என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
    • இஸ்ரேல் படைகள் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

    டெய்ர் அல் பலாஹ்:

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் படைகள் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

    மறுபுறம் ஏமனைச் சேர்ந்த ஹவுதிகளும் இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.

    இந்நிலையில், காசா குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது என காசா சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது.

    இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று மதியம் 1,007 புள்ளிகள் உயர்ந்து 76,456 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக சென்செக்ஸ் 899.02 புள்ளிகள் உயர்ந்து 76,348.06 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று மதியம் 309 புள்ளிகள் அதிகரித்து 23,216 புள்ளிகளைத் தொட்டது. இறுதியாக நிஃப்டி 283.05 புள்ளிகள் உயர்ந்து 23,190.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 44 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வை கண்டது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று 1% உயர்ந்து வர்த்தகம் ஆனது. 

    • நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, காவல்துறை விரிவாக்கம் ஐஜியாக இருந்த லட்சுமி ஐபிஎஸ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

     

    • டிராவிஸ் ஹெட், கிளாசன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
    • பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் உடன் முகமது ஷமி இணைந்துள்ளது அணிக்கு பலம் சேர்க்கும்.

    கடந்த முறை சாம்பியன் பட்டத்தை தவற விட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் வகையில் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    பேட்ஸ்மேன்கள்

    டிராவிஸ் ஹெட், கிளாசன், இஷான் கிஷன், அதர்வா டைடு, அபிநவ் மனோகர், அனிகெட் வர்மா, சச்சின் பேபி

    ஆல்-ரவுண்டர்கள்

    அபிஷேக் சர்மா, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், வியான் முல்டர், நிதிஷ் குமார் ரெட்டி

    பந்து வீச்சாளர்கள்

    பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், எசான் மலிங்கா.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் சிக்சர்கள், பவுண்டரிகள் என வாணவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு ஏற்றபட சர்வதேச போட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஒருவேளை காயம் போன்ற ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் இஷான் கிஷன் மாற்று தொடக்க வீரராக உள்ளார்.

    மிடில் ஆர்டர்

    கிளாசன், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அதர்வா டைடு, கமிந்து மெண்டிஸ், முல்டர் என உள்ளனர். முதல் ஆறு பேர் அதிரடியாக விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

    வேகப்பந்து வீச்சு

    பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், வியான் முல்டர் ஆகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் எசான் மலிங்கா, சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோர் உள்ளனர். நிதிஷ் குமாரும் தேவைப்பட்டால் மிதவேக பந்து வீச்சாளராக திகழ்வார்.

    பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல் ஆகியோர் களம் இறங்க வாய்ப்புள்ளது. முகமது ஷமி, உனத்கட் தொடக்கத்தில் பந்து வீச, பேட்கம்மின்ஸ் மிடில் ஓவர்கள் பந்து வீச வாய்ப்புள்ளது. ஹர்ஷல் படேல் சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர். இதனால் கடைசி 4 ஓவரின்போது பயன்படுத்தப்படுவார்.

    சுழற்பந்து வீச்சு

    ஆடம் ஜம்பா, ராகுல் சாஹர் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள். அபிஷேக் சர்மா அவர்களுக்கு துணையாக இருப்பார்.

    வெளிநாட்டு வீரர்கள்

    கிளாசன், டிராவிஸ் ஹெட், கமிந்து மெண்டிஸ், வியான் முல்டர், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, எசான் மலிங்கா ஆகியோர் உள்ளனர். இதில் கிளாசன், டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை இம்பேக்ட் பிளேயர் வாய்ப்பை பயன்படுத்த டிராவிஸ் ஹெட்டை பேட்டிங் செய்ய வைத்து, ஆடம் ஜம்பா பந்து வீச வைக்கப்படலாம். இல்லையெனில் மற்ற வெளிநாட்டு வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்பில்லை.

    பேட்டிங்கில் அசுர பலத்துடன் விளங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் முகமது ஷமி இணைந்துள்ளது பந்து வீச்சுச்கான சமநிலையை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    • அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன
    • நாக்பூரில் கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிரத்தின் அவுரங்கபாத் நகரில் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகளின் போராட்டம் நாக்பூரில் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஆக்கிரமிப்பாளர்களை (அவுரங்கசீப்) புகழ்வது தேசத்துரோகமாகும். நமது முன்னோர்களை அவமதித்தவர்களை, நமது பெண்களை துன்புறுத்தியவர்களை, நமது நம்பிக்கையை பழித்தவர்களை புகழ்வதை புதிய இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது

    ஒவ்வொரு இந்திய குடிமகனும் நமது அடையாளத்தை அழிக்க முயன்றவர்களை பாராட்டுவதை விட, நமது புகழ்பெற்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • மகிழ்ச்சியான 20 நாடுகளில் உலகின் பெரிய நாடான அமெரிக்கா இல்லை.

    வாஷிங்டன்:

    உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் 147 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.

    டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகியவை 2 முதல் 5-வது இடங்களில் உள்ளன. முதல் 10 இடத்தில் இஸ்ரேல் (8), இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு 126-வது இடத்தில் இருந்த இந்தியா இந்தப் பட்டியலில் 118-வது இடம் பிடித்துள்ளது.

    மகிழ்ச்சியான 20 நாடுகளில் உலகின் பெரிய நாடான அமெரிக்கா இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் முறையே 24, 23 மற்றும் 33-வது இடங்களைப் பிடித்தன.

    இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

    • 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
    • பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் சதாம் உசேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    ருஷிகொண்டா மலைகளில் உள்ள ஜெகன் மோகனின் ஆடம்பர மாளிகை குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், "ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்தார்.

    என் தாத்தா முதல்வராக இருந்தார், என் அப்பா முதல்வராக இருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. அவரது சகோதரி மற்றும் தாயார் ஜெகன் மோகன் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை

    அரண்மனை போன்ற இந்த வீட்டை என்ன செய்வது என்பது குறித்து தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.

    சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தார், 1979 முதல் 2003 வரை அந்த நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.
    • மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.

    இந்நிலையில், கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தத் தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.

    இந்த நடைமுறை நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே அமலுக்கு வருகிறது என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார்.
    • விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவின் வீட்டில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் இரண்டு மருமகன்களான ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு கொலையில் முடிந்துள்ளது.

    இதில், விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார். விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    ஜெய்ஜித் ஆபத்தான நிலையில் பாகல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • டிராகன் படத்தில் இயக்குனர்களான கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம்.

    திரையரங்கில் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். அதை எல்லாவற்றையும் மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதில்லை.

    இதனால் திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    டிராகன்

    அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த மாதம் வெளியானது டிராகன் திரைப்படம். இப்படத்தில் இயக்குனர்களான கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

    .

    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

    தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம். இப்படத்தில் பவிஷ்,மாத்யு தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்த நவீன சமூகத்து காதல் மற்றும் நட்பை பிரதிபலிக்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    Officer On Duty

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    பேபி & பேபி

    பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியானது பேபி & பேபி திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

    இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    ரிங் ரிங்

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பிரவீன் ராஜ், விவேக், விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டானியல், அர்ஜுனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ரிங் ரிங் திரைப்படம்.

    நண்பர்கள் இணைந்து ஒன்றாக பார்டி செய்யும் போது அவர்களின் தொலைப்பேசியை ஒருவருக்கொருவர் ஸ்பீக்கரில் தான் பேச வேண்டும் அவர்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும் ஒருவருக்கொருவர் தெரிவிக்க வேண்டும் என ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு இவர்களுக்குள் பெரிய பிரச்சனையாக உருமாறுகிறது.என்பதே படத்தின் கதைக்களமாகும். இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    தினசரி

    ஜி.சங்கர் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்தியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த மாதம் வெளியானது தினசரி திரைப்படம். இப்படத்தில் எம்.எஸ் பாஸ்கர், பிரேம்ஜி அமரன், சாம்ஸ், ராதா ரவி, மீரா கிருஷ்ணன், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை இளையராஜா மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்க்கின்றனர்.
    • குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்ப்பதற்காகவே அச்செயலியை பயன்படுத்துவதாக CHEAT EYE ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக மான்செஸ்டரில் 8.8% பெண்களும், பிர்மிங்கத்தில் 8.3% பெண்களும் காதலர்கள் குறித்து துப்பறிந்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவன் துசாரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் உள்னளர்.
    • லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு போன்ற ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த முறையாவது அந்த அணி கோப்பையை வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    பேட்ஸ்மேன்கள்

    ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா.

    ஆல்-ரவுண்டர்கள்

    லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல்.

    பந்து வீச்சாளர்கள்

    ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.

    தொடக்க வீரர்கள்

    இந்திய அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி களம் இறங்கி வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். இதனால் இந்த சீசனிலும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவருடன் பில் சால்ட், தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்கள் என்பதில் அணிக்கு பெரிய அளவில் சிரமம் இல்லை எனலாம்.

    மிடில் ஆர்டர்

    ரஜத் படிதார், ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஸ்வப்னில் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் தேவைப்பட்டால் குருணால் பாண்ட்யாவும் மிடில் வரிசையில் கைக்கொடுப்பார்.

    நல்ல தொடக்கம் அமைந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட துணைபுரிவார்கள். ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், டிம் டேவிட் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கலாம்.

    சுழற்பந்து வீச்சு

    குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், லிவிங்ஸ்டன், பெத்தேல் நன்றாக அறிமுகம் ஆனவர்கள். இவர்களுடன் சுயாஷ் சர்மா, மோகித் ரதீ ஆகியோர் உள்ளனர். வாய்ப்பு கொடுக்கப்பட்டால்தான் அவர்களின் திறமை வெளிப்படும். குருணால் பாண்ட்யா என்ற ஒரு நட்சத்திர ஸ்பின்னருடன் பகுதி நேரமாக ஸ்பின்னர்களாக ஆல்-ரவுண்டர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஸ்வப்னில் சிங்கை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர்கள்

    ஜோஷ் ஹேசில்வுட், புவனேஸ்வர் குமார், நுவான் துசாரா, யாஷ் தயால், லுங்கி நிகிடி ஆகிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் ரஷித் தார், அபிநந்தன் சிங், ஆல்ரவுண்டர் மனோஜ் பாண்டேஜ் உள்ளனர்.

    ஜோஷ் ஹேசில்வுட் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அதேபோல் புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவான் துசாரா இவர்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டும் வேகப்பந்து யூனிட்டிற்கு உதவியாக இருப்பார்.

    வெளிநாட்டு வீரர்கள்

    பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஷெப்பர்டு, பெத்தேல், ஹேசில்வுட், துசாரா, லுங்கி நிகிடி ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

    சமநிலையான ஆடும் லெவன் அணிக்காக இவர்கள் எப்படி பயன்படுத்த இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

    ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டால் ஹேசில்வுட், லுங்கி நிகிடி அல்லது துசாரா, லிவிங்ஸ்டன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு, பில் சால்ட் இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படலாம்.

    எப்போதுமே ஆர்சிபி ஏற்றம் இறக்கத்துடன் பிளேஆஃப் வரை முன்னேறும். ஆனால் பிளேஆஃப், இறுதிப் போட்டியில் வெற்றி என்ற தடைக்கல்லை தாண்ட முடியாமல் உள்ளது. இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்று பார்ப்போம்.

    ×