என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியசூரியூர் புதிய மைதானத்தில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வரிந்து கட்டிய மாடுபிடி வீரர்கள்
- வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது.
- ஒரு குழுவினர் குறைந்த பட்சம் 4 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருச்சி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் விழாவை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு நிரந்தரமான வாடிவாசல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரியுடன் கூடிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
இதனை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரிய சூரியூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மைதானத்தில் முதல் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மொத்தம் 800 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். கால்நடைத்துறை சார்பில் காளைகளை பரிசோதனை செய்ய 40 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது. ஒரு குழுவினர் குறைந்த பட்சம் 4 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்கின.
முதன்முதலாக கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு போட்டியில் பங்கேற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் திமில்களை பிடித்து அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, டிரஸ்சிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஜல்லிக்கட்டுபோட்டியில் அதிக காளையை அடக்கும் வீரருக்கு முதல் பரிசாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதாலும், பிரமாண்ட புதிய மைதானத்தில் நடைபெறுவதாலும் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். கேலரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இன்னும் பலர் தங்களது வீடுகளின் மாடிகளிலும், மரங்களிலும் நின்று ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.






