என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
- ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.
ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி , யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரெயில்வே அமைச்சகம் 'ரெயில் ஒன்' என்ற செயலியை அறிமுகம் செய்தது.
இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ரெயில்வே துறை மற்றும் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டும் இந்த செயலி மூலம் பெற முடியும்.
இந்நிலையில் ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் கூட்டத்தில் முண்டியடித்து செல்வதற்கு பதிலாக செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை ரெயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி வரை 3 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும், முழுமையடையாமலும், அது குறித்த தகவல் கிடைக்கப்பெறாததாலும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
- இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்
- பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பெருங்குடி குப்பைக் கிடங்கு, தற்போது பசுமை நிறைந்த Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
'பயோ-மைனிங்' தொழில்நுட்பம் மூலம் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு, அந்த நிலம் Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது
இந்த மாற்றத்தைப் பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பல தசாப்தங்களாகக் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்த பெருங்குடி கிடங்கு, சென்னை மாநகராட்சியின் தீவிர முயற்சியால் தற்போது மரங்கள் மற்றும் நடைபாதைகள் கொண்ட அழகிய பூங்காவாக உருமாறியுள்ளது.
இதைச் சாதித்துக் காட்டிய சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகள். இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா பதிவுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், நன்றி திரு. ஆனந்த் மஹிந்திரா.. சென்னை மாநகராட்சி, மொத்தம் 90 லட்சம் மெட்ரிக் டன் பழமையான குப்பைகளில் இருந்து, பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
மீதமுள்ள குப்பைகளை பிப்ரவரி 2027-க்குள் அகற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தற்போது, குப்பைகளை நிலத்தில் கொட்டுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதிலும், திறமையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி, அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைத் தீர்வுகளைச் செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது.
- தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. .
பீகாரில் நகைக்கடைகளில் பெண்கள் முகத்தை மூடி வர தடை விதிக்கப்பட்டது. அதே போல் உ.பி. வாரணாசியிலும் ஹிஜாப் அணிந்து வர நகைக்கடைகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை - தமிழ்நாட்டில் அல்ல!
'பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்' என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால், நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 3 நாட்கள் விடுமுறையும், சனி, ஞாயிறு விடுமுறைகளான 2 நாட்களையும் சேர்த்து, தற்போது பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் விடுமுறை அளிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்.
- இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தமிழ்நாடு இந்தி திணிப்பை எதிர்க்கும்.
- தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தார் அண்ணா.
சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தமிழ்நாடு இந்தி திணிப்பை எதிர்க்கும். ஒரு வரலாறை இங்கே சொல்ல விரும்புகிறேன். 1968ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனபோது ஒரு வேலையை செய்தார். அதைப் பற்றி சட்டசபையிலும் பேசி பதிய வைத்திருக்கிறார்.
சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்தார். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையே தவிர, தமிழ்நாட்டில் எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி கிடையாது என்றார்.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அதற்கு முன்பு வரை சென்னை பிரசிடென்ஸி என்று இருந்தது.
இதை மூன்றையும் செய்துவிட்டு அண்ணா சொன்னார், நான் ஆட்சியில் இருப்பதனால் இந்த மூன்று திட்டத்தையும் அமல்படுத்தினேன்.
பிற்காலங்களில், யாராவது இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் மனதில் பயம் வரும். அந்த பயம் இருக்கும் வரை இந்த தமிழ்நாட்டை ஆள்வது அண்ணாதுரைதான் என்றார்.
நம் அண்ணா வடிவில் இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு
பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட்
கோவை
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை
கிருஷ்ணகிரி
பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்
கரூர்
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு
தேனி
கம்பம், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன்கோவில், ஊத்துகாடு
தருமபுரி
பொம்மிடி, அஜம்பட்டி, வேப்பிலைப்பட்டி, வாசிகவுண்டனூர், தாளநத்தம், திப்பிரெடிஹள்ளி, வத்தல்மலை, பண்டாரசெட்டிப்பட்டி, சொரக்கப்பட்டி
அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
- சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
- தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தேதி நீட்டிப்பு.
