என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசார குழுவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.

    தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

    1. N.ஆனந்த்

    2. ஆதவ் அர்ஜுனா B.A.

    3. K.A.செங்கோட்டையன்

    4. A.பார்த்திபன்

    5. B.ராஜ்குமார் DME

    6. K.V.விஜய் தாமு

    7. S.P.செல்வம் DCE

    8. K. பிச்சைரத்தினம் கரிகாலன்

    9. M.செரவு மைதின் (எ) நியாஸ்

    10. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.

    மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
    • பொங்கலை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதாலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாலும் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை ஒட்டி மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மெட்ரோ ரெயில் சேவை குறைக்கப்பட்டது. இன்றும் நாளையும் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    மேலும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதாலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாலும் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

    • பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    வண்டலூர்:

    காணும் பொங்கல் விழா நாளை (17-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்கா, கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்களுக்கு குடும்பத்துடன் சென்று தயார் செய்து கொண்டு வந்த உணவு பொருட்களை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம்.

    இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் ஏராளமானோர் வண்டலூர் பூங்காவில் குவிந்தனர்.

    பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தனித்தனியாக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவிற்கு செல்ல 10 கூடுதல் பஸ்கள், பார்வையாளர்களின் வசதிக்காக மின்னணு நுழைவுச்சீட்டு வழங்கும் முறை, பார்வையாளர்கள் கியாஸ்க், வாட்ஸ்அப் இணையதளம் மற்றும் வண்டலூர் பூங்கா மொபைல் செயலி மூலம் நுழைவுச் சீட்டு பெற இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. மேலும், பணமாகவும் டிக்கெட் வாங்க ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுகிறது.

    பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், கரும்பு, பீடி, சிகரெட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பூங்காவிற்குள் கொண்டு வர அனுமதி இல்லை. நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பினர். பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 65 வனத்துறை பணியாளர்கள் மற்றும் 60 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மாற்றுத்திறனாளி பார்வையாளர்களின் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி மற்றும் அவர்களுக்கு ஏற்ற நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் கூடுதல் தகவல் பலகைகள் மற்றும் திசை குறிப்பு பலகைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. 4 புதிய கழிப்பறை வளாகங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.

    பூங்காவில் புதிதாக பிறந்த நீர்யானை, இந்திய காட்டு மாடு, சதுப்புநில மான், வெளிமான், கடமான், அனுமன் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு, நெருப்புக் கோழி மற்றும் அனகோண்டா பாம்புகள் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கிறது. தினமும் மாலை 4 மணிக்கு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், பார்வையாளர்களுக்காக 7 டி திரையரங்கு இயக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    • கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.
    • தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் அதலாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்யநாராயணா (வயது62). இவரது மனைவி ரமா (வயது 60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். இதில் கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக தண்ணீர் கேன் ஏற்றி வந்த டெம்போ இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் இருவரின் உடலும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது.
    • அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன்.

    பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றியது தொடர்பாக யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மேலிடம் விளக்கம் அளிக்காமல் உள்ளனர். இந்த நிலையில், அண்ணாமலை மாற்றப்பட்டு அரசியல் யுக்தி என்று ஆடிட்டர் குரூமூர்த்தி பேசியுள்ளார்.

    'துக்ளக்' நாளிதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-

    அண்ணாமலை பொறுத்தவரை அது பா.ஜ.க.வின் முடிவு. அண்ணாமலையும், பா.ஜ.க.வும் சேர்ந்து தான் முடிவு எடுத்துள்ளார்களே தவிர அண்ணாமலையை கலக்காமல் எதையும் எடுக்கலை. காரணம் என்னவென்றால் பா.ஜ.க.வால் மட்டும் தனியாக தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்கிற நிலைமை இருப்பதினால்.

