என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சர்வதேச ஏ.ஐ. திறன் மையமாக நிலை நிறுத்திக் கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
    • அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

    2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறியதாவது:-

    சர்வதேச ஏ.ஐ. திறன் மையமாக நிலை நிறுத்திக் கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏ.ஐ. துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் ஏ.ஐ. துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏஐ துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல.

    சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் ஏ.ஐ. தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன் வாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததால் இந்த துறையில் இடைவெளி அதிகரித்து வருகிறது.

    அத்துடன் இது, உலகளவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு மாறும் வேகத்தை குறைக்க காரணமாக மாறி உள்ளது.

    அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.
    • மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது.

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த நவம்பர் மாதம் நடந்த ஏலத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான லோகேஷ் ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது.

    இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் தொடரின் முதல் சில பாதிகளை தவரவிட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ராகுல் மனைவிக்கு இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் முதல் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசவ சமயத்தில் மனைவியை அருகில் இருந்து கவனிக்க விரும்பும் லோகேஷ் ராகுல் ஐ.பி.எல். போட்டியின் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.

    இதேபோல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அகாடமியில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.

    அவர் எப்போது முழு உடல் தகுதியை எட்டுவார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளது. மயங்க் யாதவை லக்னோ அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தான் மட்டும் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
    • ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது.

    சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. 20 நிமிடங்கள் கழித்து 3.45 மணிக்கு பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தளம் முடங்கியது.

    அதன்பின் மீண்டும் சரிசெய்யப்பட்டபோதும் மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளத்தின் செயல்பாடுகள் முடங்கின. பல மணி நேரம் இந்த முடக்கம் நீடித்தது.

    இந்நிலையில் எக்ஸ் தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தின் முதலாளி எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

     

    ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு மஸ்க் அளித்தப் பேட்டியில், "எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக தனது எக்ஸ் பதிவில் அவர், "எக்ஸ் தளத்தின் மீது அன்றாடம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல். இதன் பின்னணியில் மிகப்பெரிய வலை அல்லது ஒரு நாட்டின் தலையீடு இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். தற்போது உக்ரைன் தான் அந்த நாடு என மஸ்க் முடிவுகட்டியுள்ளார்.

    உக்ரைன் நாட்டில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. தான் மட்டும் இந்த சேவையை நிறுத்தினால் உக்ரைன் நாடு முடங்கும் என எலான் மஸ்க் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

     

    ரஷியா- உக்ரைன் போர் தொடர்பாக ஜெலன்ஸ்கிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் எலான் மஸ்க் இந்த மிரட்டலை விடுத்திருந்தார். எனவே எலான் மஸ்க்கின் சவடாலை அடுத்து அவரின் எக்ஸ் தளம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    • இந்திய பங்குச் சந்தை காலையிலேயே சரிவுடன் தொடங்கின.
    • நேற்றைய நாள் முடிவிலும் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி இன்று காலை சரிவுடன் தொடங்கின. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 138 புள்ளிகளும் சரிவடைந்து வர்த்தகத்தை தொடங்கின.

    இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 379.79 புள்ளிகள் சரிந்து 73,735.38 புள்ளிகளையும், என்.எஸ்.இ. நிஃப்டி 108.40 புள்ளிகள் சரிந்து 22,351.90 ஆகவும் உள்ளது.

    இந்திய பங்குச் சந்தைகள் நேற்று மாலை சரிவுடன் முடிவடைந்தன. வங்கித் துறை, ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி. துறைகளை சேர்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. நேற்றைய பங்குச் சந்தை சரிய தொடங்கும் முன் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதாக சந்தை வல்லுநரான ஜதின் ஜெடியா தெரிவித்தார்.

    • முதலமைச்சர் நடந்து வருவதை பார்த்ததும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருக்கழுக்குன்றம் வழியாக சென்றார்.

    அப்போது காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றத்தில் கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நெடுக நின்றிருந்த பொதுமக்களை சந்தித்தார்.

    இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்றனர். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி நடந்து சென்று மக்களின் வர வேற்பை பெற்றுக் கொண்டார்.

    முதலமைச்சர் நடந்து வருவதை பார்த்ததும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.

    மாணவ-மாணவிகள் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    நீங்கள் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    கல்லூரி உதவித்தொகை மாதம் ரூ.1000 வழங்குவதற்கும் மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். நரிக்குறவ பெண்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாசி மாலை அணிவித்து மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் செல்பி எடுக்க திணறியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த செல்போனை வாங்கி அவரே போட்டோ எடுத்து கொடுத்தார்.

    குழந்தைகளையும் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். சாலையின் இடது புறம் பொதுமக்கள் வழி நெடுக நின்று வரவேற்பு கொடுத்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மாநகரின் எலலைக்கு வந்தபோதும் அங்கேயும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்றிருந்தனர். மக்கள் வெள்ளத்தில் அவர் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டார்.

    மொத்தம் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடந்ததால் திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு சாலை கோலாகலமாக காட்சி அளித்தது.

    • அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.
    • இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின விழா நாளை (மார்ச் 12ம் தேதி ) நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.

    அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இன்று மாலை அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலத்தை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அந்நாட்டு தலைவர்களையும் சந்தக்க இருக்கிறார்.

    நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இதில் இந்திய பாதுகாப்பு படையினரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறது.

    • சென்னையில் 32 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் மட்டும் 25 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் பேசும்போது தி.மு.க. எம்.பி.க்கள் நாகரீகம் இல்லாதவர்கள் போல நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று மாலையில் தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 125 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    சென்னையில் 32 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சென்னையில் மட்டும் 25 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதே போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் தி.மு.க.வி னர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
    • கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடை த்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.

    நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரன்யாவும், தருணும் பல வருட நண்பர்கள் ஆவார்கள். அவர் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதாகவும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

    அதுபோல் ஒரு அரசியல் பிரமுகரின் கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். இந்த கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்களில் மட்டும் கூட்டுறவு வங்கியிலிருந்து ரன்யாவின் கணக்கிற்கு ரூ.10 லட்சம் பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வருவதற்கு முன்பு ரன்யாவின் கணக்கில் பணம் இல்லை. இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் விவகாரம் கர்நாடக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. கர்நாடக சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் தொடர்புடையதாக கூறப்படும் செல்வாக்குமிக்க 2 அமைச்சர்கள் யார்? என கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு உள்துறை மந்திரி பரமேஸ்வரா இந்த வழக்கு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை சி.பி.ஐ. விசாரித்து கண்டுபிடிக்கும் என தெரிவித்தார்.

    • அமெரிக்க பங்குச்சந்தை தினமும் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது.
    • அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 4 டிரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக வரி விதிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த நாடுகள் பதிலடியாக அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது. மேலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே தனது வரி விதிப்பு நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அமெரிக்கப் பொருளாதாரம் மாற்றக் காலத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

    அவரது இந்த கருத்தை தொடர்ந்து உலகளவில் பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    பொருளாதார மந்தநிலை குறித்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்பனை செய்வதை அதிகரித்தனர்.

    இதன்மூலம் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான எஸ்-பி 500, பிப்ரவரி 19-ந்தேதி அடைந்த வரலாற்று உச்சத்தில் இருந்து 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் சரிந்தன.

    சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பால், ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.
    • வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

    09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

    08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

    07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240

    06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-03-2025- ஒரு கிராம் ரூ.108

    09-03-2025- ஒரு கிராம் ரூ.108

    08-03-2025- ஒரு கிராம் ரூ.108

    07-03-2025- ஒரு கிராம் ரூ.108

    06-03-2025- ஒரு கிராம் ரூ.108

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனிக்கிழமை வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை கோடை மழை பெய்தது. அதிகாலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில், புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று காலை பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. சென்னையை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • இந்திய ரெயில்வேயில் 12,362 பெண் அலுவலக ஊழியர்களும் 2,360 பெண் மேற்பார்வையாளர்களும் உள்ளனர்.
    • இந்திய ரெயில்வேயில் 12.3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதமாகும். இது 2014-ல் 6.6 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய ரெயில்வேயின் முக்கிய செயல்பாட்டு வேலைகளில் பெண்கள் அதிக பங்கு வகிக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தற்போது 2,162 பெண்கள் லோகோ பைலட்டுகளாக பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் 794 பெண்கள் ரெயில் மேலாளர்களாக (காவலர்கள்) உள்ளனர். கூடுதலாக, இந்தியா முழுவதும் 1,699 பெண்கள் நிலைய மேலாளர்களாக (station masters) பணிபுரிகின்றனர்.

    இந்திய ரெயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பெண் லோகோ பைலட்டுகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதமாகும். இது 2014-ல் 6.6 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    ரெயில்வே மூத்த அதிகாரி கூறுகையில்,

    நிர்வாக மற்றும் பராமரிப்புத் துறைகளிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்திய ரெயில்வேயில் 12,362 பெண் அலுவலக ஊழியர்களும் 2,360 பெண் மேற்பார்வையாளர்களும் உள்ளனர்.

    பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையான தண்டவாளப் பராமரிப்பில், ரெயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக 7,756 பெண்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர்.

    பயணிகள் சேவைகளிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 4,446 பேர் டிக்கெட் சரிபார்ப்பாளர்களாகவும், 4,430 பேர் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பாயிண்ட்ஸ்மேன்களாகவும் பணியாற்றுகின்றனர்.

    இந்திய ரெயில்வே பல ரெயில் நிலையங்களை அனைத்து பெண் குழுக்களுடன் செயல்படுத்தி உள்ளது. இவற்றில் மாதுங்கா, நியூ அமராவதி, அஜ்னி மற்றும் காந்திநகர் ரெயில் நிலையங்கள் அடங்கும்.

    இந்திய ரெயில்வேயில் 12.3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்திய ரெயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.

    ×