என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
- ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். விரைவாக செல்லவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்லவும் ரோப் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ரோப்கார் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் திடீரென மின்னணு பழுது ஏற்பட்டதால் ரோப் கார் இன்று காலை இயக்கப்படவில்லை. இதனால் ரோப் கார் ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்தும் ரோப்கார் இயக்க முடியாததால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் மூலமாக மலைக்கோவில் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி திடீரென ரோப்கார் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
- அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
- பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான்.
* இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.
* முயன்றால் மீண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.
* அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
* இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும்.
* பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
* மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடும் வளரும் என்பதை மத்திய அரசிற்கு உணர்த்துவோம்.
* இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்திய மக்களின் வாழ்வியலுக்கும் வளர்ச்சிக்குமான கோரிக்கை என்று கூறினார்.
இதையடுத்து மத்திய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலைக் குழு அறிக்கையை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
- அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
- மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது தி.மு.க.
* அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது தமிழ்நாடு.
* நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் உள்ளது.
* அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
* அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும்.
* மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.
* மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
* அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து, வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான
சி.பி.ஐ.எம். தமிழ்நாடு மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று, மு.க.ஸ்டாலினின் அரசு அனைத்து விதமான "கோரிக்கைக் குரல்களை" ஒடுக்க நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து, அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- திமுகவில் 4 இடங்களும், அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மேல்சபை எம்.பி.க்களின் (மாநிலங்களவை) பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும். 10 மாநிலங்களில் உள்ள 37 உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைகிறது.
இந்தநிலையில் காலியாகும் 37 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, மராட்டியம், மேற்குவங்காளம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி நடை பெறுகிறது.
தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் இடம் காலியாகுகிறது.
தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, பி.செல்வ ராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரது பதவி காலமும், அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.தம்பிதுரை, மற்றும் அ.தி.மு.க. சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது. இந்த 6 மேல்சபை எம்.பி. இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. மார்ச் 5-ந்தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 6-ந்தேதி நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். மார்ச் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் 20-ந்தேதி முடிவடையும்.
மாராட்டியம் மாநிலத்தில் 7 மேல்சபை எம்.பி.க்கள், ஒடிசாவில் 4 உறுப்பினர்கள், மேற்கு வங்காளத்தில் 5 எம்.பி.க்கள் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது.
அசாம் (3), பீகார் (5), சத்தீஸ்கர் (2), அரியானா (2), இமாச்சலபிரதேசம் (1), தெலுங்கானா (2) ஆகிய மாநிலங்களில் உள்ள மேல்சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் 9-ந்தேதி முடிவடைகிறது.
இந்த 9 மாநிலங்களில் காலியாகும் 31 மேல்சபை எம்.பி.க்களின் தேர்தலும் மார்ச் 16-ந்தேதி நடக்கிறது.
- தி.மு.க., அ.தி.மு.க.விடம் பா.ம.க. தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
- தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டாலும், மேலும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
ராமதாஸ் தரப்பு பா.ம.க., தே.மு.தி.க. இரண்டு கட்சிகளும் இன்னமும் தங்களுடைய கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருக்கின்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இருவருக்கும் இடையில் சில மாதங்களாகவே மோதல் இருந்து வருகிறது. மோதலையடுத்து கட்சியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கினார். ஆனாலும் பா.ம.க. தலைவர் நான்தான். என்னை கட்சியை விட்டு நீக்க முடியாது அன்புமணி என்று கூறி வந்தார்.
இதனையடுத்து தனது ஆதரவாளவர்களுடன் அ.தி.மு.க. தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். அதே நேரம் ராமதாஸ் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.
தி.மு.க., அ.தி.மு.க.விடம் அவரது தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
பா.ம.க. ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இன்னமும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், தற்போது அவரது தரப்பு எம்.எல்.ஏ. அருள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாசின் பா.ம.க. தரப்பை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தன்னை சந்தித்த போதும் கூட்டணி குறித்து பேச இ.பி.எஸ். மறுப்பு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அன்புமணி தரப்பு ஏற்கனவே கூட்டணியில் இணைந்து விட்டதாலும், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைத்தால் அன்புமணி தரப்பை சமாதானப்படுத்த வேண்டிய நிலை வரும். அன்புமணி தரப்பு ஒருவேளை சமாதானமடைந்தாலும், தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படும் என்று இ.பி.எஸ். தரப்பு மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- திவாகர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
- பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார்.
திவாகர் என்பவர் இணையத்தில் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு பிரபலமானார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்து காட்டி தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்டு தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்தார்.
தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதாகவும் தான் மிகப்பெரிய ஹீரோ மெட்டீரியல் என்று அவர் நினைத்துக்கொண்டு அவர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் சாதி ரீதியாக பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், அரசு பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக திவாகர் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசுப்பள்ளியில் மாணவர்களிடையே செல்பி வீடியோ எடுத்த திவாகர் நடிப்பு அரக்கன் என்று கத்த மாணவர்களும் நடிப்பு அரக்கன் என்று கூச்சலிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இன்ஸ்டா பிரபலங்களை பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
- அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி அணைக்கட்டு தாலுகா அகரம்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் நேற்று த.வெ.க. நிர்வாகிகளிடம் வழங்கினார்.
அதனை பூர்த்தி செய்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கும்படி கூறினார்.
இந்த கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, மருத்துவம், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வேலூருக்கு வருகை தருகிறார்.
அவரை வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், பாதிப்பும் இன்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன்.
- பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான்.
ஆலந்தூர்:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு கோவையில் இருந்து, சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்ஜெட்டில் முத்தான 30 அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். பட்ஜெட்டை முழுமையாக படித்து விட்டு, பதில் சொல்கிறேன். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் எல்லா அறிவிப்புகளையும், அமல்படுத்த முடியுமா? தேர்தல் முடிந்து புதிய அரசு அமைத்த பின் அமல்படுத்த முடியுமா? என்ற கேள்விகள் உள்ளன. தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கின்ற, ஒரு பட்ஜெட்டை செயல்படுத்தும், அரசாக இருக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.
வருகின்ற ஆட்சி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் எஜமானார்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும், பார்க்கலாம். உண்மையிலேயே அதுபோன்ற ஒரு சூழல் வருகிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஈசா மையத்தில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் முதல் வரிசையில் இருந்தோம். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, புதுச்சேரி மந்திரிகள் எல்லோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினேன்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான். அதனால் தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் வரவேற்போம். பிரதமர் வருவது தவறு இல்லை. அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் குறைந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வார தொடக்கம் முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520
15-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
14-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,480
13-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-02-2026- ஒரு கிராம் ரூ.265
16-02-2026- ஒரு கிராம் ரூ.265
15-02-2026- ஒரு கிராம் ரூ.280
14-02-2026- ஒரு கிராம் ரூ.280
13-02-2026- ஒரு கிராம் ரூ.280
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
- கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 32). இவருடைய மனைவி ராமு (28). இவரது வங்கிக்கணக்கில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம். கோடை கால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
இந்த பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராமு கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ராமு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






