என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
    • சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.

    சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

    முதற்கட்டமாக, மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை நுழைவு வாயிலில் ஒரு டிஜிட்டல் பலகை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மற்ற 100 இடங்களிலும் இந்தப் பலகைகளைப் பொருத்தும் பணிகள் 2026 பிப்ரவரி இறுதிக்குள் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன. இதில் காற்றின் தரம், பி.எம் 2.5, பி.எம் 10, நச்சு வாயுக்களின் அளவு, காற்றின் வேகம், வெப்பநிலை மற்றும் மழை அளவு உள்ளிட்ட 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும்.

    இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் இயக்கப்படுகிறது. அதாவது, இந்தத் திரைகள் தினமும் 15 மணிநேரம் செயல்படும். இதில் இரண்டு மணிநேரம் அரசு அறிவிப்புகள் மற்றும் காற்றின் தர விவரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 13 மணிநேரம் வருவாயை ஈட்டுவதற்காக வணிக ரீதியான விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும். 

    • சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.
    • பெரும்பாலும் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் 1270 ஆம் ஆண்டு காளிங்கராயன் கால்வாயை வெட்டத் தொடங்கினார். சுமார் 12 ஆண்டுகள் கழித்து கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்தது.

    ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயர் பாளையத்தில் தொடங்கிய பணி ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது.

    காலிங்கராயர் கால்வாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பகுதியில் பெரும்பாலும் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காலிங்கராயருக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சந்திரகுமார் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காலிங்கராயர் சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயர் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்கு பெறுபவர்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகம் காளிங்கராயர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் அறிவிப்புகள் போல கானல் நீர் அறிவிப்புகளாக மாறிவிடக் கூடாது.
    • காளைகளுக்கு சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பயிற்சி மையம்.

    தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, தி.மு.க. அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் அறிவிப்புகள் போல கானல் நீர் அறிவிப்புகளாக மாறிவிடக் கூடாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 தை மாதம் முடிவதற்குள் முதல் கட்டமாக இந்த ஆண்டின் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    அலங்காநல்லூர் பகுதியில், காளைகளுக்கு சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் அறிவிப்புகளையும் உடனடியாக அறிவித்தபடி உண்மையுடன் நேர்மையுடன் செயல்படுத்த வேண்டும்.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் வாக்கு வங்கி அரசியலுக்காக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததை இந்தாண்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    23-ந்தேதி கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    24-ந்தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 19-20° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 19-20° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
    • அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர்.

    கோவை:

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத்தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணத்திட்டம் செயல்படுத்தப்படும் என பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அதில் இடம் பெற்று இருந்தன.

    இதற்கிடையே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக அந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று கோவை வந்தனர். கோவை காளப்பட்டி ரோடு சுகுணா கலையரங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள், தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், தாமோதரன், செ.ம.வேலுசாமி, வைகைசெல்வன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டனர்.

    பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

    • எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
    • யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதை போல் மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று தி.மு.க. கூறியுள்ளது என்று சொன்னார்.

    உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர், இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது என்பதை அறியலாம்.

    எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.

    ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது. எனவே கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் அதனை உடைக்க முடியாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது, அந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். தற்போதும் அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார். அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.

    வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டி.டி.வி.தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்றார். 

    • இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது.
    • சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3-ந்தேதி வழங்கப்பட்டது. நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும்.

    இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.

    சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

    செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், பயன்பாட்டில் இருக்கும் நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை கலக்காது வழிவகுத்தல் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தாலே அதிக அளவில் நன்னீரைச் சேமிக்க முடியும். உப்பங்கழிகளை அழிக்காமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம். வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது.

    16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச் செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது.

    நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று முதலே வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு வருகின்றனர். இன்றும் அதிகாலை முதலே ரெயில்களிலும், பஸ்களிலும் செல்ல தொடங்கி உள்ளனர்.

    இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், வழியாகவும் இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே ரெயில்களில் இருக்கை நிரம்பி விட்ட நிலையில், புதிதாகவும் சிறப்பு ரெயில்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அவையும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. நேற்று அந்தியோதயா ரெயிலில் ஏற்கனவே பெரும்பாலான இருக்கைகள் நிரம்பியதால், நடைபாதை, படிக்கட்டு அருகில் ஏராளமானவர்கள் அமர்ந்தும், நின்றும் பயணம் செய்தனர். இன்றும் காலையிலேயே வந்த ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச்சென்றனர். இன்று மாலை இயக்கப்படும் அந்தியோதயா ரெயிலில் இடம் பிடிக்கவும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலு பயணிக்கவும் காலை முதலே ரெயில் நிலையத்தில் வரிசை போட்டு பயணிகள் இடம் பிடிக்க காத்திருந்தனர்.

    இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் நேற்று இரவு முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு புறப்பட்ட பஸ்களில் ஏராளமானோர் போட்டிப்போட்டு ஏறி பயணம் செய்தார்கள். மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சாா்பில் நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.

    பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலைய போலீசார் பஸ் நிலைய நடைமேடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒலிப்பெருக்கு மூலமாகவும் பயணிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருந்தது. 

    • மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம்.
    • தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

    * புத்தக வாசிப்புக்காக பல சிறப்பான முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

    * புத்தக வாசிப்பு மூலம் தமிழக இல்லங்களில் அறிவு தீ பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * பழமைகளை பொசுக்கி தமிழகத்தை பண்படுத்தியது திராவிட இயக்கம்.

    * புத்தக திருவிழாவில் மொழிபெயர்ப்புகள், பதிப்பக பரிமாற்றம் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சியில் 4-வது ஆண்டாக பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடத்தப்படுகிறது.

    * மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம்.

    * தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு.

    * உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும்.

    * சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    * கலைத்துறையில் அரசியல் தலையீடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    * தமிழக அரசின் சார்பில் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் தேசிய அளவில் விருது வழங்கப்படும்.

    * செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்படும் என்றார். 

    • கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.
    • பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அப்போது அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து விஜயிடம் மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்த நிலையில், பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி அடுத்த நாட்களில் ஆஜராக விஜய் விலக்கு கேட்டு இருந்தார். இதை ஏற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், நாளை சி.பி.ஐ. விசாரணைக்காக ஆஜராக உள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நட்சத்திர விடுதி ஒன்றில் விஜய் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!
    • தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?

    நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது "காப்பி அடிக்கிறாங்க மிஸ்" என்று அஇஅதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

    எது ஒரிஜினல்? எது காப்பி?

    அம்மா மருந்தகம் ஒரிஜினல்- முதல்வர் மருந்தகம் காப்பி!

    அம்மா மினி கிளினிக் ஒரிஜினல்- மக்களைத் தேடி மருத்துவம் காப்பி!

    தாலிக்கு தங்கம் ஒரிஜினல்- அதை உல்டா செய்தது தானே புதுமைப் பெண் திட்டம்?

    இப்படி அடுக்கிக் கொண்டே போனால், திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!

    மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்!

    ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்?

    மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அஇஅதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாக தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1500/- என அறிவித்தோம்!

    மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய "டூப்" முதல்வர் ஸ்டாலினின் அரசு, வேறென்ன செய்து கிழித்தது?

    திமுக அரசின் மாதம் ஆயிரம் ரூபாயே, அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, 28 மாதம் லேட்டா தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது? அதையும் இன்று வரை, சொன்னபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கிறதா? தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?

    அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால்,

    ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி. வாய்ப்பு ஒன்று வந்தால், தான் கட்டியிருக்கும் வேட்டியை கழற்றி விட்டு, வேறொரு வேட்டிக்கு தாவி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொள்ளக் கூட தயங்காத இந்த ரகுபதி எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி பேசலாமா?

    இன்னொருவர் டி.ஆர்.பி. ராஜா. பாக்ஸ்கான் துணை கம்பெனி என்று சட்டமன்றத்திலேயே கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டியவர் தானே இவர்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தான்டா வளர்ச்சி..." என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுக-வினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெச்சல்!

    நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே...

    இன்னும் 2 மாசம் தான்!

    Tic Toc Tic Toc...

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அட்டவணைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.
    • தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

    4 லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது 2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக 2026-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை வெளியிடவில்லை. ஆசிரியர் பணிக்கு செல்லத் துடிக்கும், ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது தான் அந்தத் தேர்வுககளை எழுத விரும்புபவர்கள் திட்டம் வகுத்து தயாராக வசதியாக இருக்கும். அதிலும் குறிப்பாக 2026-ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்பதாலும் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.

    இவ்வளவு அதிக தேவைகள் இருந்தும் கூட, 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாதது அதன் அலட்சியத்தையும், பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் இந்த அலட்சியம் பல்வேறு தரப்பினருக்கு மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய 1205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும், நவம்பர் மாதம் வெளியிடப் பட்டிருக்க வேண்டிய 51 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை. இதனால் அந்தப் பணிகளுக்காக காத்திருந்த ஆசிரியர் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்களை விட, 2011-ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்து தகுதித் தேர்வை நிறைவு செய்யாதவர்கள் தான் 2026ஆம் ஆண்டு போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு அட்டவணைக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.

    கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அதனால், 2011-ஆம் ஆண்டுக்கு முன் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த 4 லட்சம் ஆசிரியர்கள் பணியில் நீடிக்கும் தகுதியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன்.

    ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மாறி, மாறி முடிவெடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 4 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி பேச்சு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதன்படியே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதன்பின்னர் நிலையை மாற்றிக் கொண்ட தமிழக அரசு, 2026-ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2026 ஜனவரி 24, 25 ஆகிய சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால், அறிவிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது. இது ஆசிரியர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    அடுத்த 6 நாள்களில் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்யும் வகையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் 23-ஆம் பிரிவில் திருத்தம் செய்யும்படி கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆசிரியர்களின் நலன்களை பாதுகாக்கும் விஷயத்தில் 3 முறை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட திமுக அரசு, அவற்றில் எந்த நிலைப்பாட்டையும் சாத்தியமாக்க துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கும் உண்மையாகும்.

    ஆசிரியர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டும், சிறுநீரகத் திருட்டு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகளை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்த வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்த திமுக அரசு, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்றுடன் 110 நாள்களாகியும் அதை விசாரணைக்கு கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின் 53 நாள்களாகியும் எந்த தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எளிமையான பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் சிறப்புத் தகுதித் தேர்வை நடத்தியிருந்தால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் பணிகளை உறுதி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், எந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்காமல் ஆசிரியர்களின் எதிர்காலத்தை இருளிலேயே திமுக அரசு வைத்திருக்கிறது.

    திமுக அரசின் அதிகாரம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரப்போகிறது. ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, திமுக அரசுக்கு 6 மாதப் பதவிக்காலம் மீதமிருந்தது. அந்தக் காலத்தில் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க திமுக அரசு எதேனும் நடவடிக்கை எடுக்கும் என்று ஆசிரியர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை திமுக அரசு இதுவரை காப்பாற்ற வில்லை. நம்பிய ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டு விடாமல், எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூட சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×