என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அரவிந்த் சிதம்பரம் 7-வது சுற்றிலும் முன்னிலை வகிக்கிறார்.
    • பிரக்ஞானந்தா 2வது இடத்தில் நீடிக்கிறார்.

    பிராக்:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 7வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் யூ உடன் மோதினார்.

    வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 61-வது நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார்.

    இதேபோல், கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலில் ரஷியாவின் அனிஷ் கிரியுடன் மோதி வெற்றி பெற்றார்.

    இதையடுத்து,76-வது சுற்று முடிவில் அரவிந்த் சிதம்பரம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    • பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
    • கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது.

    சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சாதிக்க முடியாது என்று ஜிண்டல் குழும நிர்வாக இயக்குநர் சாஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய சாஜ்ஜன் ஜிண்டால், "எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தால் இந்தியாவில் சாதிக்க முடியாது. ஏனெனில் இந்தியர்களான நாங்கள் இருக்கிறோம். இங்கு டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. அவைகளை பின்னுக்குத் தள்ளி டெஸ்லாவால் ஒருபோதும் சாதிக்க முடியாது.

    எலான் மஸ்க் ஸ்மார்ட்டான நபராக இருக்கலாம். அவர் பல பிரமிக்கத்தக்கச் செயல்களைச் செய்யலாம். ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ராக்கெட் கூட செலுத்தலாம். ஆனால், இங்கு அவரால் சாதிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்:

    -செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை

    -பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை

    -பரமக்குடியில் பட்டப்பகலில், நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

    -மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி என்பது யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காப்பதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.

    நாள்தோறும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் திரு. @mkstalin

    , மக்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிலை படுத்தி, இதுபோன்ற சம்பவங்களை கடந்துவிட முனைவது, தமிழ்நாட்டின் மகளிருக்கு இழைக்கின்ற மன்னிக்கமுடியாத துரோகம்! இது கடும் கண்டனத்திற்குரியது.

    சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அந்த இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு "போலி போட்டோஷூட் அப்பா"வை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
    • பாலிவுட்டில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்துள்ளார்.

    பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகராவார் அனுராக் காஷ்யப். இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    மேலும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    பாலிவுட்டில் ஹிட் படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப் சமீப காலமாக இந்தி சினிமாவைவிட தென்னிந்திய படங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    மேலும், மும்பையில் வசிக்கும் அனுராக் இந்தாண்டு தென் இந்தியாவிற்கு குடியேற போவதாக கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.

    ஆனால், அனுராக் காஷ்யப் பெங்களூருவில் குடி பெயர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தான் பாலிவுட்டில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்துள்ளார்.

    சமீபத்தில் அனுராக் காஷ்யப் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களிடம் இருந்து நான் விலகி இருக்க விரும்புகிறேன். இந்த துறை மிகவும் Toxic ஆகிவிட்டது.

    அனைவரும் யதார்த்தமற்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ரூ.500 கோடி, ரூ.800 கோடிகளில் திரைப்படம் எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

    கலைக்கான மதிப்பு அங்கு போய்விட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது.
    • உங்களுக்கு விருப்பம் இருந்திருந்தால் அந்தப் பகுதியை மீண்டும் கொண்டு வந்து இருப்பீர்கள். ஆனால் உங்களை தடுத்தது எது?.

    ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:-

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறுவோம் என சொல்கிறார். அவரை யார் தடுத்தது? அவ்வாறு திரும்பப் பெற வேண்டாம் என யாராவது சொன்னார்களா?

    கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் அப்போது பாகிஸ்தான் நம் மீது தாக்குதல் நடத்தியது. உங்களுக்கு விருப்பம் இருந்திருந்தால் அந்தப் பகுதியை மீண்டும் கொண்டு வந்து இருப்பீர்கள். ஆனால் உங்களை தடுத்தது எது?.

