என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • துருக்கியில் அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ளது.
    • சாலை விதிகளை மதிக்காத போக்குவரத்து மந்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல் காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஓட்டிக்கொண்டு சென்றார்.

    அப்போது அவர் கார் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டபடியும், நாட்டின் அதிபர் எரோடகனின் பிரசாரத்தைக் கேட்டபடி சென்றார். மேலும், காரை மணிக்கு 180 முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் இயக்கினார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில், நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரியே சாலை விதிகளை மதிக்காமல் காரை இயக்கியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

    அங்கு அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ள நிலையில் அவர் அந்த வீடியோவை உடனடியாக நீக்கினார். தொடர்ந்து அப்துல் காதீருக்கு ரூ.20 ஆயிரம் (9 ஆயிரம் லிராக்கள்) அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ரோகித் சர்மா, விராட் கோலி 2 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

    சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (669 புள்ளி 11வது இடத்திலும், மிட்சல் மார்ஷ் 44வது இடத்திலும் உள்ளார்.

    அதிரடியாக சதமடித்த கேமரூன் கிரீன் கிடுகிடுவென 40 இடங்கள் முன்னேறி 78வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 650 புள்ளியுடன் 3வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 616 புள்ளியுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் நீடிக்கிறார். இலங்கையின் மகேஷ் தீக்ஷனாவும் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது.
    • இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

    பாட்னா:

    மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2017-ல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, நாம் 5 முதல் 10 ஆண்டுகள் ஆள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அடுத்த 40-50 ஆண்டுகளில் அதிகாரத்தின் மூலம் நாட்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் 50 ஆண்டு கால ஆட்சி ரகசியம் இப்போது வெளியே வந்துள்ளது. அது வாக்குத் திருட்டின் மூலமே நடப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    அமித்ஷாவின் கூற்றை மையமாக வைத்தே மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தற்போது பா.ஜ.க. மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக, பீகாரில் நடந்த 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் ராகுல் காந்தி பேசியதாவது:

    மத்திய பா.ஜ.க. அரசு 40 முதல் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமித்ஷா பலமுறை கூறியுள்ளார். எப்படி அவரால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று நான் யோசித்தேன்.

    அந்த விசித்திரமான கருத்தின் உண்மை இப்போது வெளியே வந்துள்ளது. அவர்கள் 'வாக்குத் திருட்டில்' ஈடுபடுகிறார்கள். குஜராத் தொடங்கி 2014-ல் தேசிய அளவிலும், பின்னர் மற்ற மாநிலங்களிலும் பரவியது. நான் பொய் சொல்வதில்லை; உண்மைகளும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்தார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலியாவில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இதனால் ஈரான் உடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டு, இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    இதுகுறித்து ஈரான் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் ஈரானிய புரட்சிகர காவல்படை அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியது உறுதியானது. இந்த அமைப்பை ஆஸ்திரேலியா ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இஸ்ரேல்-காசா போருக்கு பிறகு இந்த தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி இருப்பது தெரிய வந்தது.

    இதனால் ஈரானுடனான உறவை துண்டிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. எனவே நாட்டில் உள்ள ஈரான் தூதர் உடனடியாக வெளியேறுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.

    அதேபோல், ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு நாட்டின் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

    இதனையடுத்து இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே ஈரானில் உள்ள ஆஸ்திரேலியர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஈரான் பயணத்தை தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

    • குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
    • இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

    இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்திய விண்வெளி துறையில் இன்று முக்கியமான நாள். 33 கட்டுமானங்களுக்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இதற்கான இடத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்தார்.

    • சிலைக்கு அணிந்திருந்த சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப்பட்டிருந்தது.
    • முதல்வர் என்ற பெயர்ப் பலகையை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    சாலைகளிலும், தெருக்களிலும் வித்தியாசமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

    தவெக தலைவர் விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்று விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    ஆனால் இந்த விநாயகர் சிலைக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, முதல்வர் என்ற பெயர்ப் பலகையை நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
    • 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

    இதற்கிடையே, மதராஸி படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், 'மதராஸி' படத்தின் முழு ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

    • அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.
    • அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் ஆகியோரின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Zion Films & MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார். 

    இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பான போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு இடம் பெறவில்லை.
    • அடுத்த மாதம் 27ஆம் தேதி போட்டி தொடங்குகிறது.

    இந்தியாவில் முதன்முறையாக டெல்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக 73 பேர் கொண்ட வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    டோக்கியோ, பாரீஸ் ஒலிம்பிக்கில் முறையே வெண்கலம், வெள்ளி பதக்கம் வென்ற மற்றொரு உயரம் தாண்டுதல் வீரர் ஷரத் குமாரும் இடம் பெறவில்லை.

    டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

    மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார் ஆகியோர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தங்கவேலு அவருடைய டெக்னிக்கை மாற்றம் செய்துள்ளார். அதை பயன்படுத்த கொஞ்ச காலம் தேவை. எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம்.
    • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கான், பல்வேறு குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிறையில் உள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவரான இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், கடும் பதவி வெறி பிடித்தவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக இம்ரான் கான் கூறியதாவது:-

    ராணுவ தளபதி அசிம் முனீர் அதிகார வெறி பிடித்தவர். பாகிஸ்தானில் மிகவும் மோசமான வகையிலான சர்வாதிகாரத்தை அமல்படுத்தியுள்ளார். அவர் ஒழுக்கும் அல்லது இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லை.

    நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதை விட, 2023 மே 9ஆம் தேதி வன்முறைக்காக அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மே 9 வன்முறை அவரால் கட்டமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் திருடப்பட்டன.

    பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.

    நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மூன்று மாதங்களில் மூன்று முறை மட்டுமே ஆலோசனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஒரு மாதங்களாக வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

    கடந்த 8 மாதங்களான என்னுடைய மனைவி புஷாரா பேகமும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு, உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பயன்படுத்த அசுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. எல்லா வகையான கொடுமைகளும் அவள் மீது திணிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அசிம் முனீரால் செய்யப்படுகின்றன.

    இவை அனைத்தும் என்னை விட்டு விலகிச் செல்வதற்காக செய்யப்படுகிறது. ஆனால், அவர் எனது பக்க நியாயத்தை புரிந்து கொண்டுள்ளார். எனக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், எனது குடும்பத்தினரை சிறையில் அடைத்தாலும் பெரிய விசயமில்லை. நான் ஒருபோதும் அடிய பணியமாட்டேன். உங்களுடைய அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதுதான் அசிம் முனீருக்கான என்னுடைய செய்தி. என்ன விலை கொடுத்தாவது உண்மையான சுதந்திரத்திற்காக என்னுடைய போராட்டத்தை நான் தொடர்வேன்.

    நீதித்துறை அழிக்கப்பட்டுள்ளது, ஊடகங்கள் மவுனமாக்கப்பட்டுள்ளன, காவல்துறை அவர்களை குற்றவாளிகளாக மாற்றும் வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு இம்ரான் கான் தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    • லவ் மேரேஜ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • லவ் மேரேஜ் திரைப்படம் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித் வெளியான திரைப்படம் 'லவ் மேரேஜ்'. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார்.

    மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் திரைப்படம் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனால் திரைப்படம் இந்தியாவிலும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், லவ் மேரேஜ் திரைப்படம் வரும் 29ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×