என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.
- மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி:
கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஐ.சி.சி. தடை விதித்தது.
இந்நிலையில், கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தத் தடையை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.
இந்த நடைமுறை நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே அமலுக்கு வருகிறது என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார்.
- விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவின் வீட்டில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் இரண்டு மருமகன்களான ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு கொலையில் முடிந்துள்ளது.
இதில், விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார். விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஜெய்ஜித் ஆபத்தான நிலையில் பாகல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- டிராகன் படத்தில் இயக்குனர்களான கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம்.
திரையரங்கில் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். அதை எல்லாவற்றையும் மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதில்லை.
இதனால் திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
டிராகன்
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த மாதம் வெளியானது டிராகன் திரைப்படம். இப்படத்தில் இயக்குனர்களான கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
தனுஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம். இப்படத்தில் பவிஷ்,மாத்யு தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்த நவீன சமூகத்து காதல் மற்றும் நட்பை பிரதிபலிக்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Officer On Duty
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
பேபி & பேபி
பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியானது பேபி & பேபி திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ரிங் ரிங்
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பிரவீன் ராஜ், விவேக், விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டானியல், அர்ஜுனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ரிங் ரிங் திரைப்படம்.
நண்பர்கள் இணைந்து ஒன்றாக பார்டி செய்யும் போது அவர்களின் தொலைப்பேசியை ஒருவருக்கொருவர் ஸ்பீக்கரில் தான் பேச வேண்டும் அவர்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும் ஒருவருக்கொருவர் தெரிவிக்க வேண்டும் என ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு இவர்களுக்குள் பெரிய பிரச்சனையாக உருமாறுகிறது.என்பதே படத்தின் கதைக்களமாகும். இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தினசரி
ஜி.சங்கர் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்தியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த மாதம் வெளியானது தினசரி திரைப்படம். இப்படத்தில் எம்.எஸ் பாஸ்கர், பிரேம்ஜி அமரன், சாம்ஸ், ராதா ரவி, மீரா கிருஷ்ணன், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை இளையராஜா மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்க்கின்றனர்.
- குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.
உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்ப்பதற்காகவே அச்செயலியை பயன்படுத்துவதாக CHEAT EYE ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மான்செஸ்டரில் 8.8% பெண்களும், பிர்மிங்கத்தில் 8.3% பெண்களும் காதலர்கள் குறித்து துப்பறிந்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவன் துசாரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் உள்னளர்.
- லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு போன்ற ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்.
ஐ.பி.எல். போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த முறையாவது அந்த அணி கோப்பையை வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள்
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா.

ஆல்-ரவுண்டர்கள்
லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல்.
பந்து வீச்சாளர்கள்
ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.
தொடக்க வீரர்கள்
இந்திய அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி களம் இறங்கி வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். இதனால் இந்த சீசனிலும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவருடன் பில் சால்ட், தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்கள் என்பதில் அணிக்கு பெரிய அளவில் சிரமம் இல்லை எனலாம்.
மிடில் ஆர்டர்
ரஜத் படிதார், ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஸ்வப்னில் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் தேவைப்பட்டால் குருணால் பாண்ட்யாவும் மிடில் வரிசையில் கைக்கொடுப்பார்.
நல்ல தொடக்கம் அமைந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட துணைபுரிவார்கள். ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், டிம் டேவிட் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கலாம்.

சுழற்பந்து வீச்சு
குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், லிவிங்ஸ்டன், பெத்தேல் நன்றாக அறிமுகம் ஆனவர்கள். இவர்களுடன் சுயாஷ் சர்மா, மோகித் ரதீ ஆகியோர் உள்ளனர். வாய்ப்பு கொடுக்கப்பட்டால்தான் அவர்களின் திறமை வெளிப்படும். குருணால் பாண்ட்யா என்ற ஒரு நட்சத்திர ஸ்பின்னருடன் பகுதி நேரமாக ஸ்பின்னர்களாக ஆல்-ரவுண்டர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஸ்வப்னில் சிங்கை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள்
ஜோஷ் ஹேசில்வுட், புவனேஸ்வர் குமார், நுவான் துசாரா, யாஷ் தயால், லுங்கி நிகிடி ஆகிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் ரஷித் தார், அபிநந்தன் சிங், ஆல்ரவுண்டர் மனோஜ் பாண்டேஜ் உள்ளனர்.
ஜோஷ் ஹேசில்வுட் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அதேபோல் புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவான் துசாரா இவர்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டும் வேகப்பந்து யூனிட்டிற்கு உதவியாக இருப்பார்.

