என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
    • வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

    வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.5 சதவீதமாக தொடரும்.

    * இதன் விளைவாக, STF விகிதம் 5.25% ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.75% ஆகவும் உள்ளது.

    * ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி தொடர பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்தது. இதன் விளைவாக இந்த ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் திருத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3.7% ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆகவும் இருந்து 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    * இந்த ஆண்டு Q4 மற்றும் அடுத்த ஆண்டு Q1 க்கான தலைப்பு பணவீக்கம் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது மற்றும் சாதகமற்ற அடிப்படை விளைவுகள் இருந்தபோதிலும் இலக்குடன் பரவலாக சீரமைக்கப்பட்டுள்ளது.

    * ஆண்டுக்கான முக்கிய பணவீக்கம் மற்றும் அடுத்த ஆண்டு Q1 கட்டத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாததால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.



    • சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
    • நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    சிவாஜி கணேசன் முத்தமிழறிஞர் கலைஞரின் கதை வசனத்தில் உருவாகிய 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்த் திரைப்பட உலகில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இந்தி, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

    சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.

    நடிகர் திலகத்தின் 98-வது பிறந்தநாள் இன்று திரையுலகினராலும், அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாளான இன்று சென்னை அடையாறு, தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் ஆகியோர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    • உலக முழுவதும் நாளை இப்படம் வெளியாக உள்ளது.
    • பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது.

    உலக முழுவதும் நாளை இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் 'ரெபெல்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற இருந்த 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தை அடுத்து 'காந்தாரா சாப்டர்1' பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை போரூரில் நாளை மறுநாள் (03.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    போரூர்: காரம்பாக்கம், கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர், மதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரமணார் தெரு.

    • 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
    • மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லாகூர்:

    வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றதை தொடர்ந்து, உள்ளூர் போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்பட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.

    அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச லீக் 20 ஓவர் போட்டிக்கான ஏலத்தில் 16 பாகிஸ்தான் வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போதைய உத்தரவால் அதில் அவர்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

    இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி அடுத்த ஐபிஎல் போட்டிகளில் மூன்று வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், Serum நிறுவன CEO அதார் பூனாவாலா அணியை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

    சமூக வலைதளங்களில் பிரபலமான அணியாக திகழும் ஆர்சிபி அணியை வாங்க இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் போட்டி போட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    மாத இறுதி நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880

    29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160

    28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-09-2025- ஒரு கிராம் ரூ.161

    29-09-2025- ஒரு கிராம் ரூ.160

    28-09-2025- ஒரு கிராம் ரூ.159

    27-09-2025- ஒரு கிராம் ரூ.159

    26-09-2025- ஒரு கிராம் ரூ.153

    • த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
    • வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும்

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து "இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும் இருப்பவர்களுக்கு நீதி செய்வதுமே அறமாகும்" என்று அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கரூர்ச் சம்பவம் குறித்து

    அரசு அமைத்திருக்கும்

    தனிநபர் ஆணையத்தின் தலைவர்

    நீதிபதி அருணா ஜெகதீசன்

    அவர்களுக்கு

    ஒரு வேண்டுகோள்

    உயிரிழப்புக்கு ஆளான

    41 குடும்பங்களிலும்

    நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள்

    அந்தக் குடும்பங்களில்

    வேலை வாய்ப்புக்கு

    வயதுடையவர்களையும்

    கல்வி கற்கும்

    வாய்ப்புடையவர்களையும்

    அரசுக்கு நீங்கள்

    அறிக்கையில் குறித்து

    அறிவிக்க வேண்டும்

    பலியானோர் பலரும்

    அடித்தட்டு மற்றும்

    நடுத்தட்டு வர்க்கத்து

    நலிந்தவர்கள்தாம்

    வேலைவாய்ப்பும் கல்வியுமே

    அவர்களின்

    மாபெரும் துயரத்துக்கு

    மருந்தாக முடியும்

    இறந்தவர்களுக்கு

    நியாயம் செய்வதும்

    இருப்பவர்களுக்கு

    நீதிசெய்வதுமே அறமாகும்

    இந்தப் பணியை

    நீங்கள் இப்போதே முடித்திருந்தால்

    அது சமூக தர்மமாகும்

    உங்கள் அறிக்கை

    பட்டழிந்தோர் கண்ணீரைத்

    தொட்டுத் துடைக்கும்

    சுட்டு விரலாகட்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான்.
    • பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான்.

    விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    'விஜய்' என்றால் வெற்றி என்றும், 'தசம்' என்றால் பத்து என்றும் பொருள். அன்னை, மகிஷாசுரனுடன் 9 நாள் போரிட்டு, 10-வது நாள் பெற்ற வெற்றியே விஜயதசமி ஆகும்.

    முன்பொரு காலத்தில் தனு என்ற அசுரன் இருந்தான். அவனுக்கு மிகவும் பலசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடும் தவம் புரிந்தனர்.

    கரம்பன் என்பவன் அன்ன ஆகாரம் இன்றி நீரில் நின்று தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.

    ரம்பன் என்பவன் யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான்.

    தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.

    அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவன், அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.

    உடனே ரம்பன், 'எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்' என்றான். அதற்கு அக்னி தேவன், "நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அந்த பெண்ணிடம் உனக்கு புத்திரன் பிறப்பான்" என்று வரம் கொடுத்தார்.

    இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையைப் பார்த்த உடன், அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது.

    எருமைத் தலையும், மனித உடலுமாக பிறந்த அந்தப் பிள்ளை 'மகிஷாசுரன்' என்று அழைக்கப்பட்டான். (இது மகிஷாசுரன் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் பல கதைகளில் ஒன்று).

    மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், "மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் வேறு வரம் கேள்" என்றார்.

    அதற்கு அவன், "தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது" என்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

    மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும், தாம்ரன் என்பவன் தனாதிபதியாகவும் இருந்தனர். அஸிலோமா, பிடாலன், பாஷ்களன், கால பந்தகன், உதர்க்கன், திரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் இருந்தனர். அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் அஞ்சனம் என்ற மலையில் மாஹிஷம் என்ற மிக அழகிய பட்டினத்தை நிர்மாணித்தான். தேவர்களை மிரட்டி, தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.

    மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.

    புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.

    இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள்.

    தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து, மகிஷாசுரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த அன்னை, 'மகிஷாசுர மர்த்தினி' என்று அழைக்கப்பட்டாள்.

    எந்த இடத்தில் மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் 'தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

    • கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.
    • நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

    * கரூர் பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாக தெரியவில்லை.

    * 10 மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள், அடியெடுத்து வைக்க கூட இடமில்லாமல் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காத்துக்கொள்ள முயன்ற நிலையில்தான் இந்த பேரவலம் நடந்தேறியது என்ற உண்மையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.

    * கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.

    * நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

    * உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே விஜய் நோக்கமாக கொண்டிருக்கிறார்.

    * சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் வீடியோ உறுதிபடுத்துகிறது.

    * சங்பரிவார் சக்திகளிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    * தி.மு.க.வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார்.

    * தமிழ்நாட்டை குறி வைத்து வெளிப்படையாகவே தங்களது சித்து விளையாட்டை பா.ஜ.க. தொடங்கி விட்டது.

    * தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பா.ஜ.க.வின் கருவி தான் என்பது உறுதியாவதாக கூறியுள்ளார். 

    • நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
    • பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

    இருப்பினும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

    ×