என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.
    • ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி.

    'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' முதல் கட்ட எழுச்சிப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கினார்.

    இந்த எழுச்சிப்பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான இன்று திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார்.

    முதலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் உரைரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது, அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. அதிமுக அரசு வந்தவுடன் முழு விசாரணை நடத்தி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். 3 மாதத்துக்கு முன்பாக புதிய டிஜிபிக்கள் பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த பட்டியலில் இருந்து மூன்று பேரை பரிந்துரைப்பார்கள். அந்த மூவரில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்வுசெய்து டிஜிபியாக அறிவிக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்த பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் குறித்த காலத்தில் டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்துகொள்ளவில்லை. இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

    பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ஒரு டிஜிபி, தீயணைப்புத் துறைக்கு ஒரு டிஜிபி என 8 டிஜிபிக்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. அப்படி பொறுப்புமிக்க 8 டிஜிபிக்கள் விழாவில் பங்கேற்கவில்லை என்றால் இந்த அரசு எப்படி நடக்கும்? காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல்துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது. தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.

    ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி. அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, லட்சக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

    திமுக அரசும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது, அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை கொடுக்கவில்லை. தொழிற்துறை அமைச்சர் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்கிறார், பிறகு ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்கவில்லை..?

    எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாக நினைக்கிறார் என்று அமைச்சர் ராஜா பேசுகிறார். ஆம் நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாகத்தான் நினைக்கிறேன்.

    ஏனென்றால் நானெல்லாம் ஒரு விவசாயி. உங்கள் அப்பா மத்திய அமைச்சர் என்பதால் நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் தலைவரின் அப்பா முதல்வராக இருந்தவர். அதனால் நீங்கள் எல்லாம் தங்க ஸ்பூனிலும், வெள்ளித் தட்டிலும் சாப்பிடலாம். நான் மக்களோடு மக்களாக இருந்து வந்தவன், எனக்கு கையில் எடுத்து சாப்பிடத்தான் தெரியும்.

    எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாம் எல்லோரும் ஸ்பூனிலா சாப்பிடுகிறோம்? கையில் சாப்பிடுவதற்கே சாப்பாடு கிடைக்காமல் மக்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள், அதற்காகத்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மக்களுடைய பிரச்னை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.

    மக்கள் வேலைக்காக, உணவுக்காகப் ராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அம்மா உணவகத்தை கூட மூடப்பார்க்கிறார்கள். முழுமையாக பொருட்கள் கொடுப்பதில்லை, ஊழியர் எண்ணிக்கை குறைத்தனர். இவர்களா ஏழை மக்களைக் காப்பாற்றுவார்கள்?

    2011க்கு முன்பு திமுக ஆட்சியையும், 2011க்கு பின் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று போதை பொருள் விற்காத இடமே இல்லை. போதை பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது.

    மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின் இப்படி பேசுவதான் மூலம் என்ன பயன்? ஆனால், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    இப்போது எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக டாஸ்மாக் பணியாளரே சொல்கிறார், அந்த மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியே வசூலிக்கிறார்கள். அப்போதும் மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.

    விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.

    ஆனால், முதல்வருக்கு அவரது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தனை. அவர் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. 51 மாத காலத்தில் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா, புயல், வறட்சி ஆகியவற்றிலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டது அதிமுக அரசு. எம்ஜிஆர், அம்மா ஏழைகளை நேசித்தார்கள், எப்போதெல்லாம் துன்பம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து விடுபடும் அளவுக்கு ஆட்சி செய்தார்கள்.

    எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தினமும் கொலை நிலவரம்தான் செய்திகளில் வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா?

    நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?

    கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் அதிமுக ஆட்சியில்தான் நன்மைகள் கிடைக்கப்பெற்றது.

    ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில், 24 மணிநேரம் அரசு மருத்துவமனை, பள்ளிகள் தரம் உயர்த்துதல், முல்லைப் பெரியாறு திட்டம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, பொறியியல் கல்லூரி, மருத்துவ ஆராய்ச்சி நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என்று நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கிறோம்.

    திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப் கார் வசதி செய்வதாக திமுகவினர் சொன்னார்கள். அதை செய்யவில்லை, கிரிவலப்பாதை மேம்படுத்தப்படும் என்றார்கள், செய்யவில்லை. அவனியாபுரம் பைபாஸ் முதல் நெல்பேட்டை வரை உயர்மட்ட பைபாஸ் பாலம் கட்டப்படும் என்றார்கள், செய்யவில்லை. விரகனூர் ரவுண்டானா உயர்மட்ட பாலம் கட்டுவோம் என்று சொன்னார்கள், செய்யவில்லை. திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தி முடித்துக்கொடுக்கப்படும்.

    இந்த பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி அதிகம் நடக்கிறது. சில காலகட்டத்தில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த விலை வீழ்ச்சியை சரிக்கட்ட உங்கள் ஆதரவுடன் அடுத்தாண்டு அதிமுக அரசு அமைந்ததும், இப்பகுதியில் மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.

    இவ்வாறு கூறினார்.

    • 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது.
    • 16 வருடத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு டெல்லியில் நடத்தப்பட இருக்கிறது.

    பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    2025 சாம்பியன்ஷிப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

    16 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது. 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

    • சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதி.
    • சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது, சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேற் சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும், சசிகாந்த் தொடர்ந்து உண்ணவிரதத்தை கடைப்பிடித்த வருகிறார். இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் சசிகாந்தை, திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    சசிகாந்தை சந்தித்த பின் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளரகளுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அவரை சந்தித்து இதனை தெரியப்படுத்தினேன். நமது உரிமைகளை பெறுவதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன.

    உடல் நலனை வருத்திக் கொள்ள வேண்டாம். திமுகவும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து போராடி கல்வி நிதியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம்.
    • வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு 11 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 30ம் தேதி சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னையில் இந்தாண்டு புயல் ஆபத்தும் இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை இந்தாண்டு காலக்கட்டத்தில், குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் வலி மண்டலம் மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளை பார்க்கும்போது, நமக்கு லா நினோ உருவாக வாய்ப்புள்ளது.

    இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) பொறுத்தவரையில் எதிர்மறை ஐஓடி நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் லா நினா ஆண்டுகளாக அமைந்திருக்கிறது. 2023ம் ஆண்டில் மட்டும் எல் லினோ ஆண்டுகளாகவும் அமைந்துள்ளது.

    இந்த லா நினா மற்றும் அதன் காரணிகளை பார்க்குமபோது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை சற்று தாமதமடைந்தாலும், பருவமழை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மழை பொழிவு இருக்கும். தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மழை பொழிவு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லா நினா:

    பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள தண்ணீர் சில பகுதிகளில் சூடாகவும், சில பகுதிகளில் குளிர்ச்சியாகவும் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள வானிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

    இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்களே எல் நினோ மற்றும் லா நினா வானிலை நிகழ்வுகள் ஆகும்.

    எல் நினோ:

    எல் நினோ பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடலின் வெப்பநிலையை வழக்கத்தை விட சூடாக்குகிறது, குறைந்தது 0.5 டிகிரி அதிகரித்தால் எல் நினோ உருவாகியதாக அறிவிக்கப்படும்.

    • வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும்.
    • AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.

    இந்நிலையில் கலவையான விமர்சனங்களை கொண்டுள்ள இந்த படத்தில் AI உதவியுடன் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    AI உதவியுடன் கூலி திரைப்படத்தில் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது. வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

    என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

    • 2024-ல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
    • அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷியா அதிபர் புதினை சந்தித்தார். இது இந்தியா- ரஷியா இடையிலான உறவில் மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது என கருதப்படுகிறது. அதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தன்னுடைய 50 சதவீத வரி விதிப்பை நியாயம் படுத்தும் வகையில் இந்தியா உடனான உறவு ஒருதலைப்பட்ச பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "2024-ல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதிகப்படியான இறக்குமதி வரிக்காக ரஷியாவிடம் இருந்து கச்சான் எண்ணெய், ராணுவ உபகரணங்களை தொடர்ந்து கொள்முதல் செய்கிறது. இந்தியா உடனான உறவுகள் ஒருதலைப்பட்ச பேரழிவு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.
    • தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்.

    நெல்லையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வேறு, 2026 சட்டமன்ற தேர்தல் வேறு. 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.

    2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுக யார் என்பதை உறுதியாக நிரூபிப்போம். கருத்துக்கணிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும்.

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள், எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறது என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும். அந்த சமயத்தில், அமமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பதும் தெரியவரும்.

    தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவு.

    இவ்வாறு கூறினார்.

    • வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது.
    • பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள்.

    பீகார் மாநிலத்தில் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

    பீகார் மக்களின் வாக்கு அதிகாரம் என்ற பெயரில் மக்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதற்கான ராகுல் காந்தி கடந்த இரண்டு வாரமாக பேரணி மேற்கொண்டு வருகிறார்.

    இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.

    வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. இது தற்போது சீனாவிலும் எதிரொலிக்கிறது (தற்போது பிரதமர் மோடி சீனாவில் உள்ளதால், கிண்டலடிக்கும் வகையில்). நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "ராகுல் காந்தியின் பேச்சை நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கேட்கும் போதெல்லாம், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும்.

    இன்று அவர், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு எனப் பேசுகிறார். அணுகுண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு?. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தன்னை ஏன் இழிவுபடுத்திக் கொள்கிறார். ராகுல் காந்தி பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

    பாராளுமன்ற தேர்தில் பலவேறு தொகுதியில் வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிடப்போவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.

    • ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
    • ஷாங்காய் அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும்.

    மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, நாகரிகங்களின் பன்முகத் தன்மைக்கு மரியாதை மற்றும் பொதுவான வளர்ச்சியைப் பின் தொடர்தல் போன்றவற்றுக்காக இது தொடங்கப்பட்டது.

    நாங்கள் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை சீராக ஊக்குவித்தோம். வேறுபாடுகளை முறையாக நிர்வகித்து தீர்த்துக் கொண்டோம். வெளிப்புற தலையீட்டை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்த்தோம். நாங்கள் எப்போதும் சர்வதேச நியாயம் மற்றும் நீதியின் பக்கம் நிற்கிறோம்.

    மேலாதிக்கத்தையும் அதிகார அரசியலையும் எதிர்க்கிறோம். சவால்கள் மற்றும் மாற்றங்கள் நிறைந்த உலகில் ஷாங்காய் உணர்வை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். நமது அமைப்பின் திறனை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவான நிலையைத் தேட வேண்டும்.

    ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்திய பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும். ஷாங்காய் அமைப்பை மேலும் வலுப்படுத்துவோம்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடனான சீனாவின் ஒட்டுமொத்த வர்த்தகம் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு, உறுப்பு பொருளாதாரங்கள் ஒருங்கிணைந்த 30 டிரில்லி யன் அமெரிக்க டாலர்களை நெருங்கி வருகிறது. உறுப்பு நாடுகளில் சீனாவின் முதலீடுகள் ஏற்கனவே 84 பில்லியன் அமெரிக்க டா லர்களைத் தாண்டிவிட்டன.

    பிராந்திய சவால்களை எதிர்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்பாட்டு வங்கி மற்றும் ஒரு புதிய பாதுகாப்பு மையத்தை கூடிய விரைவில் உருவாக்க அழைப்பு விடுக்கிறேன்.

    உலக ஒழுங்கில் கொடு மைப்படுத்தும் நடத்தையை நாம் எதிர்க்க வேண்டும். நியாயம் மற்றும் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, மோதல் மற்றும் கொடு மைப்படுத்தும் நடத்தையை தலைவர்கள் எதிர்க்க வேண்டும்.

    உறுப்பு நாடுகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த 100 சிறிய அளவிலான திட்டங்களின் ஒத்துழைப் பில் சீனாவின் பங்களிப்பை உறுதி செய்கிறேன். அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களும் நண்பர் கள் மற்றும் கூட்டாளிகள் ஆவார்கள். நமது ஒற்று மையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • பைசன் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

    இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் படத்தின் தீக்கொளுத்தி பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வரிகளை மாரிசெல்வராஜ் எழுதியுள்ளார். இந்த பாடலை நிவாஷ் பிரசன்னா பாடியுள்ளார்.

    • 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • 5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ஒப்பந்தம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3,201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.8.2025 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    ஜெர்மனி நாட்டின் டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை

    வட ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாகாணத்தின் முதலமைச்சர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பாக, அவருடைய அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்புப் பிரிவின் அன்யா டி வூஸ்ட், இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே உள்ளிட்ட அலுவலர்கள் அன்புடன் வரவேற்றனர். மேலும், ஜெர்மனி வாழ் தமிழர்களும் முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.8.2025 அன்று ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் (1.9.2025) டசெல்டோர்ஃப் நகரில் Knorr Bremse. Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    Knorr Bremse நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்ட நார்– பிரெம்ஸ் (Knorr Bremse) நிறுவனம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே கூறுகள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும்.

    இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Knorr Bremse நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா (Mr. Marc Llistosella), துணைத் தலைவர் திரு. ஓலிவர் கிளக் ஆகியோர் கையெழுதிட்டனர்.

    Nordex குழும நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரைக் தலைமையகமாக கொண்ட Nordex குழும நிறுவனம், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் தமிழ்நாட்டின் தலைமையை வலுப்படுத்துகிறது.

    இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், Nordex குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் திரு. லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர். இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும்.

    ebm-papst நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    ஜெர்மனி நாட்டின் மல்ஃபிங்கன் (Mulfingen) நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள ebm-papst நிறுவனம், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இது அதன் புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட காற்று இயக்க தீர்வுகளுக்கு உலகளவில் பெயர் பெற்றது.

    இந்நிறுவனம் மின்னணு ரீதியாக மாற்றப்பட்ட (Electronically Commutated) மோட்டார் தொழில்நுட்பத்தை முன்னோடியாகக் கொண்டு HVAC, ஆட்டோமோட்டிவ், குளிர்பதனம் மற்றும் தொழில்துறை பொறியியல் போன்ற தொழில்களுக்கு சேவை ஆற்றுகிறது.

    இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த

    5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ebm-papst நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அதுல் திரிபாதி அவர்கள் கையெழுதிட்டார்.

    BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் சந்திப்பு

    ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள BMW குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமொடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகனப் பிரிவில் அந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், BMW குழும நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், BMW இந்திய நிறுவனத்திற்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் திரு. வினோத் பாண்டே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

    இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து கட்டா குஸ்தி பகாம் 2 எடுக்கவுள்ளனர்.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

    இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து கட்டா குஸ்தி பகாம் 2 எடுக்கவுள்ளனர். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் நகைச்சுவையான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் கதாநாயகியாக ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் இசையை ஷான் ரோல்டன் மேற் கொள்கிறார்.


    ×