என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர்.
    • உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது.

    இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர். 2 மில்லயனில் 1 முறையே இதுபோன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை இரட்டையர்களுக்கு இசோபேகஸ் த்ரிபஸ் (Ischiopagus Tripus) என்று மருத்துவப் பெயர் உள்ளது. இந்த வகை இரட்டையர்களை 'சிலந்தி இரட்டையர்கள்' என்றும் அழைக்கின்றனர்.

    இந்தோனேசியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அமெரிக்க மருத்துவ இதழ் இவர்களைக் குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பிறகே இந்த அரிய வகை இரட்டையர்களின் பிறப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளபடி, உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது. இந்த வகை இரட்டையர்களில் ஏதேனும் ஒரு குழந்தை உயிரிழப்பதற்கே 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த இரட்டையர்கள் இன்னும் நலமுடன் இருக்கின்றனர். இருப்பினும், அவர்களது உடல் அமைப்பின் காரணமாக முதல் 3 வருடங்களுக்கு அவர்களால் உட்கார முடியாத சூழல் இருந்ததால் அவர்கள் படுத்தே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் மருத்துவர்கள் செய்த சிறிய அறுவை சிகிச்சை காரணமாக தற்போது அவர்களால் அமர முடிகிறது என்று மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    • நோர்ஜஸ் வங்கி தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி நிறுவனத்தை நீக்கியது.
    • நார்வே வங்கி எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    ஓஸ்லோ:

    நார்வேயின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    இந்நிலையில், நார்வேயின் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதிக்கு தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் எல்3 ஹாரிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் சீனாவின் வெய்ச்சாய் பவர் நிறுவனங்களும் கைவிடப்பட்டன.

    நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் மற்றும் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, இதை ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம் எனக்கூறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    நார்வே நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
    • இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாக இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகார்டா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விமான நிலைய ஊழயர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிரான்ஸ்நூசா நிறுவனத்தின் ஏர்பஸ் A320 என்ற விமானத்தின் உள்ளே ஆய்வு செய்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள் இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த ஏணியை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

    இதனால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி அந்த ஊழியர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை எதற்கு ஊழியர்கள் அகற்றினார்கள் என்றும் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான நிலைய நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

    கவனக்குறைவு காரணமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் விமான நிலையங்களில் நடப்பது தொடர்கதையாகி வருவதாகவும் நெட்டிசன்கள் நொந்துகொள்கின்றனர். இந்த சம்பவத்துக்கு நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. 

    • குடும்பங்கள் மோசமான நிலையில் உள்ளன.
    • சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவிய வீடியோவில் சயீத் அன்வரின் கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சயீத் அன்வர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சயீத் அன்வர் கூறியுள்ளதாவது:-

    பெண்களை பணியில் சேர்ப்பதன் மூலம் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள். நான் உலகம் முழுவதும் பயணம் செய்தேன். நான் ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் இருந்து திரும்பி வருகிறேன். இளைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள். குடும்பங்கள் மோசமான நிலையில் உள்ளன. தம்பதிகள் சண்டையிடுகிறார்கள். விவாகரத்துகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.


    நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனிடமிருந்து தனக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர் பெண்கள் பணியிடத்தில் சேருவது மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமாக இருப்பது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இந்த நிலையை எவ்வாறு சரிசெய்வது? 'எங்கள் பெண்கள் பணியிடத்தில் நுழைந்ததில் இருந்து எங்கள் கலாச்சாரம் அழிக்கப்பட்டுள்ளது' என்று கேன் வில்லியம்சனிடம் ஆஸ்திரேலிய மேயர் கூறினார்.

    பாகிஸ்தானில் பெண்கள் வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் விவாகரத்து விகிதம் முப்பது சதவிகிதம் உயர்ந்துள்ளது.

    சயீத் அன்வர் கூறியது குறித்து கேன் வில்லியம்சன் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

    சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவிய வீடியோவில் சயீத் அன்வர் தனது பிற்போக்குத்தனமான மற்றும் பெண் வெறுப்பு கருத்துக்களுக்கு கடுமையான பின்னடைவையும் கடுமையான விமர்சனத்தையும் பெற்றுள்ளார்.

    • ரஷியா, சீன அதிபர்கள் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர்.
    • அப்போது, உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.

    பீஜிங்:

    கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேசினர். இருதரப்பு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

    இந்நிலையில் அதிபர் புதின், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக பேட்டியளித்தனர். கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சீனா, ரஷியா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது.

    எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம்.

    உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என தெரிவித்துள்ளது.

    • காசாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ரபா நகரில் உள்ளனர்.
    • ரபாவில் இருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தொகை அடர்ந்த ரபா நகரில் இருந்து சுமார் 6 லட்சம் மக்கள் முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுதம் வழங்கமாட்டோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு அளவில் ரபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் வலியுறுத்திய நிலையில் இஸ்ரேல், சிறிய அளவிலான வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ரபா மீதான தாக்குதல் தொடரும், கூடுதல் படைகள் ரபா நகருக்குள் நுழையும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். மேலும், ரபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்களை அழித்து, 20-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரபா மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் காசா முனையின் மற்ற பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. அப்படி தாக்குதல் நடத்துபவர்களை ஒழித்து கட்டியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்துக்கு 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

    • விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
    • இலங்கையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    முள்ளிவாய்க்கால் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் இலங்கை ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 1½ லட்சம் ஈழத்தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளை கடந்த பிறகும் மறக்க முடியாத இன அழிப்பாகவே இது பார்க்கப்படுகிறது.