    நீங்கள் ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தை பார்க்கும் போது, அதன் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவுடன் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதைப்பற்றி பேசுவது கிடையாது?.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறும்போது, அவர்கள் தற்போது சீனா பகுதியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதியையும் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    • வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    • ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை.
    • ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தால் விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

    இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்

    இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி . அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, முகமது ஷமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஷமி விரதம் இருக்காமல் இருக்க இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.

    • நவ்ரு உலகின் மூன்றாவது சிறிய நாடாகும்.
    • நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது.

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான நவ்ரு, வெளிநாட்டினருக்கு 1,05,000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.91 லட்சத்திற்கும் மேல்) செலுத்தி நாட்டின் குடியுரிமையை வழங்கும் "தங்க பாஸ்போர்ட்" திட்டத்தை தொடங்கியுள்ளது.

    உலகின் மூன்றாவது சிறிய நாடான நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நவ்ரு நாட்டின் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆதலால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி திரட்டுவதற்காக நவ்ரு நாடு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

    திரட்டப்படும் நிதியின் மூலம் நவ்ரு நாட்டின் 90% மக்களை மேடான இடத்திற்கு மாற்ற அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    நவ்ரு நாட்டின் குடியுரிமை இருந்தால், இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
    • லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார்.

    இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா இன்று லண்டன் புறப்பட்டார்.

    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய திரையுலகின் இசைத்துறையில் மூன்று தலைமுறையாக கோலோச்சி வருகிற இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு இந்திய இசையமைப்பாளரால் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான "வேலியன்ட்" இசையை லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் கிராமப்புரங்களில் இருந்து தொடங்கிய தனது இசைப்பயணத்தை தற்போது உலக அரங்கில் எடுத்து சென்று தனக்கென தனி முத்திரை பதித்து, சாதனைகள் பல படைத்து இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜூலை மாதத்தில் இருந்து இரு நகரங்களுக்கும் இயக்க திட்டம்.
    • இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கவில்லை.

    இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஜூலை மாதத்தில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கும், நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகருக்கும் நீண்ட தூர நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதற்கும், இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கும் இது குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

    நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து போயிங் 787 விமானத்தை குத்தகைக்கு எடுத்து நீண்ட தூர விமான போக்குவரத்தை தொடங்க இருக்கும் நிலையில், ஐரோப்பிய சந்தையில் நுழைகிறது.

    ஏர்பஸ் A321 XLR விமானங்கள் இந்த வருடமும், A350-900 விமானம் 2027-ஆம் ஆண்டும் இண்டிகோவுக்கு டெலிவரி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மார்ச் 1-ந்தேதி போயிங் 787-9 என விமானத்தை நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது. இந்த வருடம் இறுதிக்குள் மேலும் மூன்று விமானங்களை குத்தகைக்கு வாங்க இருக்கிறது.

    ஆனால் எந்த நகரங்களில் இருந்து மான்செஸ்டர், ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவிக்கவில்லை.

    இங்கிலாந்து எங்களுக்கு முக்கியமான சந்தை. இந்தியாவில் இருந்து மான்செஸ்டருக்கு நேரடி விமான சேவை அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு மு.க.ஸ்டாலின் ?
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு.

    தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது தொடர்பாக அண்ணாமலை தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு மு.க.ஸ்டாலின் ?

    ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

    பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள்.

    வெட்கக்கேடு!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு பாஜக அரசு இடித்து வருகிறது.
    • புல்டோசரால் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி பாஜக அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்தன.

    இந்நிலையில், பிரயாக்ராஜில் ஒரு வழக்கறிஞர், ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேரின் வீடுகளை இடித்ததற்காக உத்தரபிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகளை இடிக்கும் பாஜக அரசுகளுக்கு எதிரான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மனுதாரர்களான வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது மற்றும் 3 பேர் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது "பாஜக அரசால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு உத்தரவிடுவோம், இதைச் செய்வதற்கான ஒரே வழி அதுதான்" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    ×