என் மலர்tooltip icon

    உலகம்

    • புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
    • உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று சீனாவுக்கு சென்றார். சீன அதிபர் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். 5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    அவர் இன்று சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் புதினின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீன பயணத்துக்கு முன்பு புதின், சீன ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, நாங்கள் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.

    இந்த மோதலுக்கு அமைதியான வழிகளில் விரிவான, நிலையான மற்றும் நியாயமான தீர்வை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளின் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • ஷாம்பெயின் ஸ்லோஷி என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 57 வினாடிகள் உள்ளது.
    • வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ரெயில்களுக்குள் குழந்தைகளுக்காக தொட்டில் கட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் சமீபகாலமாக ரெயில்களில் கடும் கூட்ட நெரிசலால் இருக்கை கிடைக்காத சில பெரியவர்கள் கூட போர்வையால் தொட்டில் கட்டி படுத்து உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தன.

    இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஓடும் பஸ்சுக்குள் வாலிபர் ஒருவர் தொட்டில் கட்டி படுத்து உறங்கிய காட்சிகளும், அதனை அகற்றுமாறு கூறிய டிரைவருடன் அந்த பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் உள்ளது.

    ஷாம்பெயின் ஸ்லோஷி என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 57 வினாடிகள் உள்ளது. அதில், பஸ் இருக்கைகளுக்கு நடுவே குறுக்காக பெரிய கயிறுகள் மூலம் தொட்டில் கட்டிய வாலிபர் ஒருவர் அதில் படுத்துக் கொள்கிறார். இதைப்பார்த்த டிரைவரும், கண்டக்டரும் அந்த பயணியிடம் தொட்டிலை அகற்றுமாறு கூறிய போது அவர் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆவேசம் அடைந்த டிரைவர், நான் பஸ் ஓட்ட மாட்டேன் என கூறும் காட்சிகள் உள்ளது.

    வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • சிங்கப்பூரின் 4-வது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வோங் பதவியேற்றார்.
    • லீ சியோன் லூங் கடந்த 20 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் பிரதமராக பதவி வகித்தவர் லீ சியோன் லூங். இவர் 2004-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அவர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தையும் துணை பிரதமரும், நிதி மந்திரியுமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அதிபர் சண்முகரத்தினம் பரிந்துரை செய்தார்.

    இதற்கிடையே, சிங்கப்பூர் நிதி மந்திரியான லாரன்ஸ் வோங்க் அடுத்த பிரதமராக மே 15-ம் தேதி பொறுப்பேற்பார் என அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், சிங்கப்பூரின் 4வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர் சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகிக்க உள்ளார்.

    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-வது முறையாக பிரதமர் ஆனார்.
    • அமெரிக்காவுக்கு எதிரான மற்றும் ரஷியாவுக்கு ஆதரவான பிரசாரத்தை கையில் எடுத்திருந்தார்.

    ஸ்லோவாக்கியா பிரதமராக ராபர்ட் பிகோ இருந்து வருகிறார். 59 வயதான இவர் தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹேண்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ராபர்ட் பிகோ நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

    நான்கு முறை துப்பாக்கியால் சுட்டத்தில் ராபர்ட் பிகோ வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் ராபர்ட் பிகோ சுருண்டு விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பிரதமர் ராபர்ட் பிகோ சுடப்பட்ட சம்பவத்தை பாராளுமன்றத்தில் சபாநாயகர் உறுதிப்படுத்தியதுடன், அடுத்த அறிவிப்பு வரும்வரை சபையை ஒத்தி வைத்தார்.

    பிரதமர் ராபர்ட் பிகோ தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ராபர்ட் பிகோ கட்சி கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆனார். ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

    • ரஷியாவின் பல்வேறு இடங்களை குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகள் தாக்குதல்.
    • ஏவுகணைகளுடன் டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்து வருகிறது.

    தற்போது தரைவழி தாக்குதல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், வான்தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக டிரோன்கள் மூலம் தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதனால் இருதரப்பும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தை அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைனால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியாவில் உள்ள சுத்தரிக்கு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது

    இந்த நிலையில் இன்று ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவை நோக்கி உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா தெரிவித்துள்ளத.

    கிரிமியா பகுதியில் கருங்கடல் பகுதியில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

    கருங்கடலுக்கு மேற்பகுதியிலும், பெல்பெக் விமானப்படை தளத்திற்கு அருகிலும் உக்ரைனின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது. சுடடு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் உதிரிகள் வீடுகள் மீது விழுந்தன. ஆனால், இதன் காரணமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என் செவாஸ்டாபோல் கவர்னர் மிகைல் ரஸ்வோஜயேவ் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் 9 உக்ரைன் டிரோன்கள், இரண்டு வில்ஹா ராக்கெட், இரண்டு ரேடார் எதிர்ப்பு HARM ஏவுகணைகள் பொல்கோரோட் மாகாணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின்போது ஏவுகணைகள் வீடுகள் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

    அத்துடன் குர்ஸ்க் மாகாணத்தில் ஐந்து உக்ரைன் டிரோன்கள், பிரியன்ஸ்க் மாகாணத்தில் மூன்று டிரோன்கள் ஆகியவற்றையும் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு எல்லையில் இருந்து சுமார் ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாடார்ஸ்டான் மாகாணத்திலும் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ரஷியா 100 முதல் 125 சதுர கிலோ மீட்டர் அளவிலான உக்ரைன் பகுதியை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிலப்பரப்பிற்குள் ஏழு கிராமங்கள் உள்ளன. ஆனால், இந்த கிராமங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கள் இரண்டு பயணமான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலும், ரஷியாவின் பதிலடியும் நடந்துள்ளது.

    • காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
    • ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால், காசாமுனை பேரழிவை சந்தித்துள்ளது. காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. பாலஸ்தீனியர்களின் கடைசி புகலிடமாக உள்ள ரபாவில் இருந்து வெளியேறுமாறு அவர்களை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

    இதையடுத்து ரபாவில் இருந்து அவர்கள் வெளியேறி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த வாரத்தில் குறைந்தது 4.50 லட்சம் பாலஸ்தீனியர்கள் ரபா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முகமுடி அணிந்திருந்த அக்கும்பலை சேர்ந்தவர்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
    • சிறைத்துறை வேனில் இருந்த கைதி முகமது அம்ராவை அக்கும்பல் மீட்டு கொண்டு தப்பி சென்றது.

    பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயில் கொள்ளை சம்பவம் தொடர்பாக முகமது அம்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே அவரை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர் படுத்திவிட்டு ஜெயிலுக்கு போலீசார் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    முகமது அம்ரா அழைத்து செல்லப்பட்ட சிறைத்துறை வேன், வடக்கு பிரான்சின் இன்கார்வில்லே பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நின்றது. அப்போது அங்கு கார்களில் கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் சிறைத்துறை வேன் மீது தங்களது வாகனங்களை மோதினர்.

    முகமுடி அணிந்திருந்த அக்கும்பலை சேர்ந்தவர்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்ந தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். உடனே சிறைத்துறை வேனில் இருந்த கைதி முகமது அம்ராவை அக்கும்பல் மீட்டு கொண்டு தப்பி சென்றது.

    இச்சம்பவம் பிரான்சில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முகமது அம்ரா மற்றும் அவரை மீட்டு சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறும்போது, "குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
    • மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

    சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை-வெள்ளத்துக்கு 58 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • ரஷிய பாதுகாப்பு துறையில் இயக்குனரக தலைவராக பணியாற்றி வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ்
    • வீடு மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    மாஸ்கோ:

    ரஷிய பாதுகாப்பு துறையில் இயக்குனரக தலைவராக பணியாற்றி வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே அவரது வீடு மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அதிரடியாக அந்த துறை உயர் அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கனமழை, நிலநடுக்கம், வறட்சி என மாறிமாறி பேரிடர்கள் ஏற்படுகின்றன.
    • ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    காபூல்:

    காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் கனமழை, நிலநடுக்கம், வறட்சி என மாறிமாறி பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுள் ஒன்று ஆப்கானிஸ்தான்.

    அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதனால் அவர்களது கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    • இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இங்கிலாந்தில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே (வயது 66). இவர் தேசிய சுகாதார சேவையில் மருத்துவ செயலாளராக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.

    இவர் வடமேற்கு லண்டனில் உள்ள எட்க்வேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியால் அனிதாவை சரமாரியாக குத்தினார். மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் 22 வயதான ஜலால் டெபெல்லா என்பது தெரிய வந்தது.

    அவர் மீது கொலை மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் எதற்காக இந்திய பெண்ணை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனிதா முகேவின் குடும்பத்தினர் கூறும்போது, அனிதா முகே தனது குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தார். அவரது மரணம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றனர்.

    • சீன அதிபர் ஜின்பிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்தார்.
    • 5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

    இதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்தது. தொடக்கம் முதலே இந்த போரில் நடுவுநிலைமை வகிப்பதாக சீனா கூறியது.

    அதன்படி ரஷியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவற்றை சீனா செய்யவில்லை. எனினும் ஐரோப்பிய நாடுகள் விதித்து வந்த பொருளாதார தடைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அதேபோல் உக்ரைனுக்கு எதிராக போர் முயற்சிக்கு பயன்படும் எந்திரங்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் மறைமுகமாக ரஷியாவுக்கு சீனா உதவுகின்றது.

    இந்தநிலையில் சீன அதிபர் ஜின்பிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அதிபர் புதின் நாளை (வியாழக்கிழமை) சீனாவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு தங்கும் அவர் அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    ×