    எடப்பாடி எந்த விஷயத்திலும் பா.ஜ.க.வோடு நெருங்ககூடாது என்று 2024-ல் அவர் எடுத்த முடிவை அவர் மாற்றிக்கொண்டு பா.ஜ.க. ஒத்துழைக்க வந்திருப்பதானால் தான் இன்னிக்கு தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. எல்லாமே ஐடிலிசம் கிடையாது. பா.ஜ.க. தனியாக நின்று 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்று வெற்றி பெறும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 10 ஆண்டு தி.மு.க. இருக்கும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்ள முடியாது.

    தி.மு.க. போயே ஆக வேண்டும் என்றால் அதற்கு உண்டான யுக்திகளை தயார்படுத்த வேண்டும். அமித்ஷாவை விட இதைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. 2014-ல் மகாராஷ்டிரா தேர்தலின் போது உத்தவ் தாக்கரே என்கிட்ட போன் செய்து கேட்கிறார். அமித்ஷா எங்க இருக்காரு சார் என்னால பார்க்கவே முடியலை சார் என்று. அப்போ மாட்டுங்காவில் ஒரு சின்ன வீட்டில் இருந்தார் அந்த சமயத்தில். அங்கிருந்து தான் யுக்திகளை கையாண்டு பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது. அதனை அப்படியே மாத்தினார் அமித்ஷா. இன்றைக்கு பா.ஜ.க. மகாராஷ்டிராவை கைப்பற்றி இருக்கிறது என்றால் அன்னிக்கு அவர் எடுத்த யுக்தி. அதனால் அவருக்கு தெரியும். சில பேருக்கு அந்த அஸ்ட்ராலானி என்று கூறுவார்கள். அதாவது எல்லாவிதமான திறமையும் இருக்கும். அந்த மாதிரி திறமை உள்ளவர். தமிழ்நாட்டை கையில் எடுத்து இருக்கார். நம்பிக்கையுடன் இருங்கள். அண்ணாமலையும் அவருக்கு ஒத்துழைப்பார். அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன். அதனால அண்ணாமலைக்கு எதிராக ஏதோ ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு பேசுவது தவறு என்று கூறினார். 

    • சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.25 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து முன்கூட்டியோ அல்லது குறிப்பிட்ட நாளிலோ தண்ணீர் திறப்பது வழக்கம். ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி நிறுத்தப்படும்

    இதே போல் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தொடர்ந்து அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த ஆண்டு தண்ணீர் அதிகளவில் வந்ததால் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பாசனத்தேவை நிறைவடைந்ததை அடுத்து நேற்று மாலை 6 மணி முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதுவரை ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று வரை 199 நாட்களுக்கு 8.6 டி.எம்.சி, தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.25 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 61.33 டி.எம்.சி, தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுவதையொட்டி போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    இந்நிலையில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பதற்காக நடிகர் சூரி வந்து இருந்தார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, காளை உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. வெற்றி பெறும் காளை உரிமையாளருக்கு டிராக்டர், கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு வழங்கப்படுகிறது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை நடிகர் சூரி பரிசளித்து சிறப்பித்தார்.

    • தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது.
    • விவசாயிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக்கின் நினைவாக அவருக்கு தமிழக அரசு தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் நினைவு மணி மண்டபமும், அவருடைய முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மணி மண்டபத்திற்கு தேனி மாவட்ட பகுதி மக்கள் மட்டும் இன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். அவருடைய 185-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங், தங்க தமிழ்செல்வன் எம்.பி. ஆகியோர் தலைமையில் பென்னிகுவிக் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக லோயர்கேம்ப்பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பென்னி குவிக் மணிமண்டபம் வரை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து வண்டியை ஓட்டி வந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கதிரவன், திட்ட இயக்குனர் சந்திரா, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி ,கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை, சுகாதார அலுவலர் விவேக், தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதே போல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் சையதுகான், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், நமது வெற்றி கழககட்சி நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா, த.வெ.க. கட்சி, மின்வாரிய குடியிருப்புபகுதியினர், கம்பம் பள்ளத்தாக்குபாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம், பார்வர்டு பிளாக் கட்சி, நாம்தமிழர் கட்சி, பா.ஜ.க கட்சியினர், பாரதிய கிஷான் சங்கம், முல்லை சாரல்விவசாயிகள் சங்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர்உட்பட விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்துமாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

    விவசாயிகள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். கடந்த 2019ம் ஆண்டு முதல் பென்னி குவிக்கின் பிறந்தநாள் விழாவினை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

    இதையொட்டி கூடலூர் நகராட்சி சார்பில் மணிமண்டபம் முன்பு மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் கரகாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், பரதநாட்டியம், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்பட தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்பு துறை, சுற்றுலா துறை மற்றும் கூடலூர் நகராட்சியினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பென்னி-குவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதையொட்டி தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

    • தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திய பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது.
    • மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மாலை நேர மின் தேவையை சமாளிப்பதற்காக 1553 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாகவும், அந்த அளவு மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.8.50 முதல் ரூ.9.50 வரை விலை கொடுத்து வாங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும்.

    திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறையவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி மாநிலத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு மெகாவாட் அளவுக்கு கூட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

    கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை 13,860 கோடி யூனிட் எனும் நிலையில், அதில் 80.66 விழுக்காடான 11 ஆயிரத்து 179 கோடி யூனிட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பு, தனியார் மின் நிறுவனங்கள், மின்சார சந்தைகள் ஆகியவற்றிடம் இருந்து தான் மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது. இவ்வாறு வாங்குவதற்காகவே மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திய பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. காரணம்.... தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது தான். மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது. சந்தை சராசரி விலையைக் கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே 1553 மெகாவாட் மின்சாரத்தையும் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது.
    • ஒரு குழுவினர் குறைந்த பட்சம் 4 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    திருச்சி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் விழாவை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு நிரந்தரமான வாடிவாசல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரியுடன் கூடிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

    இதனை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரிய சூரியூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மைதானத்தில் முதல் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மொத்தம் 800 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். கால்நடைத்துறை சார்பில் காளைகளை பரிசோதனை செய்ய 40 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

    போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது. ஒரு குழுவினர் குறைந்த பட்சம் 4 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கின.

    முதன்முதலாக கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு போட்டியில் பங்கேற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் திமில்களை பிடித்து அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, டிரஸ்சிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஜல்லிக்கட்டுபோட்டியில் அதிக காளையை அடக்கும் வீரருக்கு முதல் பரிசாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்படுகிறது.

    திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதாலும், பிரமாண்ட புதிய மைதானத்தில் நடைபெறுவதாலும் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். கேலரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இன்னும் பலர் தங்களது வீடுகளின் மாடிகளிலும், மரங்களிலும் நின்று ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். 

    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி 306 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 306 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320

    14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360

    12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960

    11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-1-2026- ஒரு கிராம் ரூ.310

    14-1-2026- ஒரு கிராம் ரூ.307

    13-1-2026- ஒரு கிராம் ரூ.292

    12-1-2026- ஒரு கிராம் ரூ.287

    11-1-2026- ஒரு கிராம் ரூ.275

    • பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.
    • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு வழங்கினார்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    * பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.

    * தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கினார்.

    * திருவள்ளுவர் விருதை மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கினார்.

    * அம்பேத்கர் விருதை சிந்தனைச்செல்வனுக்கு வழங்கினார்.

    * காமராஜர் விருதை எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கினார்.

    * பாரதியார் விருதை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கினார்.

    * பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் யுகபாரதிக்கு வழங்கினார்.

    * தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு வழங்கினார்.

    * முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை சு.செல்லப்பாவுக்கு வழங்கினார்.

    * இலக்கிய மாமணி விருது (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கு வழங்கினார்.

    * இலக்கிய மாமணி விருது (ஆய்வுத்தமிழ்) சி.மகேந்திரனுக்கு வழங்கினார்.

    * இலக்கிய மாமணி விருது (படைப்புத்தமிழ்) இரா.நரேந்திரகுமாருக்கு வழங்கினார்.

    விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ×