என் மலர்
இந்தியா

வாக்கு திருட்டை அம்பலப்படுத்த வருகிறது ஹைட்ரஜன் குண்டு: எச்சரித்த ராகுல் காந்தி- பதில் அளித்த பாஜக..!
- வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது.
- பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள்.
பீகார் மாநிலத்தில் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மக்களின் வாக்கு அதிகாரம் என்ற பெயரில் மக்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதற்கான ராகுல் காந்தி கடந்த இரண்டு வாரமாக பேரணி மேற்கொண்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.
வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. இது தற்போது சீனாவிலும் எதிரொலிக்கிறது (தற்போது பிரதமர் மோடி சீனாவில் உள்ளதால், கிண்டலடிக்கும் வகையில்). நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "ராகுல் காந்தியின் பேச்சை நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கேட்கும் போதெல்லாம், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும்.
இன்று அவர், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு எனப் பேசுகிறார். அணுகுண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு?. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தன்னை ஏன் இழிவுபடுத்திக் கொள்கிறார். ராகுல் காந்தி பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
பாராளுமன்ற தேர்தில் பலவேறு தொகுதியில் வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிடப்போவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.






