என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது.
    • ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைத்தனர். 38 ரன்கள் எடுத்த ராகுல் 19-வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் வந்த தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் அரை சதமும், மறுபுறம் ஜெய்ஸ்வால் சதமும் விளாசினர்.

    தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து கில்- ஜெய்ஸ்வால் ஜோடி பொறுப்புடன் விளையாடினர்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் சுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    • வேடந்தூரில் நடைபெற்ற விழாவின்போனது உதயநிதி ஸ்டாலின் காலை தொட்டு ஆசி.
    • தனது மகன் வயதுடைய உதயநிதி ஸ்டாலின் காலை தொடலாமா? என விமர்சனம்.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் மாவட்டம் சென்றிருந்தார். நேற்று வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி உள்ளிட்டோர் இருந்தனர். வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் உதயநிதி, அமைச்சர் பெரியசாமிக்கு மாலை அணிவித்தார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து அவரது காலை தொட்டு ஆசி பெற்றார். 74 வயதான எம்.எல்.ஏ., தனது மகன் வயதுடைய உதயநிதி ஸ்டாலின் காலில் விழந்து ஆசி பெறலாமா?. ஓஹோ இதான் திமுக கற்றுத் தந்த சுயமரியாதையா, இதுதான் திமுக சமூக நீதி ஆட்சியா....? என வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காந்திராஜன் அதிமுக சார்பிலும் எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். மேலும், துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

    • தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
    • நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

    ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.

    மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

    கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.

    இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

    முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது.
    • சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு, திமுக அரசு என்பது உறுதியாகியிருக்கிறது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் தலைமையில் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே சிறுநீரகத் திருட்டு குறித்து விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    கிட்னி திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் நிஷா , சிலம்பரசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய இ.கா.ப. அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆணையிட்டது. அக்குழு அதன் விசாரணையை முடித்து செப்டம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்த நிலையில் தான் அதற்கு 4 நாள்கள் முன்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

    மதுரை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு பதிலாக தாங்கள் கூறும் அதிகாரிகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

    ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றம் அமைத்தக் குழுவே விசாரணையை நடத்தும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது சட்டத்தையும், நீதியையும் வளைத்து சிறுநீரகத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு விழுந்த சம்மட்டி அடி ஆகும்.

    மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த 5 இ.கா.ப அதிகாரிகளும் தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு மாநில அரசு அதன் சொந்த அதிகாரிகள் நடத்தும் விசாரணையையே எதிர்க்கிறது என்றால், அவர்கள் நடத்தும் விசாரணையில் உண்மை வெளியாகிவிடும். அதனால் அவர்களுக்கு பதில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து விசாரித்து குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறது என்பது தான் பொருள். சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைக் கடந்து, நீதியை பலி கொடுத்தாவது தங்களுக்கு வேண்டியவர்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக அரசு துடிக்கிறது. அதற்காகத் தான் சிறுநீரகத் திருட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கிலும் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. அதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.

    திமுக அரசு மக்கள் நலனைக் காக்கும் அரசு அல்ல.... சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு என்பது உறுதியாகியிருக்கிறது. மக்கள்விரோத திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    • உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறையீடு வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக உத்தரவு.
    • ஒரே நாளில் டெல்லி முதல் மதுரை வரை திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.

    1) திமுக எம்எல்ஏ-வுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சிறுநீரக திருட்டு குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த தமிழக அரசு ஏற்றுள்ளது, ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள அதிகாரிகளை அரசு பரிந்துரைக்கும் என்ற நிபந்தனையை விதித்தது.

    எவ்வளவு வெட்கக்கேடானது!

    2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் அஞ்சுகிறது?

    3) விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசின் மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களில் பிளவுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதிபதி விஜய் குமார், நீதிபதி ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதை தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்க வேண்டும்.

    டெல்லி முதல் மதுரை வரை, நீதி அதன் சொந்த மனசாட்சியை விட வேகமாக திமுக அரசாங்கத்தைத் துரத்துவது போல் தெரிகிறது.

    இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

    • சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடித்துள்ளனர்.
    • இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், டீசல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



    • H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
    • விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யப்படும்.

    அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.

    இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

    H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    H-1B விசா புதிய விதிமுறைகள்:

    புதிய H-1B விசா மனுக்களுக்கான கட்டணம் தற்போதுள்ள சுமார் $4,000 முதல் $6,000 என்ற நிலையிலிருந்து, $1,00,000 (ரூ. 88 லட்சம்) என உயர்த்தப்படுகிறது.எனினும், இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

    அடுத்ததாக, விசா பெறுவதற்கான சிறப்புத் தொழில் (Specialty Occupation) என்ற வரையறை கடுமையாக்கப்பட்டுள்ளது.

    இனி, விண்ணப்பதாரரின் பட்டப்படிப்பும், அவர்கள் செய்யும் வேலையும் கண்டிப்பாக ஒரே துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

    புதிய விதிமுறைகளின்படி H-1B ஊழியர்களைப் பிற நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்து அனுப்பும் கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

    ஊழியர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு இருக்கின்றனரா அல்லது மூன்றாவது ஏஜென்சி மூலம் காண்டிராக்ட்-இல் இருக்கிறார்களா என்பது குறித்த கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், பல்கலைக்கழகங்கள், இலாப நோக்கற்ற ஆய்வு நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற வருடாந்திர விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.

    மேலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு செயல்முறையும் கடினமாக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான திறன் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் O-1A விசா முறையில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ள்ளது.

    இந்த முன்மொழிவுகள் தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கப் பணிக்கான விசா அமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுசீரமைப்பாக இருக்கும்.  

    • இதுகுறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
    • இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்தினார்.

    திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் ஆடு, கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

    மேலும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.

    திருப்பரங்குன்றம் மலையின் சில பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என்றும், சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்டு மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

    மேலும், இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்து மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

    இதனால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக தனி நீதிபதி தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார்.

    இந்த நிலையில் இறுதியாக, தனி நீதிபதி ஆர். விஜயகுமார் ஆடு, கோழி பலியிட தடை விதித்து, இது குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.

    மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சனைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.

    • நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்கள் விற்கப்பட்டுள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து சட்ட விரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்றனர். இதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் இதற்கு திருச்சி மற்றும் பெரம்பலூரில் செயல்பட்ட 2 தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக செயல்பட்டதாக தெரியவந்தது.

    மேலும் குறிப்பிட்ட 2 மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் இதில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் கோர்ட்டு பதிவாளர், அதிகாரிகளை நாங்களே தேர்வு செய்வோம் என்று கூறுவதில் தான் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது' என வாதிட்டார்.

    காரணம் விசாரணை அதிகாரிகளை ஆங்காங்கே இருந்து தேர்ந்தெடுத்து ஒரு குழுவை அமைப்பது நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விசாரணைக்கு தேவையான 10 அதிகாரிகளை அரசே பரிந்துரை செய்யும் என்றும், அதில் இருந்து சிறப்பு குழுவை கோர்ட்டு நியமிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என தமிழக அரசு வாதிட்டது.

    அதற்கு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் இருந்து மட்டும் ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை பொருத்தவரை முதலில் சி.பி.ஐ. விசாரணை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் கோர்ட்டு அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

    அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல்கள் விசாரணை குழு விசாரணை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணை குழுவில் இடம் பெறும் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு விசாரணை குழுவை அமைத்தால் சரியானதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை என தெரிவித்தனர்.

    மேலும் தற்போது கோர்ட்டு தேர்ந்தெடுத்து இருக்கக்கூடிய அதிகாரிகள் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்ற மாவட்டத்தில் இருந்து 200 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் உள்ள அதிகாரிகள் ஆவர். இவர்கள் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளதால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தும்.

    எனவே அரசு தரப்பில் அதிகாரிகள் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு குழுவை அமைக்கட்டும் என்றதோடு கிட்னி திருட்டு நடந்திருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள சிறந்த அதிகாரிகளின் பெயர்களை வழங்குகிறோம். அதிலிருந்து கோர்ட்டு தேர்ந்தெடுத்தால் சரியானதாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

    ஆனால் சிறுநீரக மோசடி நடைபெற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு முரண்படுகிறது என்றதோடு இந்த கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், அதே வேளையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

    • ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
    • சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை குறி வைத்து வாங்கலாம்.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 13-ம் தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. கடைசியாக அந்த அணி 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இந்த நிலையில் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனில் எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம். எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்ற பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பிசிசிஐ இடம் தெரிவிக்க வேண்டும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

    இதனால் ஒவ்வொரு அணியின் தங்களது அணியில் உள்ள வீரர்களை தக்கவைப்பது விடுவிப்பது குறித்த பட்டியலை ஆராய்ந்து வருகின்றனர்.