    கடந்த 2009-ம் ஆண்டு மே 17-ந்தேதி தான் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. அதனை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் நினைவு தினமாக அனுசரித்து வருகிறார்கள்.

    இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் தனிப்பெரும்பான்மையாக வசிக்கும் நிலையில் ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு போராடிய விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில் பல்வேறு நாடுகளில் திரைமறைவில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15-ம் ஆண்டு முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை கடைபிடிக்கப்பட உள்ளது.

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகளை நினைவு கூறும் வகையில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    இதையொட்டி இலங்கையில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக அந்நாட்டில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, இதற்கு முன்பு நடைபெற்றுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

    மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர் பெறவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு விடுதலைப்புலிகளள நினைவு கூறும் வகையில் யாராவது நிகழ்ச்சிகளை நடத்தினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர்.

    இருப்பினும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இலங்கையில் தமிழ் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் நிறைவேந்தல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.

    • பொதுவாக குழந்தைகளை ஒன்றாக பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளை தேர்வு செய்கிறார்கள்.
    • ஜப்பானில் 2015-ம் ஆண்டு முதல் சுமார் 500 பேர் இந்த நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    காலத்திற்கேற்ப புதிய உறவு முறைகள் காதலுக்கும், திருமணத்திற்கும் இடையில் வந்துவிட்டன. அந்த வகையில் ஜப்பானில் சமீப காலமாக நட்பு திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்த உறவில் 2 பேர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குழந்தைகளை பெறலாம். ஆனால் ஒருவருக்கொருவர் உடலுறவு கொள்ள வேண்டாம் அல்லது கணவன்- மனைவியாக இருக்க வேண்டாம் என முடிவு செய்கிறார்கள்.

    எனவே பொதுவாக குழந்தைகளை ஒன்றாக பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளை தேர்வு செய்கிறார்கள். ஜப்பானில் 2015-ம் ஆண்டு முதல் சுமார் 500 பேர் இந்த நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பாக தம்பதிகள் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த திருமணங்களில் ஈடுபடும் தம்பதியர் சராசரிக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் என்பதையும், அதில் பெரும்பாலானோர் உடலுறவை வெறுப்பவர்கள் அல்லது ஒரினச்சேர்க்கையாளர்களாக இருப்பார்கள் என்பதையும் காட்டுகிறது.

    • ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.
    • பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம்.

    பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.

    பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம்.

    பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

     பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது.

    விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • துபாயில் வசித்துவரும் இந்திய சிறுவனை அவனது நன்னடத்தைக்காக துபாய் போலீசார் பாராட்டினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    துபாய்:

    துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் ஒருவன் அவனது நன்னடத்தை செயலுக்காக துபாய் போலீசாரால் பாராட்டப்பட்டார்.

    துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார். அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன் யூனிஸ் பார்த்துள்ளார். அதை எடுத்துச்சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

    அந்த பயணி அவரது சொந்த ஊர் திரும்பிய நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு துபாய் போலீசார் கடிகாரத்தைக் கொடுத்துள்ளனர். இதற்கு அந்த பயணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில், சுற்றுலா காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜலாப், துணை லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரகுமான், சுற்றுலா துறை தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி ஆகியோர் இந்திய சிறுவன் யூனிஸை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.

    இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சுற்றுலா பயணியின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கவுரவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

    • கராச்சியில் 70 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 2.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
    • பாகிஸ்தானின் வருவாய் என்ஜின் கராச்சி நகரம். இங்கு இரண்டு துறைமுகங்கள் உள்ளன.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முட்டாஹிடா குவாமி கட்சி எம்.பி சையத் முஸ்தபா கமால் பேசியதாவது:-

    உலக நாடுகள் நிலவுக்கு செல்லும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா நிலவில் கால் பதித்த செய்திக்கு, இரண்டு வினாடிகளுக்குப் பிறகு கராச்சியில் திறந்தவெளி சாக்கடையில் ஒரு குழந்தை இறந்ததாக செய்தி வருகிறது. கராச்சியில் 70 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 2.6 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

    "பாகிஸ்தானின் வருவாய் என்ஜின் கராச்சி நகரம். இங்கு இரண்டு துறைமுகங்கள் உள்ளன. கராச்சி முழு பாகிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நுழைவாயிலாக உள்ளது. ஆனால் 15 ஆண்டுகளாக கராச்சிக்கு சிறிதளவு கூட தூய்மையான தண்ணீர் தர முடியவில்லை. அப்படி தண்ணீர் வந்தால் கூட, டேங்கர் மாபியா கும்பல் தண்ணீரை பதுக்கி வைத்து, கராச்சி மக்களுக்கு விற்கிறார்கள் என்றார்.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
    • அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது எப்படி நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை. கொட்டாவியின் தீவிரம் காரணமாக எனது தாடை அப்படியே பிடித்துக்கொண்டது. இதனால் என்னால் வாய் பேச முடியாமல் தவிப்பிற்குள்ளானேன். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை நாடினேன். பின்னர் எக்ஸ்ரே எடுத்து உரிய சிகிச்சைகளை அளித்தனர். அதன் பிறகு தான் சரியானது என அவர் கூறி உள்ளார்.


    ×