விருப்ப மனுக்களைப் பெற மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் விருப்பமனுவை பெறுவதற்கான தேதியை 13.1.2026 செவ்வாய்கிழமை மற்றும் 14.1.2026 புதன்கிழமை ஆகிய இருநாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டியுள்ளார்.
சென்னையில் தியாகராய நகர் பகுதியில், தூய்மை பணியாளர் பத்மா என்பவர் நேற்று குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவர் சாலையில் தங்க நகைகள் கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க விரும்பிய பத்மா, பாண்டி பஜார் காவல்நிலையம் சென்று, அதனை காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
அதனை போலீசார் மதிப்பிட்டத்தில் 45 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்மதிப்பு ரூ.45 லட்சம். பின்னர் அந்த நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த செய்தி இணையத்தில் வெளிவர பலரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டியுள்ளார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கியுள்ளார்.
- திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெறுகிறது.
- திருச்சியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை மணப்பாறை வழியாக தொடர்கிறது.
ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் 'ஆதியோகி ரத யாத்திரை' தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி ஃபிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் அடியார்கள் மருத்துவர் ராஜ்பிரகாஷ், பாலசுப்ரமணியன் மற்றும் ராகுல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
ஆதியோகி ரத யாத்திரை
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
ஆதீனங்களின் அருளாசியோடு…
தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.
தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.

பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!
இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. இதில் குறிப்பாக திருச்சியை உள்ளடக்கிய கிழக்கு மண்டலப் பகுதிகளில் அதிக அளவில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில்…
ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெற உள்ளது. நாளை ஜன.13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் மற்றும் ஆத்மநாதசுவாமி ஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக ரதம் பயணிக்கிறது. அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு ஜன 13-ம் தேதி இரவு ஆதியோகி ரதம் வந்தடைய உள்ளது. பின்பு ஜன.17 முதல் 19 வரை திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ளது.
திருச்சி மாநகரை பொறுத்த வரையில் உக்கிரகாளியம்மன் கோவில், சாஸ்திரி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், டோல்கேட், உத்தமர் கோவில் வழியாக ரதம் பயணிக்க உள்ளது. பின்பு சமயபுரம், வயலூர், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் ரத யாத்திரை நடைபெற உள்ளது. திருச்சியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை மணப்பாறை வழியாக ஆதியோகி ரத யாத்திரை தொடர உள்ளது.
கிழக்கு மண்டலத்தில் இதுவரை...
கிழக்கு மண்டலத்தைப் பொறுத்த வரையில் ஆதியோகி ரதம் கடந்த 23-ஆம் தேதி மயிலாடுதுறை வந்தடைந்தது. அதன் பின்பு காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி ஆகிய நகரங்களை கடந்து வந்துள்ளது.
இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாயூரநாதர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், திருவாரூர் தியாகராஜர், கும்பகோணம் கும்பேஸ்வரர் மற்றும் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற்று தற்போது திருச்சிக்கு வரவுள்ளது.
திருச்சியில் மஹாசிவராத்திரி விழா!
கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

ஆதியோகி ரதம்
ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.
ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.
சிவ யாத்திரை
இதனுடன், 'சிவ யாத்திரை' எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.
- தவெக நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
- காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையைக் கண்காணித்து வருகிறது.
சம்பவம் நடந்தபோது சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கமளித்திருந்தார்.
ஆனால், காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், சிபிஐ தனது விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது ஆயுதப்படை டிஜிபி-யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சிபிஐ தனது விசாரணையை நடத்தி வருகிறது.
- தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
- தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPIM வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும்.
2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். (கடிதமும், ஆய்வுக்குழு குறிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17. 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும். தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே. ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும். பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24,25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும். 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.
அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடந்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இதனிடையே மகாலட்சுமி (35) என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர்.
மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