வெளிநாட்டு வீரர்கள்
பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஷெப்பர்டு, பெத்தேல், ஹேசில்வுட், துசாரா, லுங்கி நிகிடி ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
சமநிலையான ஆடும் லெவன் அணிக்காக இவர்கள் எப்படி பயன்படுத்த இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டால் ஹேசில்வுட், லுங்கி நிகிடி அல்லது துசாரா, லிவிங்ஸ்டன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு, பில் சால்ட் இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படலாம்.
எப்போதுமே ஆர்சிபி ஏற்றம் இறக்கத்துடன் பிளேஆஃப் வரை முன்னேறும். ஆனால் பிளேஆஃப், இறுதிப் போட்டியில் வெற்றி என்ற தடைக்கல்லை தாண்ட முடியாமல் உள்ளது. இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்று பார்ப்போம்.
- உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து அவர்கள் அவிழ்த்துள்ளனர்.
பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
- லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
- இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கான டிரெய்லர் இன்று 5 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3.50 நிமிடம் ஓடும் இந்த ட்ரெய்லரில் மோகன்லால் எப்படிப்பட்டவர் என்பதையும், முதல்வராகப் பொறுப்பேற்ற டோவினோ தாமஸின் அரசியலையும் இந்த பாகம் பேசும் எனத் தெரிகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "அன்புள்ள மோகன்லால் நடித்து பிருத்விராஜ் இயக்கிய திரைப்படமான எம்புரான் படத்தின் டிரெய்லரை பார்த்தேன். மிக ஃபெண்டாஸ்டிக்கான வொர்க். படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கடவுளிம் ஆசிர்வாதங்களுடன்" என கூறியுள்ளார்.
- தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் படைகள், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. மறுப்பக்கம் ஏமனை சேர்ந்த ஹவுதிக்களும் இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களால் இஸ்ரேல் - காசா பகுதிகளில் மீண்டும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், காசா குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் நள்ளிரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் 400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதாகவோ அல்லது பிற தாக்குதல்களை நடத்தியதாகவோ எந்த அறிக்கையும் இல்லை. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடந்த தாக்குதல்களில் ஒன்று, இஸ்ரேலின் எல்லைக்கு அருகிலுள்ள அபாசன் அல்-கபிராவில் வசித்து வந்த அபு டாக்கா குடும்பத்தின் வீட்டைத் தாக்கியது.
இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இதனை அந்த பகுதியின் அருகில் இயங்கி வரும் ஐரோப்பிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- பீஜப்பூரில் நடந்த என்கவுண்டரில் 18 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாவட்டத்தின் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கான்கர் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நமது வீரர்கள் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மோடி அரசாங்கம் நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. மேலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு நக்சலைட்டுகளிலிருந்து விடுபடும் என பதிவிட்டுள்ளார்.
- வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
- இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.
பட்டதாரிகள் பலருக்கும் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நேர்காணலின் போது இளைஞர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில், அவர் வேலைவாய்ப்பு தேடி ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்றுள்ளார்.
அங்கு நிறுவன மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் பதிலளித்து கொண்டிருந்த போது வெளியில் விமானம் பறக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தன்னை மறந்த அவர் மேலாளரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை நிறுத்திவிட்டு அருகே இருந்த கண்ணாடி சுவற்றின் வழியாக விமானம் பறப்பதை பார்த்தார். அதன் பின்னர் அந்த வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
அந்த வாலிபரின் உடல் மொழியும், தன்னம்பிக்கையும், எதிர்கால திட்டங்கள் பற்றி தெளிவின்மையும் தான் அவருக்கு வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்று நிறுவன மேலாளர் கூறினார் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.
- இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
- முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்திய போது அவர் திருட்டு உள்பட மேலும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஞானசேகரன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் இன்று ஞானசேகரனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.