    அந்த வகையில் சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திருப்பாதி, சாம்கரன், கான்வே உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 9 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வினும் தற்போது ஓய்வு பெற்றிருப்பதால் சிஎஸ்கே அணியிடம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையிருப்பு இருக்கும் என தெரிகிறது.

    இதன் மூலம் சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை குறி வைத்து வாங்கலாம். ஏற்கனவே சிஎஸ்கே அணி பல வீரர்களை காயம் காரணமாக தொடரின் பாதியிலே மாற்றி அணியை பலப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • நியூ யார்க்கில் நடந்த 80வது ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் அவர் இதையே பேசினார்.
    • டிரம்ப்-புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது.

    2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா தேசிய சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக பணியாற்றினார்.

    நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள பதிவில், நீடித்த அமைதிக்கு ஜனநாயகம் ஒரு இன்றியமையாதது. இருப்பினும், ஜனநாயகம் பின்வாங்கும் உலகில் நாம் வாழ்கிறோம். சர்வாதிகார ஆட்சிகள் விதிமுறைகளை சவால் செய்து வன்முறையை நாடுகின்றன.

    வெனிசுலா ஆட்சியின் அதிகாரத்தின் மீதான இறுக்கமான பிடிப்பும் மக்கள் மீதான அதன் அடக்குமுறையும் புதிது அல்ல. உலகளவில் அதே போக்குகளை நாம் காண்கிறோம். அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்தின் ஆட்சி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

    சுதந்திரமான ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன. விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், மற்றும் சமூகங்கள் சர்வாதிகார ஆட்சி மற்றும் இராணுவமயமாக்கலை நோக்கித் தள்ளப்படுகின்றன.

    இத்தகு சூழலில் வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்த மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டு நோபல்அமைதிப் பரிசை வழங்குவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.  

    இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 6 போர்களை நிறுத்தினேன் என்றும் தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி வந்தார். அண்மையில் நியூ யார்க்கில் நடந்த 80வது ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் அவர் இதையே பேசினார்.

    மேலும் நேற்று  கருத்து தெரிவித்த பேசிய டிராம்ப், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்கக்கூடாது என்றும் அவர் அதற்கு தகுதியற்றவர் என்றும் பேசியிருந்தார். இந்த சூழலில் டிரம்ப்-புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது பேசுபொருளாகி உள்ளது. 

    குறிப்பாக வெற்றியாளரை அறிவிக்கும் நோபல் கமிட்டி பதிவில் குறிப்பிடப்பட்ட சர்வாதிகார போக்கு டிரம்ப் அரசுக்கு பல வகையில் பொருந்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரியில் அதிபராக பதவியேற்றத்தில் இருந்து டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் மீதான கட்டுப்பாடுகள், கட்டாய நாடு கடத்தல்கள், வர்த்தக தடைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மாகாண போலீசாருக்கு பதிலாக மத்திய படைகளை நிறுவியது, தனது கட்டுப்பாடுகளுக்கு இணங்காத ஹார்வார்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கலை நிறுத்தியது, தன்னை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு நஷ்டஈடு கேட்டும் அரசு ரீதியாக கட்டுப்பாடுகள் மூலம் அழுத்தம் கொடுப்பது போன்ற டிரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகள் சர்வாதிகார போக்கை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. 

    • விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
    • உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசாரத்திற்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்னும் த.வெ.க. சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    அதேவேளையில் த.வெ.க. கட்சி நிர்வாகிகளின் குறைபாடுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என அரசு சார்பில் குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்ப விசாரணைக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரித்திக்கின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    இரு தரப்பு விதாங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. அத்துடன், பிரமாணப் பத்திரத்தை பார்த்த பின்னர்தான் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனடிப்படையில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    ×