என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தலைநகர் பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் பங்கேற்று பேசினார்.

    பாரிஸ்:

    பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

    பொதுநலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

    மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை.

    உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் அது பயன்பாட்டுக்கு வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை, பிரச்சனைகளை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என நம்புகிறேன்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் பரப்புதல் மற்றும் டீப் பேக் தொடர்பான கவலைகளை தீர்க்க வேண்டும்.

    நிலையான செயற்கை நுண்ணறிவுக்கான கவுன்சிலில் ஏ.ஐ. அறக்கட்டளை அமைக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.

    • இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அதிமுகவிற்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக கோவை அருகே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், "அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்கவில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை" என்று பூசி முழுகினார்.

    இதனையடுத்து, "பாராட்டு விழா கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆதலால் அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, "அதிமுகவையோ எடப்பாடி பழனிசாமியையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. கட்சிக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்தார். 

    • ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மினி பஸ் வந்துகொண்டிருந்தது.
    • படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.

    இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய ஐதராபாத்தை சேர்த்த பக்தர்கள் வந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நாச்சரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் வழிபாடு செய்தபின்னர் மினி பஸ்ஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8:30 மணியளவில் அவர்களது மினி பஸ் வேகமாக வந்துகொண்டிருந்தது.

    அப்போது தவறான பாதையில் எதிரே வந்த சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது மினி பஸ் மோதியுள்ளது. இதில் மினி பஸ்ஸில் வந்த பத்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாடலின் அப்டேட்டை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் சூர்யா சிறை சீறுடையில் இருக்கிறார். அவர் சிறைச்சாலையில் இருக்கும் போது இப்பாடல் இடம் பெறும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இது ஒரு சோக காதல் பாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது.
    • குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது. இந்நிலையில், குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழக அணிகளின் பட்டியல்:

    1. தகவல் தொழில்நுட்ப பிரிவு

    2. வழக்கறிஞர் பிரிவு

    3. மீடியா பிரிவு

    4. பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு

    5. பயிற்சி மற்றும் தொண்டர் மேம்பாட்டு பிரிவு

    6. உறுப்பினர் சேர்க்கை பிரிவு

    7. காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு

    8. வரலாற்று தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்பு பிரிவு

    9. திருநங்கைகள் பிரிவு

    10. மாற்றுத்திறனாளிகள் பிரிவு

    11. இளைஞர்கள் பிரிவு

    12. மாணவர்கள் பிரிவு

    13. பெண்கள் பிரிவு

    14 இளம் பெண்கள் பிரிவு

    15. குழந்தைகள் பிரிவு

    16. தொண்டர்கள் பிரிவு

    17 வர்த்தகர் பிரிவு

    18 மீனவர் பிரிவு

    19: நெசவாளர் பிரிவு

    20. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு

    21 தொழிலாளர் பிரிவு

    22 தொழில்முனைவோர் பிரிவு

    23. அயல்நாட்டில் வசிப்பவர் பிரிவு

    24 மருத்துவர்கள் பிரிவு

    25 விவசாயிகள் பிரிவு

    26. கலை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு

    27. தன்னார்வலர்கள் பிரிவு

    28. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

    • இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
    • 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.

    அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.

    பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.

    இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

    • அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • 'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது

    ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,டிராகன் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பௌ பெற்று வருகிறது. டிரெய்லர் தற்பொழுது வரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒரு அடாவடியான கல்லூரி மாணவனின் கதை மற்றும் அவன் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் காதல், நட்பு , சிக்கல் என டிரெய்லர் காட்சி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது.
    • பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,018 புள்ளிகள் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஐந்த நாட்களும் சரிவில் முடிவடைந்த நிலையில் மொத்தம் சென்செக்ஸ் 2,290.21 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    நேற்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 77,311 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 77,384.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. மதியம் 12 மணிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இறுதியாக சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் சரிவை சந்தித்து 76,293.60

    புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 77,387.28 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 76,030.59 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது. டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், எல்&டி போன்ற பங்குகளும் சரிவை எதிர்கொண்டது. பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போன்று, இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் கடும் சரிவை எதிர்கொண்டது. நேற்றைய வர்த்தகம் 23,381.60 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 23,383.55 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்தபட்சமாக 22,986.65 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,390.05 புள்ளிகளில் வர்த்தகமான நிலையில், இறுதியாக நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    திங்கட்கிழமை அமெரிக்க மார்க்கெட் உயர்வை சந்தித்த நிலையில், ஆசிய மார்க்கெட்டுகளான ஷாங்காய், ஹாங்காங் போன்றவை சரிவை சந்தித்தன. சியோல் மார்க்கெட் க்ரீனில் முடிவடைந்தது. ஐரோப்பாவின் பெரும்பாலான மார்க்கெட்டுகளும் சரிவை சந்தித்துள்ளன.

    கச்சா எண்ணெய் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 76.74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது.

    பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
    • அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை 4.28 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நிறுத்தும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் (FCPA) என்று அழைக்கப்படும் இதன் கீழ் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த சட்டதையே டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். அதற்கு பதிலாக புதிய விதியை உருவாக்கும்படி அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த அறிவிப்பானது வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இன்று அதானி குழும பாங்குகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு விலை 4.28 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அதானி பவர் லிமிடெட் உடைய ஒரு பங்கின் விலை 4.17 சதவீதம் உயர்ந்து ரூ.511.90 ஆக இருந்தது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் 3.34 சதவீதம் உயர்ந்து ரூ.985.90 ஆக உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட்டின் பங்கு விலையும் 3.84 சதவீதம் உயர்ந்து ரூ.145 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் லிமிடெட் பங்குகளும் கணிசமான அளவு உயர்ந்தன. 

