூட தெரியாது. இந்த நேரத்தில் விமானியால் மட்டுமே எங்களை காப்பாற்ற முடியும். அதை அவர் செய்தும் காட்டினார்.

    எங்கள் விமானம் விமான நிலையத்தை 2 மணி நேரமாக சுற்றி வந்தது. காரணம் விமானத்தின் எரிபொருள் காலியாக வேண்டும். லேண்டிங் கியர் இல்லாத நேரத்தில், தரை யிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள்தான் முதலில் அடிவாங்கும். இறக்கையில்தான் எரிபொருள் இருக்கிறது. அதனால் தரையிறங்கும் போது தீப்பற்றி எரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே விமானி எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு, கீழே இறங்க முயன்றார். அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 53 வயதான விமானி பீட்டர் ஷாட்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ நாளை (15-ந்தேதி) பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் நாளை புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மந்திரி சபையில் இடம்பெறுவோர் பெயர்களை அவர் அறிவித்தார். இதில் முந்தைய மந்திரி சபையில் துணை மந்திரிகளாக இருந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    தற்போது மந்திரிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோர் புதிய மந்திரி சபையிலும் தொடர்வார்கள் என லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

    • தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    காசா:

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கி 6 மாதங்களை கடந்துவிட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் காசாவின் ரபா நகரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அவர் கொல்லப்பட்டார். 

    அவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் (டி.எஸ்.எஸ்.) ஊழியர் ஆவார். பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் பயணித்த மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஐ.நா. பணியாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்தவும் அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, "காசாவில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பிடுவதற்காக ஐநா ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வழக்கமான வேலையின் ஒரு பகுதியாக இருவரும் காரில் மருத்துவமனைக்குச் சென்றனர். அது ரபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை. அவர்களது வாகனம் எப்படி தாக்கப்பட்டது என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்


    • ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
    • துணை பிரதமர் வெளியேறியபோதும் பிரசந்தா தலைமையிலான அரசுக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி-என்) கட்சியில் உட்கட்சி பிரச்சனையால் கட்சி இரண்டாக உடைந்தது.

    கட்சி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழு போர்க்கொடி தூக்கியது. அதன்பின் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தனர். தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கிவிட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்தனர். ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவுசெய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பிரசந்தா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறினார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை மந்திரி தீபக் கார்கியும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

    உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசந்தா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனாலும் தற்போது கூட்டணி ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.

    • விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் பேருந்து ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜகார்தா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் பயணம் செய்தனர்.

    மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது.

    இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. 

    இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேர் உயிர் இழந்தனர். பலியானவர்களில் 9 பேர் மாணவர்கள், ஒரு ஆசிரியர், மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • ரபாவில் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    காசா:

    காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி 6 மாதங்களை கடந்து விட்டது. ஆனால் இன்னும் போர் முடிந்தபாடில்லை. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் மும்முனை தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    தெற்கு காசாவில் உள்ள ரபா நகரில் உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கி உள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான ரபாவில் இறுதி கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இங்கு தாக்குதல் நடத்தினால் ஏராளமானவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.

    எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரபாவில் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலுக்கு 19 பேர் பலியாகி விட்டனர். இதனால் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிணைக் கதிகளாக உள்ளனர். இவர்களை மீட்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு தயாராக இல்லை. தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி நடந்த தாக்குதலின் போது ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களை விடுவித்தால் காசாவில் நாளையேபோர் நிறுத்தம் சாத்தியமாகும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கருத்து தெரிவித்தார்.

    ஜோபைடனின் இந்த கருத்துக்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபரின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் கண்டிக்கிறோம். இது பல சுற்றுகளாக நடந்து வரும் பேச்சு வார்த்தையில் ஒரு பின்னடைவாக இதை நாங்கள் கருதுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

    • ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
    • செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக அதிபர் புதின் நியமித்தார்.

    மாஸ்கோ:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷிய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

    இந்நிலையில், ரஷியாவின் பாதுகாப்பு மந்திரியான செர்ஜி ஷோய்கு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு மந்திரியாக பெலோசோவ் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அதிபர் புதின் மேற்கொண்ட மிக முக்கியமான ராணுவ மறுசீரமைப்பு இது என கருதப்படுகிறது.

    இதற்கிடையே, செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக அதிபர் புதின் நியமித்துள்ளார். செர்ஜி ஷோய்கு அதிபர் புதினின் நீண்டகால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
    • பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மேலும், வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பொது மக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 28 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது.
    • பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் வசித்து வந்ததை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அந்த மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது. மேலும் ஒரு சிறிய மேஜை, கம்ப்யூட்டர், காபி மேக்கர், அவரது உடை மற்றும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய சில பொருட்களையும் அங்கே வைத்து அவர் வசித்து வந்துள்ளார்.

    மேற்கூரைக்கு செல்ல சரியான வழி இல்லாத நிலையில், பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வணிக வளாகத்தில் மேற்கூரைக்கு செல்லும் பாதையில் கம்பி இருப்பதை கண்டறிந்த ஒப்பந்ததாரர் அதுதொடர்பாக ஆய்வு செய்த போது தான் மேற்கூரை பகுதியில் இளம்பெண் 1 வருடமாக வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தங்குவதற்கு உரிய வீடு இல்லாததால் மேற்கூரையில் வசித்து வந்ததாக அவர் கூறி உள்ளார். பின்னர் போலீசார் அவரை எச்சரித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து செல்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ×