என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    • இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று பகல் 12 மணி அளவில் கூடுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில் அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து அதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    • தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர்.
    • தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.

    காபூல்:

    இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ரெனால்ட்ஸ் (வயது 79). அவர் தனது மனைவி பார்பி (75) உடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் குடியேறினார்.

    இந்த தம்பதியினர் கடந்த 18 ஆண்டுகளாக அங்குள்ள பாமியான் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக சேவை ஆற்றி வருகின்றனர். இதற்கிடையே தலிபான்கள் 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்கள் உயர் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.

    அதேசமயம் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த தம்பதியினர் தொடர்ந்து சேவையாற்றி வந்தனர். இதன்மூலம் ஏராளமான பெண்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அவர்கள் இருவரும் தற்போது தலிபான்களால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    • தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது.
    • காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆளும் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் போலீசாரால் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார்.

    புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை மோடி நிச்சயம் செய்வார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே மீண்டும் மொழிப்போர் என பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநாடு டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும்.
    • தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும்.

    புதுடெல்லி:

    இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாநாடு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதியும், 5-ந்தேதியும் டெல்லியில் நடக்கிறது.

    மாநாடு டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெறும். மாநாட்டில் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரியையும் பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரிகள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இது முதல்முறை ஆகும். ஏனெனில் அவர்கள் மாவட்ட மற்றும் சட்டசபை தொகுதிகளில் முக்கியமான செயல்பாட்டாளர்களாக உள்ளனர்.

    இந்த 2 நாள் மாநாடு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அனுபவரீதியாக மேலும் கற்றுக்கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. மாநாட்டின் முதல் நாளில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயனுள்ள தொடர்பு, சமூக ஊடக அணுகலை மேம்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் பல்வேறு செயல்பாட்டாளர்களின் சட்டப்பூர்வ பங்கு உள்ளிட்ட நவீன தேர்தல் மேலாண்மையின் முக்கிய பகுதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மாநாட்டில் 2-வது நாளில், முந்தைய நாளின் கருப்பொருள் விவாதங்கள் குறித்த செயல் திட்டங்களை அதிகாரிகள் முன்வைக்கிறார்கள். இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

    • ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிகளை உயர்த்திவிட்டு, நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது.
    • தி.மு.க. அரசின் நிதி சீர்கேட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    சென்னை:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறப்பதாக தி.மு.க. தனது 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 44 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இரண்டே கால் லட்சம் ரூபாய் கடனோடு பிறக்கும் அளவுக்கு கடனை அதிகரித்துள்ள அரசு தி.மு.க. அரசு. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை அனைத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    ஆசிரியர் நியமனம், மருத்துவர்கள் நியமனம், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புதல், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல், அகவிலைப்படி அளித்தல் என எதைக் கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று சொல்லி காலந்தாழ்த்தும் தி.மு.க. அரசு, தற்போது மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகை திருப்பி அளிக்கப்படுவதை தாமதப்படுத்தி வருகிறது.

    2024-2025ம் ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிந்துவிட்டது. மாணவர் சேர்க்கை கவுன்சிலில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பத்துடன் 30,000 ரூபாய் வைப்புத் தொகையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையும் செலுத்தியுள்ளதாகவும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டியதாகவும், வழக்கமாக கவுன்சிலிங் முடிந்து ஓரிரு மாதங்களில் தொடர்புடையவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டு ஐந்தாறு மாதங்களாகியும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படவில்லை என்றும், இந்தத் தொகையை கல்லூரிக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளவும் நிர்வாகம் மறுக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் கேட்டால், நிதிப் பற்றாக்குறை காரணமாக வைப்புத் தொகையை திருப்பி அளிக்க முடியவில்லை என்றும், விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தனியார் கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கமே, வைப்புத் தொகையை திருப்பித் தர தாமதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிகளை உயர்த்திவிட்டு, நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது. இது, தி.மு.க. அரசின் நிதி சீர்கேட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, வைப்புத் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • கோடை காலம் தொடங்கும் முன்பே மும்பையில் வெயில் அதிகரித்து வருகிறது.
    • காற்றின் திசை வடமேற்காக சுழல்வதால் வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது.

    மும்பை:

    மும்பையில் குளிர்காலம் நிறைவு பெறும் தருவாயில் சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் வழக்கத்தை விட வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வழக்கமாக மும்பையில் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே மும்பையில் வெயில் அதிகரித்து வருகிறது.

    இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குநர் சுனில் காம்ளே கூறுகையில், எங்கள் அறிவிப்பின் படி வருகிற 4 நாட்களில் மும்பையில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலை வேளையில் கிழக்கு பகுதியில் இருந்து வீசும் காற்றினால் மும்பையில் வெப்பநிலை குறைவாக இருக்கும்.

    நண்பகலுக்கு பிறகு காற்றின் திசை வடமேற்காக சுழல்வதால் வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. மும்பையில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் இது இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும், என்றார்.

    • அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
    • அரசு எங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.

    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சருடன், அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இது சம்பந்தமாக 4 வார அவகாசம் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. போராட்டங்களை தள்ளிவைக்கவும் கேட்கப்பட்டது.

    மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பேசி, இனிமேலும் கால அவகாசத்தை தர இயலாது என்ற அடிப்படையில், நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக காலை 11 மணிக்கு நடைபெறும். போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு முன்னதாக, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    எங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. நிராகரித்து இருந்தால் போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருப்போம். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மீண்டும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவெடுப்போம். அடுத்தகட்டமாக அரசுடனான பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம். பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தான் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
    • வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும்.

    முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தான் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்திருந்தது.

    இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் வங்கதேசத்தை நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் இந்தியாவும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    பாகிஸ்தான் தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 5-வது வங்கதேசத்தை எதிர்கொள்ளும். இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வெற்றி பெறும் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற திருப்தியோடு தொடரில் இருந்து வெளியேறும்.

    இந்தியா தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 6-வது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

    • ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் விளாசினார்.
    • ஐசிசி தொடரில் ரச்சின் ரவீந்திராவின் 4-வது சதம் இதுவாகும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஷான்டோ உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 14 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் ஷான்டோ சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதற்கிடையே தவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 2 ரன்னிலும், மெஹ்முதுல்லா 4 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 118 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான்டோ உடன் ஜாகர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஷோடி தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேசம் 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஜாகர் அலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷாத் ஹொசைன் 25 பந்தில் 26 ரன்கள் அடித்தார். ஜாகர அலி இறுதி வரை போராடி 55 பந்தில் 45 ரன்கள் அடிக்க, வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஓ'ரூர்கே 10 ஓவரில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வில் யங் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இவர் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் அவுட் ஆனார்.

    3-வது விக்கெட்டுக்கு டேவன் கான்வே உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 72 ரன்னாக இருக்கும்போது கான்வே 45 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்ச்சி நிலைத்து நின்று விளையாடியது. ரச்சின் ரவீந்திரா 50 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பிறகு ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.

    இதனால் 95 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் விளாசினார். ஐசிசி தொடரில் இவரின் 4-வது சதம் இதுவாகும்.

    தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 105 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 38.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கிளென் பிலிப்ஸ் களம் இறங்கினார்.

    மறுமுனையில் விளையாடிய டாம் லாதம் 71 பந்தில் 3 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். டாம் லாதம் 55 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார். அப்போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ் உடன் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.

    • இயக்குநர் அறிவழகன் இயக்கிய 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார்.
    • தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    2009 ஆம் ஆண்டு இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஈரம்.' இந்தப் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதி மக்கள் மனதை வென்றார். இயக்குநர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

    அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' உள்ளிட்ட திரைப்படங்களை அறிவழகன் இயக்கினார். 'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி - அறிவழகன் கூட்டணி தற்பொழுது மீண்டும் இணைந்துள்ளது.

    அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் இயக்கிய 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

    படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் கூறீயதாவது " டெக்னிக்கலாகவும், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் தரமாக வந்துள்ளது. ஹாரர் திரைப்படமாக இருந்தாலும் படத்தின் எமோஷனல் கனெக்ட் மிக நன்றாக நொர்க் அவுட் ஆகியுள்ளது. கண்டிப்பாக இப்படத்தை திரையரங்கிள் காண வேண்டும்.

    நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களுள் சப்தம் திரைப்படம் ஒன்றாகும்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
    • வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்

    நடிகை விஜயலட்சுமி அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    அதன்படி, வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இப்படம் உலகம் முழுவதும் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் தனுஷ் பாடிய புள்ள பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×