என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.
கொடைக்கானல்:
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
- உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
மதுரை:
தி.மு.கவின் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. தலைவரும், அவரது தந்தையுமான மு.கருணாநிதியால் நீக்கப்பட்டார்.
இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஷ்பாட்சா, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, உதயகுமார், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 12 பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து மதுரை தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தி.மு.க. தலைமை கட்சியில் சேர்க்க தொடர்ந்து மவுனம் சாதித்தது.
இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதமும் அனுப்பினர். மேலும் தலைமை கழக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். ஆனாலும் இவர்களை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க முட்டுக்கட்டை நீடித்து வந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுத்தி வைத்தனர். எந்த கட்சிக்கும் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.
இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் அவர்களது ஆசை நிராசையாகவே இருந்து வந்தது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இனியும் பொறுமை காப்பது தங்களது அரசியல் வாழ்வுக்கு பாதகமாக அமைந்து விடும் என கருதிய அவர்கள் மு.க.அழகிரியிடம் இதுதொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது.
நானும் உங்களை தி.மு.க. தலைமை கட்சியில் சேர்த்து கொள்ளும் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. எனவே உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 17-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.
அப்போது பேசிய பி.எம்.மன்னன், மதுரையில் அதிருப்தியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தி தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரை அ.தி.மு.கவில் சேர்க்க கட்சி தலைமை புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
பி.எம்.மன்னனை தொடர்ந்து முன்னாள் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளருமான எஸ்.ஆர்.கோபி இன்று அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தெரியவந்து உள்ளது. அவருடன் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேருகிறார்கள்.
மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தி.மு.க. அதிருப்தி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆகியோரையும் திரட்டி அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மு.க.அழகிரி ஆதரவாளர்களில் சிலர் மட்டுமே அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களையும் தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க. தலைமை வலை விரித்துள்ளது.
ஆனால் அவர்களில் சிலர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி தி.மு.க. தலைமை மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து தி.மு.க. தலைமை விரைவில் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், அண்ணன் அழகிரி என்ன சொன்னாலும் நாங்கள் அவரது கண் அசைவுக்கு கட்டுப்படுவோம். அவர் யாரையும் மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. ஆனாலும் சிலர் தங்களது சுயதேவைகளுக்காக வேறு கட்சிகளில் சேருகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும்.
அண்ணன் அழகிரி மீது முழுமையான நம்பிக்கை கொண்ட எங்களை போன்றோர் எந்த நிலையிலும் வேறு கட்சிக்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்தார்.
மு.க.அழகிரி ஆதரவாளர்களின் இருவேறு நிலைபாடுகள் காரணமாக மதுரை அரசியல் களத்தில் விறுவிறுப்பான அரங்கேற்றங்கள் நடந்து வருகின்றன.
- 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது.
- 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக, திமுக-வை எதிர்த்து முதல்முறையாக களம் இறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் தான்.
அரசியல் எதிரி, கொள்கை எதிரி என தி.மு.க., பா.ஜ.க. வை எதிர்த்து விஜய் களமிறங்கியுள்ளார். இதனால் விஜய் அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே, மறைந்த விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற கேள்வியும் எழுந்து இருந்தது. இதனை சுற்றி பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று இதற்கு பதலளிக்கும் விதமாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கினார்.
2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் பின்னர் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எட்டி பிடித்தது.
2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலிலும் தோல்வியை தழுவியது.
கடந்த 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த தே.மு.தி.க. அப்போதும் வெற்றி பெறவில்லை. இப்படி தொடர் தோல்வியை சந்தித்து வந்த தே.மு.தி.க. வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தே.மு.தி.க. வெற்றி கூட்டணியில் இடம் பெறும் என்று பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடனும் தே.மு.தி.க. சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
தங்களது கூட்டணியில் தே.மு.தி.க.வை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன.
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தே.மு.தி.க. இன்று தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. 2006-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் தே.மு.தி.க. முதல் முறையாக தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துள்ளது.
இம்முடிவு தே.மு.தி.க.விற்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
- ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் பறக்கும் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரெயில் நிலையத்தில் லிப்ட் வசதி உள்ளது.
மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் இந்த லிப்டை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் இதை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ரெயில் நிலையத்துக்கு வந்த பெண் பயணிகள் லிப்டில் ஏறி சென்றனர். அப்போது லிப்டில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் லிப்ட் பாதி வழியிலேயே நின்றது. அதில் இருந்த 10 பெண் பயணிகளும் லிப்டில் சிக்கி தவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் லிப்டின் கதவை கழற்றி அதில் இருந்த 10 பெண்களையும் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அனைத்து பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.
- தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
- கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
சென்னை :
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! என்று கூறியுள்ளார்.
- திமுக-தேமுதிக கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது.
- 10 ஆண்டுகள் கழித்து திமுகவில் தேமுதிக கூட்டணி நடந்திருக்கிறது.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளதை பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதை இன்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
இந்த கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது. 10 ஆண்டுகள் கழிந்து அது நடந்திருக்கிறது.
திமுக-தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
- சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி குறித்து ஜனவரி மாதமே அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து இருந்த நிலையில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கிறது.
- படகில் செல்ல ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ராமேசுவரம்:
இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டது.
இந்த தீவில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்காக ராமேசுவரத்திலிருந்து 85 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப்படகுகளில் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். படகில் செல்ல ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் 25 வரை வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டது.
கச்சத்தீவில் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் அந்தோணியார் தேவாலய திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து திருஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.
மறுநாள் (பிப்.28-ந் தேதி) காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப்பிரார்த்தனையும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கச்சத்தீவில் நடைபெற்று வருகின்றன. தேவாலயத்தை சுத்தம் செய்தல், சாலை அமைத்தல், தற்காலிக கப்பல் இறங்குதளம், முள் செடிகளை அகற்றி பாதை அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகைளை ஏற்படுத்துதல், மின்சார வசதி உள்ளிட்ட பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்று ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு.
- ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
மதுரையில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தையொட்டி ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இதயதெய்வம் புரட்சித் தலைவி தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் பெண்ணினத்தை பாதுகாத்திடவும், ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் உயிர்மூச்சு உள்ளவரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் திடலில் நடைபெறவுள்ள புரட்சித்தலைவி அம்மாவின் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டமும் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.
தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் எந்நாளும் தொடர்ந்திட கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையோடு மக்கள் தொண்டாற்றிட புரட்சித் தலைவியின் பிறந்த நாளினை சிறப்புடன் கொண்டாடுவோம். புரட்சித் தலைவரின் கொள்கைகளை காப்பாற்றிடவும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எண்ணங்களை ஈடேற்றிடவும், எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுத்திடவும் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் உறுதியேற்போம். உரிமை கூட்டமாக ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்.
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.
- கடந்த ஓராண்டில் எத்தனையோ அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
- அமைச்சர் அளித்த வாக்குறுதியை நம்பி, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆட்டோ மற்றும் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் கட்டணத்தை பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில், உயர்த்த வேண்டும் என்ற வாடகை ஊர்தி ஓட்டுனர் சங்கங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், கடந்த ஆண்டு அளித்த கட்டண உயர்வு குறித்த வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி உயர்த்தப்பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 13-ஆம் ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதனால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை சென்னையில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய கட்டண விகிதம் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின் சரியாக ஓராண்டு நிறைவடைந்து இன்று முதல் இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் எத்தனையோ அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அமைச்சர் அளித்த வாக்குறுதியை நம்பி, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆட்டோ மற்றும் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி மட்டும் ஓராண்டாகியும் நிறைவேறவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.
கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் உயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.
செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட வாகன வாடகை, எரிபொருள் செலவு போக அவர்களுக்கு கிடைப்பது சில நூறு ரூபாய் மட்டும் தான். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று வேளையும் உணவு உண்ண முடியவில்லை. வாகனங்களுக்கான காப்பீடு, வரிகள், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியவில்லை. அதற்காக கடன் வாங்க வேண்டியிருப்பதால் லட்சக்கணக்கான ஓட்டுனர்கள் கடனாளியாகிவிட்டனர். மேலும் இயல்பை விட அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் ஓட்டுனர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின் கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அதன்படி அரசுப் போக்குவரத்துத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால் ஊர்திகளுக்கான வாடகையும் இதுவரை உயர்த்தப்படவில்லை.
வாடகை ஓட்டுனர்கள் பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதனால் அந்தக் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டாகியும் அந்தக் கோரிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுக்கிறது என்றால், தொழிலாளர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறது என்று தான் பொருள். அந்த கொடூர குணத்தைக் கைவிட்டு சாதாரண மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ- டாக்சி வாடகைக் கட்டணத்தை திமுக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி வருகிறது.
- வருங்காலத் தலைமுறையினர் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்.
வேலூர்:
விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், " ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெற்றது.
புதுடெல்லி ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் பி.ராஜேந்திர குமார் சிறப்பு விருந்தினராக காணொலி வாயிலாகப் பங்கேற்று, ஜிஎஸ்டி துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மாநாட்டிற்கு தலைமை வகித்து விஐடி பல்கலைக்கழக செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி பேசும்போது, "ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியானது, மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு, வேலூர் கோட்ட ஜிஎஸ்டி உதவி ஆணையர் டி.பி. சுரேஷ் பேசும்போது, "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி வருகிறது. வருங்காலத் தலைமுறையினர் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்" என்றார்.
மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள், 1000-க்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்கள், 50 பட்டய கணக்காளர் சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், விஐடி சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறை முதன்மையர் வி.செல்வம், இணை முதன்மையர் சரிகா குப்தா, வணிகவியல் துறை தலைவர் எஸ்.உஷா ஆகியோர் பங்கேற்றனர்.
- சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.
- 2 பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கேயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் இருந்து 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் ஈரோடு, பழனி, தாராபுரம், கோவை, பல்லடம், கரூர், திருச்சி, பெருந்துறை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளும் திருப்பூர், வெள்ளகோவில், முத்தூர் ஊதியூர், குண்டடம், கொடுவாய் ஆகிய பகுதிகளுக்கு நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.
நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய விடியல் பேருந்து திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக செல்வதற்கு பயண சீட்டுகள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து காங்கேயம் வந்த டி.என். 39 என் 0659 என்ற எண் கொண்ட பேருந்தில் காங்கேயம் ஹாஸ்டல் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பெண்கள் சிலர் ஏறி உள்ளனர். பின்னர் கண்டக்டரிடம் மெடிக்கல் ஸ்டாப்பில் இறங்க வேண்டுமென டிக்கெட் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்தப்பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 ஸ்டாப் தானே உள்ளது, ஏன் நடந்து செல்ல முடியாதா? என அந்த பெண்களிடம் பேசியதுடன் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது, நேராக பேருந்து நிலையத்திற்கு செல்கின்றோம். அங்கு பயணச்சீட்டு பரிசோதனையாளரிடம் உங்களை விட்டு விடுகிறோம் , நீங்கள் எல்லாம் அபராதம் ரூ.500 கட்டினால் மட்டும்தான் திருந்துவீர்கள் என கூறியதுடன்,நேராக பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
இதனால் கண்டக்டருக்கும், பெண் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதனிடையே இந்த சம்பவத்தை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக அரசு, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என அறிவித்துள்ள நிலையில், நகரப்பேருந்துகளில் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பெண்களிடம் இழிவாக பேசி அநாகரீகமாக நடந்து கொள்வது பெண்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே காங்கயத்தில் பெண் பயணிகளை இழிவாக பேசிய டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 2பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். மேலும் 2பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






