நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம் - வைரமுத்து

வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன்நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும்
நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம் - வைரமுத்து
Published on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ''இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது'' என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உச்சநீதிமன்றத்

தலைமை நீதியரசர்

@JusticeBRGavai மீது

அநாகரிகத்தை

வீசமுயன்றது கண்டு

அதிர்ந்துபோனேன்

இது

முறைசெய்யும் நீதித்துறையைக்

கறைசெய்யும் களங்கமாகும்

வரம்புமீறிய வழக்கறிஞரை

வன்மையாகக் கண்டிக்கிறேன்

பிற்போக்குத்தனம்தான்

இந்த அவமானச் செயலுக்கு

அடிப்படை என்று அறிகிறேன்

தென்னிந்தியாவில்

பிற்போக்குச் சக்திகளைப்

பிடரிபிடித்துத் தடுத்து

நிறுத்தியதைப்போல

வடஇந்தியாவில்

செய்யத் தவறிவிட்டார்கள்

அந்தச் சாத்திரத்தின்

ஆத்திரம்தான் இது

காலில் அணியவேண்டியதைக்

கையில் அணிந்தபோதே

அவர் அறிவழிந்துபோனார் என்று

அறிய முடிகிறது

அதை

மென்மையாகக் கையாண்ட

நீதியரசரின் சான்றாண்மையைப்

பெரிதும் போற்றிப்

பெருமிதம் கொள்கிறோம்

நீதியரசரின் மாண்பு

அவரை மன்னித்துவிட்டது

வீச முயன்ற பொருளும்

அவரிடமே

ஒப்படைக்கப்பட்டு விட்டது

வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்

அவர் பேசியபொருளை

மறந்துவிட முடியாது

அது

நாட்டின் பெரும்பான்மை மக்களைக்

காலங்காலமாய்க்

கழுத்தில் மிதித்து

அழுத்திக் கொண்டிருக்கும்

பழைய பொருளாகும்

பழையன கழிய வேண்டாமா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com