என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ளனர்.
- கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்.
கல்விச் சுற்றுலாவிற்காக மாணவர்களை மலேசியா அழைத்துச் சென்றபோது விமான நிலையத்தில் ரஜினிகாந்தை சந்தித்ததாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தளத்தில் பதிவிவிட்டுள்ளார். அதில்,
நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8-வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள் என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார்.
"தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம் என்று பதிவிட்டுள்ளார்.
- இன்று திருவோண விரதம். பிரதோஷம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-13 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி காலை 11.09 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.11 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று திருவோண விரதம். பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. கோவை கோனியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம். வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி. திருக்கோகர்ணம், ஸ்ரீ காளஹஸ்தி, திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் பவனி. ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு கண்டருளல். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஓய்வு
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-நலம்
கடகம்-ஜெயம்
சிம்மம்-நட்பு
கன்னி-சுகம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-அமைதி
தனுசு- முயற்சி
மகரம்-ஆர்வம்
கும்பம்-பயிற்சி
மீனம்-திடம்
- மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டும்ம் என்று கோரியிருந்தார்.
- நிர்வாக அலுவலகம் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை.
அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். மேலும், ஊழியர்கள் திங்கள் கிழமைக்குள் தங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவும் கோரியிருந்தார்.
இந்த நிலையில், ஒருவார கால பணி குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், மஸ்க் கொடுத்த காலக்கெடு அமலில் தான் உள்ளது என்றும் ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியே ஆக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பாமல் இருக்க முடியாது என்று அரசின் மனிதவள துறையாக செயல்படும் நிர்வாக அலுவலகம் சார்பில் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு துறை ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் தாங்கள் மேற்கொண்ட பணிகள் என்னென்ன என்பதை விவரிக்க வேண்டும் என்று நிர்வாக அலுவலகம் கோரியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிய அரசு ஊழியர்களை என்ன செய்வதென்றும் அவற்றை எப்படி ஆய்வு செய்வது என்பது குறித்து நிர்வாக அலுவலகம் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது.
- கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- அம்மன் அர்ஜுனன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது.
கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேரை பரிந்துரை செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
- உணவில் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகப்படுத்த இந்த 10 பேரை பரிந்துரைத்து உள்ளேன்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், பேசும்போது, "உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் வலுவான குரலை எழுப்பும் வகையில், உணவில் எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்துமாறும், எண்ணெய் உட்கொள்ளலை 10 சதவீதம் குறைப்பதன் சவாலை 10 பேருக்குக் கடத்துமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவுவதற்காக ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் நடிகர்கள் மோகன்லால், மாதவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேரை பரிந்துரை செய்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
"உடல்பருமனுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், உணவில் எண்ணெய் அளவை குறைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் நான் இந்த 10 பேரை பரிந்துரைத்து உள்ளேன். இவர்களின் பங்களிப்பால், உடல்பருமனுக்கு எதிரான இயக்கம் விரிவடையும்" என்று மோடி எக்ஸ் வலைத்தள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
போஜ்புரி பாடகர்-நடிகர் நிராஹுவா, துப்பாக்கிச் சூடு சாம்பியன் மனு பாக்கர், பளுதூக்கும் வீரர் மீராபாய் சானு, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் எம்.பி. சுதா மூர்த்தி ஆகியோர் மோடியால் பரிந்துரைக்கப்பட்ட மற்ற நபர்கள் ஆவர்.
- நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏற்பட்டது பற்றி எந்த தகவலும் இல்லை.
- நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
வங்காள விரிகுடாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர். எனினும், இதன் காரணமாக சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்கம் பற்றி பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர், "அதிகாலையில் கொல்கத்தாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. விழித்திருந்ததால், உணர்ந்தேன்," என பதிவிட்டுள்ளார்.
- மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
- இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று பகல் 12 மணி அளவில் கூடுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில் அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து அதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
- தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர்.
- தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.
காபூல்:
இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ரெனால்ட்ஸ் (வயது 79). அவர் தனது மனைவி பார்பி (75) உடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் குடியேறினார்.
இந்த தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர். இதற்கிடையே தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.
அதேசமயம் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த தம்பதியினர் தொடர்ந்து சேவையாற்றி வந்தனர். இதன்மூலம் ஏராளமான பெண்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அவர்கள் இருவரும் தற்போது தலிபான்களால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது.
- காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆளும் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் போலீசாரால் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார்.
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை மோடி நிச்சயம் செய்வார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே மீண்டும் மொழிப்போர் என பொய் பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநாடு டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும்.
- தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும்.
புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாடு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதியும், 5-ந்தேதியும் டெல்லியில் நடக்கிறது.
மாநாடு டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும். மாநாட்டில் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரியையும் பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும். ஏனெனில் அவர்கள் மாவட்ட மற்றும் சட்டசபை தொகுதிகளில் முக்கியமான செயல்பாட்டாளர்களாக உள்ளனர்.
இந்த 2 நாள் மாநாடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அனுபவரீதியாக மேலும் கற்றுக்கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. மாநாட்டின் முதல் நாளில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயனுள்ள தொடர்பு, சமூக ஊடக அணுகலை மேம்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் பல்வேறு செயல்பாட்டாளர்களின் சட்டப்பூர்வ பங்கு உள்ளிட்ட நவீன தேர்தல் மேலாண்மையின் முக்கிய பகுதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில் 2-வது நாளில், முந்தைய நாளின் கருப்பொருள் விவாதங்கள் குறித்த செயல் திட்டங்களை அதிகாரிகள் முன்வைக்கிறார்கள். இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
- ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிகளை உயர்த்திவிட்டு, நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது.
- தி.மு.க. அரசின் நிதி சீர்கேட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சென்னை:
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறப்பதாக தி.மு.க. தனது 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 44 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இரண்டே கால் லட்சம் ரூபாய் கடனோடு பிறக்கும் அளவுக்கு கடனை அதிகரித்துள்ள அரசு தி.மு.க. அரசு. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை அனைத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஆசிரியர் நியமனம், மருத்துவர்கள் நியமனம், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புதல், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல், அகவிலைப்படி அளித்தல் என எதைக் கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று சொல்லி காலந்தாழ்த்தும் தி.மு.க. அரசு, தற்போது மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகை திருப்பி அளிக்கப்படுவதை தாமதப்படுத்தி வருகிறது.
2024-2025ம் ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிந்துவிட்டது. மாணவர் சேர்க்கை கவுன்சிலில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பத்துடன் 30,000 ரூபாய் வைப்புத் தொகையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையும் செலுத்தியுள்ளதாகவும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டியதாகவும், வழக்கமாக கவுன்சிலிங் முடிந்து ஓரிரு மாதங்களில் தொடர்புடையவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டு ஐந்தாறு மாதங்களாகியும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படவில்லை என்றும், இந்தத் தொகையை கல்லூரிக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளவும் நிர்வாகம் மறுக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் கேட்டால், நிதிப் பற்றாக்குறை காரணமாக வைப்புத் தொகையை திருப்பி அளிக்க முடியவில்லை என்றும், விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தனியார் கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கமே, வைப்புத் தொகையை திருப்பித் தர தாமதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிகளை உயர்த்திவிட்டு, நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது. இது, தி.மு.க. அரசின் நிதி சீர்கேட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, வைப்புத் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- கோடை காலம் தொடங்கும் முன்பே மும்பையில் வெயில் அதிகரித்து வருகிறது.
- காற்றின் திசை வடமேற்காக சுழல்வதால் வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது.
மும்பை:
மும்பையில் குளிர்காலம் நிறைவு பெறும் தருவாயில் சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் வழக்கத்தை விட வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வழக்கமாக மும்பையில் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே மும்பையில் வெயில் அதிகரித்து வருகிறது.
இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குநர் சுனில் காம்ளே கூறுகையில், எங்கள் அறிவிப்பின் படி வருகிற 4 நாட்களில் மும்பையில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலை வேளையில் கிழக்கு பகுதியில் இருந்து வீசும் காற்றினால் மும்பையில் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
நண்பகலுக்கு பிறகு காற்றின் திசை வடமேற்காக சுழல்வதால் வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. மும்பையில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் இது இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும், என்றார்.