    • அதிமுகவில் செங்கோட்டையனுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
    • ஒருவேளை அதிமுக சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பறிக்கப்பட்டால் அவர் என்ன செய்வார்?

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக கோவை அருகே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், "அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்கவில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை" என்று பூசி முழுகினார்.

    இதனையடுத்து, "பாராட்டு விழா கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆதலால் அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

    எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சியை தொடங்கிய காலத்தில் இருந்தே செங்கோட்டையன் அக்கட்சியில் பயணித்து வருகிறார். 1977 ஆம் ஆண்டு முதல்முறையாக அதிமுக ஆட்சியை பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்வரானார். அந்த தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு செங்கோட்டையன் வென்றார்.

    அதன்பின்பு அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தொடர்ந்து 9 முறை போட்டியிட்ட செங்கோட்டையன் 8 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில், தற்போதைய அதிமுக கட்சியின் சீனியர் தலைவரான செங்கோட்டையனுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. தன்னை விட ஜூனியரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதில் இருந்தே இந்த பிரச்சனை தலைதூக்க தொடங்கியிருந்தாலும் கடந்த 3 ஆண்டுகளில் இப்பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.மேலும், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை தனக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற ஆதங்கமும் செங்கோட்டையனிடம் உள்ளது என்கிறது கட்சி வட்டாரம்.

    செங்கோட்டையன் பிரச்சனைக்கு இடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தன்னை கட்சியினர் புறக்கணிப்பதாக சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க.-விற்குள் ரணகளம்:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை தலைமையேற்று வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்று எல்லோரும் சேர்ந்து தான் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள்.

    அடுத்த கட்டமாக சசிகலாவும், முதல்வர் பதவியை நோக்கி நகர தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் இருந்து ஓ.பி.எஸ். நடத்தினார்.

    அந்த சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. அதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சிறை சென்றார். பின்னர் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஒன்றாக இணைந்து சசிகலாவை கழட்டிவிட்டார்கள்.

    பின்னர் ஒற்றை தலைமையாக இருந்தால்தான் கட்சியை சரியாக நடத்த முடியும் என நினைத்து பொதுக்குழு ஒன்றை கூட்டி தன்னை அ.தி.மு.க.-வின் பொதுச்செயலாளராக அறிவித்து கொண்டார் இ.பி.எஸ்..

    ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி ஒருபுறம், சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் மறுபுறம் என சூழல் உள்ளது.

    இந்நிலையில், எடப்பாடிக்கு எதிராக 'செங்கோட்டையன்' மாதிரியான சீனியர் தலைவர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதன் மூலம் மீண்டும் சசிகலா, டி.டி.வி. வசம் அ.தி.மு.க.-வை இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    இரட்டை இலை சின்னம் முடக்கமா?

    அதிமுகவின் உட்கட்சி பூசல்களுக்கு இடையே அக்கட்சியின் இரட்டை இலை சின்னமும் ஊசலாடி கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளின் விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக் கூடாது என்று சூரிய மூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ள நிலையில், ஒருவேளை அதிமுக சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பறிக்கப்பட்டால் அவர் என்ன செய்வார்?

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் தான் அ.தி.மு.க. என்கிற கட்சியின் அடையாளமே.

    தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமி தன்னை தான் அதிகம் முன்னிறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு செங்கோட்டையனிடம் இருந்து தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், இரட்டை இலை சின்னமும் பறிக்கப்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

    1. விஜயின் த.வெ .க. உடன் அ.தி.மு.க. கூட்டணி என்றெல்லாம் பேச்சு அடிபடும் சூழலில், இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்தால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு அது சாத்தியமாகும்.

    2. இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றுவதற்காக சசிகலா, டி.டி.வி. ஓ.பி.எஸ். ஆகியோரிடம் சமரசம் செய்துகொண்டு பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எடப்பாடி எதிர்கொள்வாரா?

    3. ஒருவேளை இரட்டை இலை சின்னம் பறிபோனால், ஓ.பி.எஸ்., டி.டி.வி. போன்று தனி ஒருவனாக தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவாரா?

    4. இரட்டை இலை சின்னம் பறிபோகும்பட்சத்தில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து எடப்பாடியின் முடிவு என்னவாக இருக்கும்?

    • எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
    • இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

    தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள்  தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் மற்றும் நடிகர் சூரி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

    படத்தின் தொழில்நுட்ப குழு பின் வருமாறு

    ஒளிப்பதிவு - ரவி சக்தி

    படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன்

    இசை - மனு ரமேசன்

    கலை - ஷன்முகராஜா

    ஆடை வடிவமைப்பு - காயத்ரி

    ஸ்டண்ட் - நைஃப் நரேன்

    திரைப்படத்தின் மற்ற செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.
    • நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் 28 வயது விவசாயியை வீடு புகுந்து தாக்கி, அவரது 25 வயது மனைவியை 5 பேர் கொண்ட கும்பல் ஆடைகளை அவிழ்த்து அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பிலிபிட் பகுதியில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இரவு விவசாயியின் வீட்டிற்குள் அக்கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தத் துவங்கியது. அவரது மனைவி தனது கணவரைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த நபர்கள் அவரது ஆடைகளை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பவத்தின் பின் அந்த தம்பதி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றனர். ஆனால் புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.

    அவர்களின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்தபோதிலும் எந்தவிதமான மருத்துவ உதவிகளும் வழங்கப்படாவில்லை. இந்நிலையில் கூடுதல் நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட குற்றப்பின்னணி இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. முன் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. புகாரை ஏற்காத அதிகாரிகள் குறித்தும் தம்பதியினரின் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

    ×