என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தனிப்படையினர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந்தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த தனிப்படையினர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவலும் வெளியாகவில்லை.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகிறார். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந்தேதி வருகிறார். பின்னர் கர்னூலில் உள்ள டிரோன் நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    தொடர்ந்து ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன்கல்யாண் கலந்து கொள்கின்றனர்.

    ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் வருகை குறித்து நேற்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஓர்வக்கல் மண்டலம் நன்னூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தை அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பிரதமரின் சிறப்பு திட்ட அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கம் விலை சீரான இடைவெளியில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
    • வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

    அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. தங்கத்துக்கான தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது.

    தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கம் விலை சீரான இடைவெளியில் இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த மாதம் 6-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அதன் பின்னரும் தங்கம் விலை ஓய்வில்லாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.

    இதையடுத்து அதே மாதம் 9-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், 23-ந் தேதி ரூ.85 ஆயிரத்தையும், 29-ந் தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந் தேதி ரூ.87 ஆயிரத்தையும் கடந்தது. ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை தொடர்ந்து மேல்நோக்கியே நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது.

    கடந்த 4-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது 5-ந் தேதியும் மாற்றமின்றி தொடர்ந்தது.

    நேற்று காலையில் அதிரடியாக ரூ.110 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 60-க்கும், ரூ.880 அதிகரித்து சவரன் ரூ.88 ஆயிரத்து 480-க்கும் தங்கம் விற்பனையானது. மாலையில் மேலும் ரூ.65 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 125-க்கும், ரூ.520 அதிகரித்து சவரன் ரூ.89 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்ந்து முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருப்பது இல்லத்தரசிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

    06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

    05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு கிராம் ரூ.167

    06-10-2025- ஒரு கிராம் ரூ.167

    05-10-2025- ஒரு கிராம் ரூ.165

    04-10-2025- ஒரு கிராம் ரூ.165

    03-10-2025- ஒரு கிராம் ரூ.162

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.
    • புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.

    அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்வதாகவும், அதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லும் ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, பத்ரிநாத் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.



    நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
    • நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ''இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது'' என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உச்சநீதிமன்றத்

    தலைமை நீதியரசர்

    @JusticeBRGavai மீது

    அநாகரிகத்தை

    வீசமுயன்றது கண்டு

    அதிர்ந்துபோனேன்

    இது

    முறைசெய்யும் நீதித்துறையைக்

    கறைசெய்யும் களங்கமாகும்

    வரம்புமீறிய வழக்கறிஞரை

    வன்மையாகக் கண்டிக்கிறேன்

    பிற்போக்குத்தனம்தான்

    இந்த அவமானச் செயலுக்கு

    அடிப்படை என்று அறிகிறேன்

    தென்னிந்தியாவில்

    பிற்போக்குச் சக்திகளைப்

    பிடரிபிடித்துத் தடுத்து

    நிறுத்தியதைப்போல

    வடஇந்தியாவில்

    செய்யத் தவறிவிட்டார்கள்

    அந்தச் சாத்திரத்தின்

    ஆத்திரம்தான் இது

    காலில் அணியவேண்டியதைக்

    கையில் அணிந்தபோதே

    அவர் அறிவழிந்துபோனார் என்று

    அறிய முடிகிறது

    அதை

    மென்மையாகக் கையாண்ட

    நீதியரசரின் சான்றாண்மையைப்

    பெரிதும் போற்றிப்

    பெருமிதம் கொள்கிறோம்

    நீதியரசரின் மாண்பு

    அவரை மன்னித்துவிட்டது

    வீச முயன்ற பொருளும்

    அவரிடமே

    ஒப்படைக்கப்பட்டு விட்டது

    வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்

    அவர் பேசியபொருளை

    மறந்துவிட முடியாது

    அது

    நாட்டின் பெரும்பான்மை மக்களைக்

    காலங்காலமாய்க்

    கழுத்தில் மிதித்து

    அழுத்திக் கொண்டிருக்கும்

    பழைய பொருளாகும்

    பழையன கழிய வேண்டாமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
    • படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்டிஆர் 49' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

    இந்நிலையில், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

    முன்னதாக, படத்தின் தலைப்பு வெளியாவதையொட்டி நடிகர் சிம்பு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபாடு செய்தார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.
    • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

    இந்த வார விசேஷங்கள்

    7-ந் தேதி (செவ்வாய்)

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    8-ந் தேதி (புதன்)

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந் தேதி (வெள்ளி)

    * சங்கடஹர சதுர்த்தி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

    11-ந் தேதி (சனி)

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    12-ந் தேதி (ஞாயிறு)

    * சஷ்டி விரதம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * பாபநாசம் சிவபெருமான் பவனி.

    * சமநோக்கு நாள்.

    13-ந் தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.



    இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்குமார் ரேசிங் அணி, மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது. 



    • தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
    • ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-21 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி காலை 9.50 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : ரேவதி பின்னிரவு 3.41 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேச சுவாமி ஊஞ்சலில் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.

    ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-இன்பம்

    கடகம்-நேர்மை

    சிம்மம்-நற்செய்தி

    கன்னி-நன்மை

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- செலவு

    மகரம்-வெற்றி

    கும்பம்-தாமதம்

    மீனம்-உழைப்பு

    • கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பா.ஜ.க. உத்தரவிட்டது.
    • வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கிறது. தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. இந்த முறை அதிக இடங்களை கேட்டு பெறுவதில் ஆர்வமாக இருக்கிறது.

    இதற்காக, அ.தி.மு.க.வுடன் கலந்து பேசவும், கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், பா.ஜ.க. தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து பா.ஜ.க. உத்தரவிட்டது.

    அந்தவகையில், பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை மந்திரி முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல் முறையாக சென்னைக்கு நேற்று வந்தனர். தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் அவர்கள் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர்.

    இந்த ஆலோசனையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது, கூட்டு பிரசாரம் செய்வது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

    ரிஷபம்

    யோகமான நாள். பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சனை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கடகம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சேமிப்பு கரையாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    கவலைகள் தீரக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். வரவைவிடச் செலவு கூடும்.

    கன்னி

    தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் நீடிப்பதா வேண்டாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.

    துலாம்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். எல்லோரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.

    விருச்சிகம்

    வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். நேற்றைய கனவு இன்று பலிதமாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    தனுசு

    செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களில் தாமதம் ஏற்படும்.

    மகரம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன் தரும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உத்தியோக முயற்சி கைகூடும்.

    கும்பம்

    நிம்மதி குறையும் நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. வீடு கட்ட அல்லது வாங்க செய்த ஏற்பாடு தாமதப்படும்.

    மீனம்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.

    ×