என் மலர்
தலைப்புச்செய்திகள்
- உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார்.
- நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான்" என்று மாணவர்களிடம் கூறினார். பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு திமுக எம்.பி. கனிமொழி, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதிகாசங்களில் நிலவுக்கு அனுமான் சென்றார் என்ற பதிவு இருக்கிறது என்று சொல்கிறார். இதில் தவறு இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்வதா. விண்வெளிக்கு முதல் முதலில் சென்றது அனுமன் என அனுராக் தாக்கூர் நம்புகிறார், அதனால் சொன்னார். மெய்ஞான்மும் விஞ்ஞானமும் ஏற்கனவே இணைந்து தான் இந்திய நாட்டில் பரிமாண வளர்ச்சியில் வலர்ந்து கொண்டு இருக்கிறது.
ராமர் என்ன என்ஜீனியரா என்று கேட்டனர். அதன் பின்னர் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் மோடி அரசு வான்வெளியில் என்ன முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை பாருங்கள். அனுராக் தாகூர் பேசுவதை விட்டு முன்னேற்றத்தை பாருங்கள்" என்று தெரிவித்தார்.
- தி.மு.க. ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறுமுறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது.
- அ.தி.மு.க. ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி திருமங்கலம் வருவதை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அவர் அங்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், மாணிக்கம், தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேலுமணி பேசும்போது:-
எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் பயணத்தை மேற்கொண்டு சரித்திரம் படைத்து வருகிறார். ஒவ்வொரு தொகுதிகளும் எழுச்சி பயணத்தின் மூலம் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தி.மு.க. ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறுமுறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது. நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. தலைமை யாரிடம் உள்ளது என்ற வார்த்தையை பேசியுள்ளார். அ.தி.மு.க.வின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவருக்கு தெரியவில்லை. இதை விட பெரிய கூட்டத்துடன் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி பிரஜாராஜியம் என்ற கட்சியை தொடங்கினார். பிரமாண்டமான கூட்டத்தை காண்பித்தார். ஆனால் கட்சியை கலைத்து விட்டார். எடப்பாடி பழனிசாமி பற்றி பேச இவருக்கோ, வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
அ.தி.மு.க. ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும். மீண்டும் 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். இதை விஜய் மட்டுமல்ல. யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவர்கள் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்.
- 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் உட்பட ஏழு போர்களை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ஏழு போர்களில் நான்கு போர்களை, வரி விதிப்பு மற்றும் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
டிரம்ப் பேசுகையில், "நான் அவர்களிடம்வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம், மேலும் 100% வரி விதிப்போம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனைவரும் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்" என்று கூறினார்.
மேலும், "நான் இந்த எல்லாப் போர்களையும் நிறுத்தியுள்ளேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்க வேண்டியது!
அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும். இரு நாடுகளும் 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின. 24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று நான் எச்சரித்ததால்தான் போர் நின்றது" என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் எந்த நாட்டு ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-10 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை பிற்பகல் 2.21 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : அஸ்தம் (முழுவதும்)
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருத்தேரில் வீதி உலா, திருத்தணி, வடபழனி உள்ளிட்ட முருகர் கோவில்களில் அபிஷேகம்
இன்று சாமவேத உபாகர்மா. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம். கருங்குருவிக்கு உபதேசம் செய்தருளிய காட்சி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் மாலை திருத்தேரில் திருவீதி உலா. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் ரதோற்சவம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-விவேகம்
சிம்மம்-சிரத்தை
கன்னி-ஆர்வம்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-கவனம்
தனுசு- ஊக்கம்
மகரம்-கடமை
கும்பம்-ஓய்வு
மீனம்-பரிவு
- இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும்.
- இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
சித்தார்த் 40-வது திரைப்படமாக வெளியான 3 BHK மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பம் பற்றிய கதையாகும். இப்படத்தை பார்த்து பல்வேறு பிரபலங்கள் பாராட்டினார். குறிப்பாக நடிகர் சிம்பு, இயக்குநர் ராம், ரவி மோகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர்.
இந்நிலையில், 3 BHK படம் பார்த்து ரசித்ததை Reddit மூலம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் பகிர்ந்துள்ளார்.
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், "நன்றி சச்சின் சார்... நீங்கள் தான் என் சிறுவயது ஹீரோ. இந்த வாழ்த்து, எங்க படத்துக்கு பெரிய அங்கீகாரம்!" என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
- ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
- அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என நம்புகிறோம்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. ஏற்கனவே விதித்த 25 வரியுடன் சேர்ந்து தற்போது வரிச்சுமை 50 சதவீதம் ஆகி உள்ளது. இந்த கூடுதல் வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் இதன் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று, மும்பையில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில் பேசிய அவர், "இந்த வரிவிதிப்பால், ரத்தினக் கற்கள், நகைகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் இறால் ஏற்றுமதி போன்ற துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
ஏற்கெனவே, பொருளாதாரம் புழங்குவதற்கு வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் குறைத்துள்ளோம்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என்றும் இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படாது நாங்கள் நம்புகிறோம்.
ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 695 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது சுமார் 11 மாத இறக்குமதிக்கு போதுமானது.
இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.
ரிஷபம்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மிதுனம்
பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
கடகம்
புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானத்தடை அகலும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
தனவரவு திருப்தி தரும் நாள். மனதில். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்வர்.
துலாம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
விருச்சிகம்
தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர்.
தனுசு
சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
மகரம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.
கும்பம்
பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவு காத்திருக்கும்.
மீனம்
புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணி தொடரும் ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும்.
- மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
குறிப்பாக தமிழில் 14 மில்லியன் மற்றும் தெலுங்கில் 3 மில்லியன் பார்வைகளை மதராஸி டிரெய்லர் கடந்துள்ளது.
- இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழங்கால உயிரினத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது டைனோசர்களை விட பழமையான 'பைட்டோசர்' என்ற ஊர்வனவற்றிற்கு சொந்தமானது.
ஃபதேகர் பகுதியில் உள்ள மேகா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே கிராமவாசிகளால் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 21 அன்று அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியை ஆய்வு செய்து, அது ஜுராசிக் காலத்தின் புதைபடிவம் என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர், ஜோத்பூரில் உள்ள ஜேஎன்வியூ பூமி அறிவியல் நிறுவனத்தின் டீன் டாக்டர் வி.எஸ். பரிஹார் தலைமையிலான குழு இது குறித்த ஆய்வைத் தொடங்கியது.
இது கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூடு என்பதால் இந்த கண்டுபிடிப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் ஜுராசிக் காலத்தின் பாறைகளில் இந்த இனத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.

புதைபடிவத்தைப் பற்றிப் பேசிய டாக்டர் பரிஹார், "இது பைட்டோசார் குடும்பத்தைச் சேர்ந்தது. முதலை போன்ற இந்த ஊர்வன டைனோசர்களுக்கு முன்பு, பிந்தைய ட்ரயாசிக் மற்றும் ஆரம்பகால ஜுராசிக் காலங்களில் வாழ்ந்தன. அவை சுமார் 1.5 முதல் 2 மீட்டர் நீளம் கொண்டவை" என்று கூறினார்.
இந்த உயிரினத்தின் முதுகெலும்பு ஆய்வு செய்யப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.
இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் தற்போது வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஜெய்சால்மர் பகுதி பண்டைய உயிரினங்களின் புதைபடிவங்களுக்கு பிரபலமானது. கடந்த காலத்தில், டைனோசர் கால்தடங்கள் தையாட் அருகே காணப்பட்டன. மேலும் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான மர புதைபடிவங்கள் அகல் கிராமத்தில் காணப்பட்டன.
- அருண் என்பவருக்கும் மகா லெட்சுமி என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
- அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் மகா லட்சுமி (25) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் அருண் ஜெர்மனியில் வேலை செய்து வரும் நிலையில், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகா லட்சுமி உயிரை மாய்த்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மகா லட்சுமியின் தந்தை மதுரையில் தலைமைக் காவலராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
- அண்ணாமலை, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.
அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
- அதிபர் ட்ரம்ப், "இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை" என்று தெரிவித்தார்.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திர்கையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது.
மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சம்பவத்தை படம்பிடித்து கொண்டிருந்த பத்திர்கையாளர்கள் பலியாகினர்.
அசோசியேட்டட் பிரஸ், ராய்ட்டர்ஸ், அல் ஜஸீரா உள்ளிட்ட பத்திரிகைகளை சேர்நத 5 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் சூழலில் இது தவுறுத்தலாக நடந்த ஒரு "துயரமான விபத்து" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து உள் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையில் ஊடகத்தினரிடம் பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை. அதேநேரம் இந்த மொத்த கேட்ட கனவையும் நிறுத்த வேண்டும்" என்று பதில் சொன்னார்.






